2.2 இலக்கிய வகைமை நம் உள்ளத்தில் தோன்றும் கருத்தினைப் பிறர்க்கு உணர்த்துவதற்கு மொழியைத் துணையாகக் கொள்கிறோம். நமது உள்ளத்தில் எழும் உணர்ச்சியையும், அதன் வழியாகக் கருத்தையும் உணர்த்துவதற்கு மொழியே பயன்படுகிறது. ஆனாலும், வெறுமனே கருத்தைத் தெரிவிப்பது மொழி என்றால், உணர்ச்சியோடு கலந்த கருத்தைச் செய்யுள் வடிவில் உணர்த்தும் மொழி, இலக்கியமாகும். உணர்ச்சியை உணர்த்துவது எப்படி? உண்மை வாழ்க்கையில் நம் உணர்ச்சியைத் தூண்டிய பொருளை மற்றொருவருக்களித்து அவருக்கும் அதே உணர்ச்சியைத் தூண்டி, அதேபொருளை மற்றொருவருக்களித்து அவருக்கும் அதே உணர்ச்சியைத் தூண்டும்படி செய்யலாம். எடுத்துக்காட்டாக, அழகிய தாமரைப் பூவை நாம் காணும்போது அழகுணர்ச்சி வசப்படுகிறோம் என்று கொள்வோம்; இன்னொருவருக்கு அப்பூவைக் கொடுத்து நாம் பெற்ற அழகு உணர்ச்சியை அடையுமாறு செய்யலாம். ஆனால் எந்தக் கலைகளையும், அவற்றுள்ளும் இலக்கியத்தை அவ்வாறு கொடுத்தல் இயலாது. அதற்கு வேறு வழியை மேற்கொள்ள வேண்டும். அதைத்தான் இலக்கிய ஆசிரியர்கள் இலக்கிய வடிவம் (Literary Form) அல்லது வகை என்கிறார்கள். அதன் வழியாகத்தான் கருத்தையும் உணர்ச்சியையும் விளக்க முயல்கிறார் கவிஞர். நாம் பெறும் உணர்ச்சியையே, மற்றவரும் அடைய வேண்டுமானால் நம் உணர்ச்சியைத் தூண்டிய காட்சியை நாம் கற்பனை செய்து தருதல் வேண்டும். அக்கற்பனையை அவர்கள் படிக்கும்போது நாம் அடைந்த உணர்ச்சியையே அவர்களும் அடைவார்கள். இக்கற்பனை, இலக்கிய வடிவிற்குப் பெரிய அளவிலோ சிறிய அளவிலோ இன்றியமையாதது ஆகின்றது. உணர்ச்சியைத் தூண்டுதற்குக் கற்பனையைத் தவிர வேறு பல வழிகளும் உள்ளன. தொல்காப்பியம் இம்முறைகளை இலக்கிய வகைமைகளால் நன்கு விளக்கியுள்ளது. இலக்கிய வகைமை என்பது ஒப்பீட்டுத் திறனாய்வுத் துறையில் ஒரு கோட்பாடாக உருப்பெற்றுள்ளது. இலக்கியத்தை ஒழுங்குபடுத்தும் நெறியே இவ்வகைமைக் கோட்பாட்டின் அடிப்படை ஆகும். இலக்கியத்தின் புற அமைப்பையும் (யாப்பும் அமைப்பும்) அக அமைப்பையும், (குறிப்பு, நோக்கு) அடிப்படையாகக் கொண்டு இலக்கியப் படைப்புகளை வகை செய்வது இலக்கிய வகையாகும். தொல்காப்பியத்தில் இலக்கிய வகைகளைக் கூறும் நூற்பா வருமாறு: பாட்டு, உரை, நூலே வாய்மொழி, பிசியே அங்கதம், முதுசொல் அவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயர் எல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர் (தொல். செய்யுள் இயல். 78) இதில் கூறப்படும் ஏழு வகையான இலக்கியங்கள் வருமாறு:1. பாட்டு, 2. உரை, 3. நூல், 4. வாய்மொழி (மந்திரம்) 5. பிசி (உவமையை அடிப்படையாகக் கொண்டு தோன்றும் விடுகதைப்பாட்டு வகை) 6. அங்கதம் (வசைப்பாட்டு வகை) 7. முதுசொல் (பழமொழி வகை). ஆகவே யாப்பு (இலக்கியம்) என்பது பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுமொழியாப்பு எனத் தமிழர் வழங்கும் ஏழுவகை யாப்புகளாய் வரும் என்பது கருத்து. மேலே கூறப்பட்ட ஏழுவகையான இலக்கிய உறுப்புகளுக்குரிய கூறுகளையும் தொல்காப்பியம் விளக்கியுள்ளது. அவை முப்பத்து நான்கு வகைகளாகப் பகுத்துக் கூறப்பட்டுள்ளன (தொல். 1259). அவற்றுள் முதல் இருபத்தாறு தனிப்பாட்டிற்கும், இறுதியில் கூறப்படும் எட்டும் இலக்கியம் முழுமைக்கும் உரியவையாகும். அவை எட்டும் ‘இலக்கிய வனப்பு’ எனப்படும். |