2.4 அரசனின் பழகியல் பாங்கு

அரசன் பிறரோடு, குறிப்பாக மக்களோடு பழகும்போது எத்தகைய
பண்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்று வள்ளுவர் வரையறை
செய்கிறார்.

• மாறுவேடம்
மக்களுக்கும் மன்னருக்கும் இடையில், அமைச்சர்கள், அலுவலர்கள்,
தூதுவர்கள், சேவகர்கள் போன்ற பலர் இருப்பார்கள். இவர்களைப்
பெரும் அளவில் நம்பியே மன்னன் தன் ஆட்சியை நடத்தி
வருகிறான். எனவே இவர்கள் எந்த அளவுக்கு உண்மையைக்
கூறுகிறார்கள், மக்களின் உண்மையான குறைகள் என்ன
என்பவற்றை அறிந்து கொள்வதற்காக மன்னர்கள் இரவு
நேரங்களில் மாறுவேடங்களில் சென்று உண்மையைக்
கண்டறிந்தார்கள்.


• ஆராய்ச்சி மணி

மேலும் அரண்மனைகளின்     வாயில்களில் ஆராய்ச்சிமணி
ஒன்றைக் கட்டியிருப்பார்கள். மன்னனிடம் தம் குறைகளை
முறையீடு செய்ய விரும்பும் பொது மக்கள் அந்த மணியை
அடித்த உடன், மன்னன் அவர்களை அழைத்து, அவர்கள்
குறைகளைக் கேட்டு, நீதி வழங்கினான்.

• மனுநீதிச் சோழன்
சோழ நாட்டு மன்னர்களுள் மனுநீதிச் சோழன் சிறப்புக்குரிய ஓர்
அரசன், அவனது மகன் வீதியில் தேர் ஓட்டிக் கொண்டு செல்லும்
போது, தேரின் சக்கரத்திற்குள் (wheel) அகப்பட்டு ஒரு கன்று
இறந்து விட்டது.     தாய்ப்பசு அரண்மனைக்குச் சென்று
ஆராய்ச்சிமணியை அடித்தது. உடனே மன்னன் தன் மகனை
அழைத்து வரச் சொன்னான். அவன் மீது தேரை ஏற்றி
அவனையும் கொலை செய்யஆணையிட்டான்.

தன் மகனைத் தானே கொன்ற பழிக்கு அவன் அஞ்சவில்லை.
மகனை, இழந்த அந்தத் தாய்ப்பசுவின் மனநிலையை எண்ணினான்.
அந்தத் தாய்ப்பசுவின் துயரத்திற்குக் காரணமாக இருந்தவன் யாராக
இருந்தாலும் தண்டனைக்கு உரியவன். எனவே அங்கு மன்னனுக்கு
எப்பக்கமும் சாராமல் நீதி வழங்க வேண்டும் என்ற மனநிலையே
இருந்தது. பின் விளைவுகளுக்கு அவன் அஞ்சவில்லை. எனவே,
மனுநீதிச் சோழனின் பெருமை இன்றும் பேசப்படுகிறது. இத்தகைய
நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு வள்ளுவர் மன்னன்
மக்களோடு பழகும் - தொடர்பு கொள்ளும் தன்மையைப் பற்றிக்
குறிப்பிடுகிறார்.

மக்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவன் மன்னன். எனவே மக்களின்
உண்மையான குறைகளைக் கண்டறியக்கூடிய இயல்பு மன்னனுக்கு
இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் குறைகளை
அறிந்து, அவற்றை நீக்கி, மக்களுக்குப் பாதுகாப்பாக மன்னன்
இருக்க முடியும். அதற்கு அடிப்படையாக அமைவது மக்களுக்கும்
மன்னனுக்கும் உள்ள உறவு. அந்த நெருக்கத்தை மக்கள் தாமாக
ஏற்படுத்த முடியாது. மன்னனால்தான் முடியும். எனவேதான்
வள்ளுவர், மக்கள் மன்னனை எளிதாக அணுகுமாறு காட்சிக்கு
எளியவனாக இருக்க வேண்டும். அதோடு மக்களிடம் இனிய
சொற்களைச் சொல்லும் தன்மை உடையவனாக இருக்கவேண்டும்
என்று குறிப்பிடுகிறார்.


காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்


(குறள்: 386)


(எளியன் = எளிமையானவன், கடுஞ்சொல்லன் = கடுமையான சொல்லை உடையவன், அல்லன் = இல்லாதவன், மீக்கூறும் = (உலகம்) உயர்வாகக் கூறும், நிலம் = நாடு)

மக்கள் எளிதில் பார்த்துத் தன் குறைகளைக் கூறும் அளவுக்குக்
காட்சிக்கு எளியவனாக மன்னன் இருக்க வேண்டும். எத்தகைய
சூழலிலும் மக்களின் மனம் வருந்தும்படியான கடுமையான
சொற்களைச் சொல்லக் கூடாது. அவர்கள் மனம் மகிழும்படி
இனிமையாகப் பேசவேண்டும். இத்தகைய பழகும் தன்மை உடைய
மன்னனி்ன் நாட்டை, ஏனைய நாடுகளைவிட உயர்ந்த நாடாக
உலகம் கூறும் என்கிறார் வள்ளுவர்.


2.4.1 காட்சிக்கு எளியவன்

உலகின் அரசியல் வரலாற்றில் எந்தச் சர்வாதிகாரியும் மக்களின்
அன்பைப் பெற்று, நிலையான ஆட்சியை நிறுவவில்லை.
அதற்குரிய அடிப்படை காரணம் என்ன? பொதுமக்களுக்கும்
அவனுக்கும் தொடர்பு இல்லை. பொதுமக்கள் அவனை
எளிமையாகப் பார்க்க முடியாது. தங்கள் குறைகளைக் கூற
முடியாது. சர்வாதிகார மன்னன் அல்லது தலைவனாலும் நாட்டின்
உண்மையான நிலையை அறிய இயலாது. எனவே, மக்களோடு
நெருங்கிய தொடர்பு கொண்ட மன்னனே - தலைவனே
மக்கள் மனத்தில் நிலைத்த அன்புடையவனாய்த் திகழ்கிறான்.
இந்த நடப்பியல் உண்மையை அறிந்த வள்ளுவர், அரசன்
காட்சிக்கு எளியவனாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அது
ஒரு நல்ல பண்புடையவன் என்பதையும் வெளிப்படுத்தும்
என்கிறார். இதனை,


எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு


(குறள்: 991)


(எண்பதம் = எளிய தன்மை, எய்தல் = அடைதல்,
மாட்டும்
= இடத்தும்)

என்ற குறள் மூலம் வெளிப்படுத்துகிறார் வள்ளுவர்.

எல்லோரிடத்திலும் எளிமையாகப் பழகக்கூடியவராக இருந்தால்
பண்பு உடையவராய்ச் செயல்படும் தன்மையை ஒருவன் எளிதாகப்
பெற முடியும். எனவே மன்னன் மக்களிடம் எளிமையாகப் பழகக்
கூடியவனாக, காட்சிக்கு எளியவனாக இருந்தால், ஒரு நல்ல
பண்பட்டவனாகத் திகழ்வான் என்கிறார் வள்ளுவர்.


2.4.2 இனிய சொல்லன்

ஒருவனை, அவனது நடவடிக்கைகள், இயல்புகள், பழகும் முறை,
முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவன் எத்தகைய
மனப்பக்குவம் (Maturity) உடையவன் என்பதை மதிப்பிடுவர்.
பழகும் முறை என்பது, அவன் பேசும் தன்மையில் அமைந்துள்ளது.
சிலரது இல்லத்திற்குச் செல்லும்பொழுது, இனிமையாகப் பேசி
நம்மை வரவேற்பார்கள். உணவு     அருந்தச் சொல்லி
வற்புறுத்துவார்கள். அப்பொழுது அவர்களிடம், ‘நீங்கள் சொன்ன
சொல்லே போதும். உங்கள் வீட்டில் விருந்து உண்டது போன்ற
ஓர்
உணர்வை - ஒரு நிறைவைக் கொடுக்கிறது’ என்று கூறுவோம்.
அந்த அளவுக்கு அவர்கள் பேசிய இனிய சொற்கள் நம்மை
ஈர்த்திருக்கின்றன. இனிய சொற்களைப் பேசுதலின் சிறப்பினை
அறிந்த வள்ளுவர், இனியவை கூறல் என ஓர் அதிகாரமே
இயற்றியுள்ளார். ஒரு நாட்டை ஆளும் மன்னனுக்கும் மக்களை
மகிழ்விக்கின்ற இனிமையான சொற்களைச் சொல்ல வேண்டியது
மிகவும் தேவை என்கிறார் வள்ளுவர்.

ஒருவர் சொல்லும் இனிய சொற்களைக் கேட்டவர்கள் மகிழ்ச்சி
அடைவது போல, சொன்னவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.
கேட்டவனின் முகமலர்ச்சியைக் கண்டு சொன்னவரும் மகிழ்வார்.
இவ்வாறு இனிய சொற்களைப் பேசுபவர்க்கும் கேட்பவர்களுக்கும்
மகிழ்ச்சியைக் கொடுக்கும் இனிய சொற்களை ஒருவன்
பேசவேண்டும். குறிப்பாக, தனது ஆட்சிச் சிறப்பால் மக்களை
மகிழ்விக்க எண்ணும் மன்னன் இனிமையான சொற்களைச்
சொல்ல வேண்டும். இருதரப்பினருக்கும் இன்பம் வழங்கக் கூடிய
இனிய சொற்களை ஒருவன் சொல்லாதிருப்பானானால் அச்செயல்
எத்தன்மையது என்பதனை ஓர் அழகான உவமை மூலம்
எடுத்துரைக்கிறார் வள்ளுவர்.


இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய் கவர்ந்தற்று


(குறள்: 100)


(கவர்தல் = பறித்தல், இன்னாத = துன்பம் தரும்)

தனக்கு அறமும், பிறர்க்கும் இன்பமும் பயக்கக்கூடிய இனிய
சொற்கள் எளிதாக பிறரிடம் வழங்கும் நிலையில் இருக்கிறது.
ஆனால் அவ்வாறு இருக்கும் இனிய சொற்களை வழங்காது,
தனக்குத் தீதும், பிறருக்குத் துன்பமும் தரக்கூடிய தீய சொற்களை
ஒருவன் பேசினால், அது, இனியதாகவும், உடலுக்கு நன்மை
தரக்கூடியதாகவும் இருக்காது. அச்செயல் நன்கு கனிந்த ஓர் இனிய
கனியை உண்ணாமல், ஒரு காயை உண்பது போலாகும். எனவே,
தனக்கும் பிறருக்கும் பயன் தரக்கூடிய இனிய சொற்களைச்
சொல்வது யாவர்க்கும் நல்லது. குறிப்பாக நாட்டை ஆளும்
மன்னனுக்கு மிகவும் நல்லது. இனிய சொற்களைச் சொல்லும்
மன்னனால், மக்கள் மகிழ்ச்சி அடைவதோடு நாட்டில் நன்மையும்
விளையும்.

எனவே, காட்சிக்கு எளியவனாக, எல்லோரிடமும் இயல்பாகப்
பழகும் தன்மையும், இன்சொல்லால் இனிமையாகப் பேசிப் பழகும்
இயல்பும் ஒரு மன்னனுக்கு இருக்க வேண்டும். இத்தகைய
மன்னனால் ஆட்சி செய்யப்படும் நாட்டை உலகத்தோர் மிகவும்
உயர்வாகக் கொள்வார்கள் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.