|
6:1
நட்பு என்பது என்ன? |
E
|
|
நட்பைப்
பற்றிப் பலர், பலவிதமான
விளக்கங்களைக்
கூறியிருக்கலாம். ஆனால் வள்ளுவர் கூறும் விளக்கம்
மிகவும்
எளிமையானது. அதையும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் ஒரு
சிறு அனுபவத்தைக் கூறியே விளக்கியுள்ளார்.
எத்தகைய
அனுபவம்?
ஒருவனது
உடலின் மானத்தை மறைப்பது அவன் அணிந்திருக்கும்
ஆடை. அந்த ஆடை, அவன் உடலை விட்டு
நழுவினால்
என்ன நிகழும்? அவனை அறியாமலே அவனது கை விரைந்து
சென்று அவனது மானத்தைக் காப்பாற்றும்.
இது
ஒவ்வொருவருக்கும் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் ஒரு
சிறிய நிகழ்ச்சி. இதையே நட்புக்கு உரிய இலக்கணம் என்கிறார்
வள்ளுவர். அது எப்படி?
|
உடுக்கை இழந்தவன் கைபோல,
ஆங்கே
இடுக்கண் களைவது ஆம் நட்பு.
|

(குறள் எண் : 788)
|
|
(உடுக்கை = ஆடை; இடுக்கண் = துன்பம்)
- என்பது வள்ளுவர் நட்புக்கு கொடுக்கும் விளக்கம்.
|
இடுப்பிலுள்ள ஆடை நழுவி விட்ட ஒருவனது கை
அவனை
அறியாமலே உடனே விரைந்து சென்று அவனது மானத்தைக்
காப்பாற்றும். அதைப்போல, நண்பனுக்குத் துன்பம்
வந்ததை
அறிந்த அந்தக்கணமே, அவன் அறியாமலே,
அவனது
அழைப்பிற்குக் காத்திராமல், விரைந்து சென்று அவன் துன்பத்தை
நீக்குவதுதான் நட்பு, என்பது இக்குறளின் கருத்து.
இது தான்
நட்புக்கு வள்ளுவர் கூறும் இலக்கணம்.
|
6:1:1
எது உண்மையான நட்பு?
|
வாழ்க்கையில்
நம்மோடு பழகுபவர்கள் எல்லாம் நண்பர்களா?
இல்லை, நம்மை அடிக்கடி சந்தித்து, முகமலர்ச்சியுடன் நம்மை
வரவேற்று, அன்போடு நம்மிடம் பேசி விட்டாலே
அவர்கள்
நண்பர்கள் ஆகிவிடமாட்டார்கள். எனவே தான் வள்ளுவர், எது
உண்மையான நட்பு எது போலியான நட்பு என்பதைப்
பற்றி
எச்சரிக்கை செய்கிறார். இயந்திரமயமாக இயங்கிக் கொண்டிருக்கும்
இந்தக் காலக்கட்டத்தில், சூழலாலும்,
பணியாலும், பலரோடு
பழகுகிறோம். சிலரோடு உள்ள பழக்கம்,
ஒரு தடவையோடு
முடிந்துவிடும்; நாமும் பழகியவரை மறந்து விடுவோம். சிலரோடு
உள்ள பழக்கம் தொடரும். பலமுறை சந்தித்துப் பேசிப் பழகியபின்,
ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டபின்னர், அவரது பண்புகள்
நமக்குப் பிடித்து இருந்தால் அவரோடு நட்புக்கொள்ளுவோம்.
இரயிலில்
பயணம் செய்யும் போது, சக பயணிகளிடம்
(Co-
passengers) சிறு நட்பு மலர்கிறது.
அது பயணத்துடன்
முடிந்துவிடும். பணி செய்யும் இடங்களில் சூழலின் காரணமாகச்
சிலரோடு நட்புக்கொள்ளுகிறோம். பணி முடிந்ததும் அந்த
நட்பு
தொடர்வதில்லை. பணியிடம் மாற்றல் ஆனால், பழைய
நட்பு
மறந்து, புதிய இடத்தில் புதிய சூழலுக்கு ஏற்ப,
புதிய நட்பு
அமையும். இவ்வாறு அமையும் உறவை எல்லாம் கடந்து ஒரு நட்பு ஏற்படும். அத்தகைய
நட்பில் கூட, நாம் நன்கு சிந்தித்துச்
செயல்பட வேண்டும். நன்கு ஆராய்ந்து அறிந்த
பின்னரே
அந்த நட்பைப் பற்றி முடிவெடுக்க முடியும். அப்பொழுதுதான்
உண்மையான நட்பு ஏ ற்படும் என்கிறார் வள்ளுவர்.
மனம்
ஒன்றுபடாமல் ஒருவரை ஒருவர் பார்த்த உடனே, முகத்துக்கு
முகம் வெளியே சிரித்துப் பேசி விட்டாலே, அது நட்பு ஆகாது.
அத்தகைய உறவை நட்பு என்று நம்பி விடாதீர்கள்;
இரு
நெஞ்சங்கள் ஒன்றுபட்டு மகிழும்படி பொருந்துகின்ற உறவுதான்
உண்மையான நட்பு என்கிறார் வள்ளுவர்.
|
முகம் நக நட்பது நட்பு அன்று
நெஞ்சத்து
அகம் நக நட்பது நட்பு.
|

(குறள் எண்: 786)
|
|
(நக = நகை செய்யுமாறு, புன்னகைக்குமாறு; நட்பது
= பழகுவது,
நட்பு பாராட்டுவது)
|
கோப்பெருஞ்சோழன் என்னும் மன்னனும்,
பிசிராந்தையார் எனும் தமிழ்ப் புலவரும்
நண்பர்கள். ஆனால் இருவரும் ஒருவரை
ஒருவர் நேரில் சந்தித்து, முக
நக
நட்புக்கொள்ளவில்லை. இருந்தாலும்
ஒருவரது இயல்பை இன்னொருவர் அறிந்து
உள்ளம் (அகம்) மகிழ்ச்சி அடையும்படி
நட்புக் கொண்டிருந்தனர். அக்காலத்தில்
|
 |
காட்சி |
|
சமண சமயப் பழக்கங்களை மக்கள் பின்பற்றினர். அவ்வழக்கப்படி
வாழ்க்கையில் நிறைவு எய்திய ஒருகட்டத்தில் உயிரைத்
துறந்து
இறைவனடி சேர விரும்புவோர் வடக்கு நோக்கி
அமர்வர்;
உணவைத்தவிர்த்து, உயிர் விடுவர். இப்பழக்கம் ‘வடக்கிருத்தல்’
எனப்பட்டது. அவ்வழக்கப்படி கோப்பெருஞ்சோழன் உண்ணா
நோன்பு கொண்டு இறப்பதற்குச் சென்றான்.
அப்பொழுது,
பிசிராந்தையாருக்கும், தன் பக்கத்தில் ஓர் இடம்
ஒதுக்கும்படி
சொன்னான். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த செய்தி அறிந்து,
உள்ளம் மகிழ்ந்து நட்புக் கொண்ட பிசிராந்தையாரும்
உடனே
வருவார் என்ற நம்பிக்கையால் அவ்வாறு கூறினார்.
நல்ல
நண்பர்கள் எவ்வாறு இருந்தார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக
இவ் இருவரின் நட்பைக் கூறுவர். வள்ளுவர் இத்தகைய நட்பை
அழகாக எடுத்துக் கூறுகிறார்.
|
மனம் ஒத்த இருவர் நண்பர் ஆவதற்கு அவர்கள் ஒரே
இடத்தில்
குடியிருக்க வேண்டியதில்லை. கூடிக்கலந்து பேச வேண்டியது
இல்லை; அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்துப் பழக வேண்டுவதும் இல்லை. இருவர் உள்ளமும்
உணர்ச்சியால் ஒன்றுபடின் அதுவே நட்பாகிய உரிமையை நல்கும் என்பது இக்குறளின்
கருத்து.
வெளியே
காட்டும் பாவனைகளையும், உபசரிப்புகளையும் பார்த்து
ஏமாந்து விடாதீர்கள். உண்மையான
நட்பு என்பது
உள்ளத்திலிருந்து வரவேண்டும் என்று அறிவுரை
கூறுகிறார்
வள்ளுவர். அதனோடு நிற்கவில்லை.
சிரித்துப்
பேசவும், முகம் மலர மகிழ்வதற்கும் அல்ல ஒருவரோடு
ஒருவர் நண்பராகப் பழகுவது. பண்பு
வரம்புகளை ஒருவர்
மீறும்பொழுது, அடுத்தவர் அதைக் கடிந்து திருத்துவதே நட்பின்
இலக்கணமாகும் என்கிறார் வள்ளுவர்.
|
6.1.2 நட்பின் பெருமை
|
அலக்ஸாண்டர்
போப் (Alexander
Pope) என்ற
ஆங்கிலக்கவிஞர், நட்பின் பெருமையைப் பற்றி
‘ஒவ்வொரு
நண்பனது இறப்பிலும், நாம் நம்மில் ஒரு பகுதியை, அதுவும் மிக
நல்ல பகுதியை இழந்து விடுகிறோம்’ என்று குறிப்பிடுவார். நட்பின் இத்தகைய
பெருமையை அறிந்த வள்ளுவர், நல்ல நூலைக்
கற்பதினால் கிடைக்கும் மகிழ்ச்சியுடன்
நல்லவர் நட்பை
ஒப்பிட்டுள்ளார்.
நல்ல
நூல் ஒன்றைப் படிக்கும்பொழுது மகிழ்ச்சியும், மன நிறைவும்
ஏற்படும். அதை மீண்டும் மீண்டும் படிக்கும்பொழுது,
அதன்
சிறப்பின் புதிய கூறுகள் புலப்படும். அதன் விளைவாக அந்நூலின்
மீது நமது பற்றுதல் கூடுதலாகும்.
இந்த அனுபவத்தை
நல்லவர்களோடு கொள்ளும் நட்புக்கு உதாரணமாகக் கூறுகிறார்
வள்ளுவர்.
|
நவில்தொறும் நூல்நயம்
போலும் பயில்தொறும்
பண்பு உடையார் தொடர்பு.
|

(குறள் எண்: 783)
|
|
‘நவிலுதல்’ என்ற சொல்லுக்குச் ‘சொல்லுதல்’, ‘நாவினால்
உரைத்தல்’, ‘வாசித்தல்’ என்று பொருள். ஒவ்வொரு முறை
படிக்கும் போதும், புதிய புதிய சிந்தனைகள், கருத்துகள், பொருள்
கொள்ளும் வகைகள் எனப் புதுமையை உணர்த்துவன
நல்ல
நூல்கள். ஒவ்வொரு வாசிப்பிலும் நூலின் நயமும், பெருமையும்
மிகும். அதுபோலவே பண்புடைய பெரியோரின்
சுற்றத்தை
விரும்பி, நட்பாக உறவாடும், ஒவ்வொருமுறையும் அந்தச் சுற்றத்தின்
அருமை கூடும்; அந்த உறவின் பெருமை மிகும்.
பண்புடையார்
நட்பின் பெருமை ஒருபுறம்
இருக்கட்டும்."
இப்பெருமையைச் சொல்ல வள்ளுவர்
மேற்கொள்ளும்
எடுத்துக்காட்டைப் பாருங்கள் - ‘நவில்தொறும் நூல் நயம்’! இந்த
எடுத்துக்காட்டில் அக்காலப் பண்பாட்டின் சுவடு உங்களுக்குத்
தெரிகிறதா?
அச்சு
வடிவம் கண்டிராத காலம். நூல்களை ஏட்டுச் சுவடிகளிலும்,
செய்திகளைக் கல்வெட்டுகளிலும் வழங்கிக் கொண்டிருந்த காலம்.
ஏட்டுப் பிரதிகள் அரிது. அவற்றைப் பிரித்துப் படிப்போர் அரிது.
ஒருவர் உரக்கப் படிக்கப் பிறர் கேட்டுச்
சுவைத்த காலம்.
அப்படிப்பட்ட காலத்திலேயே நூல்களைப் பயின்று, ஆய்ந்து,
அவற்றின் நயம் பாராட்டும் உயர்ந்த நிலையைத் தமிழர் பண்பாடு
எட்டியிருந்தது என்ற செய்தியைக் கவனித்தீர்களா? ஒவ்வொரு
முறை படிக்கும் பொழுதும் நூலின் புதிய
பரிமாணங்கள்
விளங்கும் உண்மையை அனுபவித்து உணர்ந்த
அறிவு
நிலையை இது காட்டவில்லையா? பழந்தமிழர் பண்பாட்டின்
உயர்விற்கு இலக்கிய வாயிலாகக்
கிடைத்திருக்கும் ஒரு
அகச்சான்று இது.
|
|