|
4.6
ஒப்புரவறிதல்
|
‘ஒப்புரவு‘
என்றால் ‘உலக ஒழுக்கம்‘ என்று பொருள். ஊராருடன்
ஒத்து வாழ்தல்; தனது செல்வத்தைப் பிறருக்குப்
பகிர்ந்து
கொடுத்தல் ஆகிய வாழும் நெறி என்பர். பொதுவாகப் பிறருக்குப்
பயன்பட்டு வாழும் நெறியையே ‘ஒப்புரவறிதல்‘ என்று வள்ளுவர்
குறிப்பிடுகிறார். ஊருடன் ஒத்து வாழ்வது,
தமிழர்களின்
பண்பாட்டுத் தன்மை.
ஒப்புரவாளன்
யார்? ஒப்புரவாளனின்
தன்மைகள்
எப்படிப்பட்டவை என்பன வற்றைப் பல எடுத்துக் காட்டுகள்
மூலம் வள்ளுவர் விளக்குகிறார்.
|
4.6.1 செல்வந்தனும் ஊருணியும்
|
ஊரில்
உள்ள குளம் பிறருக்குப் பயன்படும். அதன் தன்மையை,
ஒப்புரவாளரின் தன்மையுடன் ஒப்பிட்டுச் சொல்கிறார் வள்ளுவர்.
இன்றைய
அளவுக்கு, நவீன வசதிகள் வளராத காலத்தில், ஊரில்
அமைந்திருக்கும் குளமே, மக்களுக்குப் பல நிலையில் பயன்படும்.
குளத்தில் நீர் அருந்துவார்கள்; ஆடு மாடுகளும் நீர் அருத்தும்.
இரவு, பகல் என்ற வேறுபாடு இல்லாமல் அந்தக் குளத்திற்கு,
எப்பொழுது சென்றாலும் நீர் அருந்தலாம், நீர் அருந்துவதில்
வேறுபாடு இல்லை. வேண்டியவர், வேண்டாதவர் இல்லை. யார்
வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானலும் அவர்கள்
தேவைக்கு ஏற்பச் சென்று அருந்தலாம்.
இத்தகைய
குளத்தைப்போல் உலக மக்களை விரும்பி, அவர்களுக்கு உதவி
செய்பவன் ஒப்புரவாளன் என்கிறார் வள்ளுவர்.
|
ஊருணி
நீர் நிறைந்தற்றே உலகு அவாம்
பேர் அறிவாளன் திரு.
|

(குறள் : 215)
|
|
(ஊருணி = குடிநீர்க்குளம், நீர்ஊற்று, (கிணறு என்றும்
பொருள்கொள்வர்) அவாம் = விரும்பும், திரு = செல்வம்)
உலகிலுள்ள
பிறஉயிர்களிடம் அன்புசெலுத்தி, ஒப்புரவு
செய்பவனது செல்வம், ஊரில் வாழ்வோரின் குடிநீர்க்குளம்
நிறைந்ததற்கு ஒப்பாகும். எனவே இல்வாழ்வான், ஊரிலுள்ள
குடிநீர்க்குளம் போல் பிறருக்கு எப்பொழுதும் உதவ வேண்டும்
என்கிறார் வள்ளுவர்.
|
4.6.2 செல்வந்தனும் மருந்தும்
|
வாழை
மரத்தை வீடுகள் தோறும் விரும்பி
நடுவார்கள்.
நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சிப் பாதுகாப்பார்கள்.
காரணம்
என்ன?
வாழை
மரம் சுவையான பழத்தைக் கொடுக்கும். அது மட்டுமா?
வாழை மரத்தின் எல்லாப் பகுதிகளும் மக்களுக்குப் பயன்படும்.
இலையைச் சாப்பிடப் பயன்படுத்தலாம். பூவையும் சமைக்கலாம்.
அதன் காயைக் கூட சமைக்கலாம். அதன் தண்டும் பயன்படும்.
தண்டிலிருந்து உரிக்கப்படும் நாரும் பயன்படும். மேலும் இவை
மருந்தாகவும் பயன்படுகின்றன. அதன் எல்லா உறுப்புகளும்
மக்களுக்குப் பயன்படுகின்றன. வாழை மரத்தைப்போல் ஒருவன்
வாழ்வானானால் அவனால், அவன் குடும்பம் மட்டுமல்ல, அவன்
சார்ந்த சமுதாயமும் பயன்பெறும். இவ்வாறு தப்பாமல் எல்லா
உறுப்புகளும் பயன்படும் மரம்போல், இல்வாழ்வான்
இருக்க
வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதனை,
|
மருந்து
ஆகித் தப்பா மரத்தற்றால் - செல்வம்
பெருந்தகையான் கண் படின்.
|

(குறள்: 217)
|
|
(மரத்தற்றால் = மரத்தைப்போன்றது, கண் = இடம்,
படின் = சேர்ந்தால்)
எனும்
கூறளில் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
செல்வம்,
ஒப்புரவு செய்யும் பெருந்தகையாளனிடம் சேருமானால்,
வேர் முதல் கொழுந்து வரை, எல்லா உறுப்புகளும், உணவாகவும்,
மருந்தாகவும் பயன்படும் மரத்தைப் போல்,
பயன்படும்.
இல்வாழ்க்கையில் ஈடுபடுபவனது செல்வமும், தப்பாமல், மருந்து
போன்று பிறருக்குப் பயன்படவேண்டும். அல்லது ஒப்புரவாளனின்
செல்வம்போல், இல்வாழ்வான் பிறனுக்குப் பயன்படவேண்டும்
என்று கருதுகிறார் வள்ளுவர்.
‘மருந்து‘
என்ற சொல்லை ஏன் பயன்படுத்தவேண்டும்? மருந்து,
நோய், காயம் ஆகியவற்றைக் குணப்படுத்தும் ஒருபொருள்.
அதாவது நோய் என்னும் துன்பத்திலிருந்து
ஒருவனை
விடுவிக்கும் ஒன்று.எனவே, ஒப்புரவாளன் செல்வம் மருந்துபோல்
பயன்படவேண்டும் என்று குறிப்பிட்டார். ஒப்புரவாளின் செல்வம்
போல், இல்வாழ்வான் பயன்படவேண்டும் என்கிறார் வள்ளுவர்.
|
|