3.4 உள்ளுறை உவமமும் இறைச்சியும்

    அக இலக்கியத்தில் இடம்பெறும் உள்ளுறை உவமமும் இறைச்சியும் பற்றிப் பார்ப்போம்.

3.4.1 உள்ளுறை உவமம்

    உள்ளுறை உவமம் என்பது தமிழ் இலக்கியத்திற்கே உரிய தனிநெறி. காதல் மாந்தர்கள் தம் குறிப்பினை அமைப்பதற்கு நம் முன்னோர் கண்டெடுத்த இனிய, நேரிய நாகரிக வழியே உள்ளுறை உவமம் (உள்ளுறை உவமை என்றும் குறிப்பிடுவார்கள்).

    இவ்வுவமம் மிகவும் வலிவான கட்டுப்பாடுகளை உடையது. அகப்பொருளாம் ஐந்திணையில் மட்டுமே பயன்படுத்துவதற்கு உரியது. கருப்பொருள் என்னும் இயற்கைச் சூழலிலிருந்து புனையப்படுவது. வெளிப்பார்வைக்குச் செடி, கொடி, மரம், பறவை, விலங்குகளின் செயல்களைப் புனைவதுபோல் காணப்படும். இவற்றை நேரடியாக எடுத்துக் கூறுவது அகப் புலவர்களின் நோக்கமன்று. உட்கருத்தை உள்ளே வைத்துப் புறத்தில் வேறு கருத்துக் கூறுவர். அகமாந்தர்கள் கேட்போர் உணர்ந்து கொள்ளும் வண்ணம் இவ்வுள்ளுறை வாயிலாகக் குறிப்பிட்ட மனவோட்டங்களை முன்னிறுத்துகின்றனர். இங்கு இடம்பெறும் காட்சிகள், அதாவது முதல், கருப்பொருள்கள் வெறும் இயற்கைப் புனைந்துரைகளாக இலக்கியத்தில் இடம்பெறாமல், அக மாந்தரின் மன உணர்வுகளை விளக்கிக் காட்டும் பின்புலங்களாகவே பாடல்களில் இடம்பெறுகின்றன.

    இலக்கியத் துறையில் குறிப்புப்பொருள் கண்டுகணிக்கும் முறையை வகுத்த முதற்பெருமை தொல்காப்பியர்க்கே உரியது எனலாம். தொல்காப்பியர் உள்ளுறையை அகத்திணையியலிலும் (நூற்பா, 49-52) உவமவியலிலும் (24-33), பொருளியலிலும் (46-48) கூறியுள்ளார். இறைச்சியைப் பொருளியலில் (33, 34, 37) கூறியுள்ளார்.

கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை
ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின்மலைப்
பல்வேறு விலங்கும் எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய. . . (அகநானூறு, 2)

இதன் பொருள்:

    பழுத்து உதிர்ந்த வாழை, பலாக்கனிகளால் பெருகிய தேன் விரவிய சுனைநீரைத் தெரியாமல் அருந்திய ஆண்குரங்கு பக்கத்தில் உள்ள சந்தன மரத்தில் ஏறமாட்டாமல், பூக்களாலான படுக்கையில் களிப்புடன் உறங்கும் எதிர்பாராத இன்பத்தைப்பெறும்; அதுபோலவே வேறு பல விலங்குகளும் எளிதில் இன்பம் எய்தும் நாட்டை உடையவனே! நீ விரும்பும் இன்பம் உனக்கு எவ்வாறு அரிதாகும்?

  • உள்ளுறை
  •     ஆண் குரங்கு தேனை அறியாது நுகர்ந்து தன் இயல்பான தொழிலாகிய மரம் ஏறுதலையும் கைவிட்டு, உறங்குவது போல, நீயும் களவொழுக்கத்தில் இன்பம் நுகர்ந்து, உன் தொழிலாகிய அறநெறியையும் கைவிட்டு, களவொழுக்கத்தை நீட்டித்து. மணம் முடிக்காது நிற்கிறாய்.

        தோழி தலைவனிடம் மணம் மேற்கொள்ள வேண்டும் என்று நேராகக் கூறாமல் கருப்பொருள் கொண்டு குறிப்புக் காட்டுகிறாள்.

    3.4.2 இறைச்சி

        தலைவியும் தோழியும் தலைவனின் கொடுமை கூறும் இடங்களிலும், தம் காதல் உணர்வை இயற்கை உயிர்களில் காணும்போதும் இறைச்சி பயன்படுத்தப்படுகிறது. தலைவனிடம் வரைவு வேண்டும்போதும், வரைந்த தலைவன் பரத்தமை காரணமாகப் பிரிந்தபோதும் தலைவி தோழியரால் உள்ளுறை பயன்படுத்தப் படுகிறது. தம் உள்ளக்குறிப்பைச் சுட்ட விரும்பும் மன உந்தல், உள்ளுறையைப் பயன்படுத்தும் அகமாந்தர்க்கு இருத்தலின் கேட்போர் எதிரில் இருக்கும்போதே உள்ளுறை பயன்படுத்தப்படுகிறது. மன ஆசையை அல்லது ஆற்றாமையை வெளியிடும் நோக்கம் இறைச்சியைப் பயன்படுத்தும் அகமாந்தர்க்கு இருத்தலின், கேட்போர் இல்லாத சூழலிலும் இறைச்சி பயன்படுத்தப் படுகிறது என்று டாக்டர் ஆ.இராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார் (அகத்திணை மாந்தர் ஓர் ஆய்வு, பக். 228).

        இறைச்சி தானே உரிப்புறத் ததுவே              (தொல்காப்பியம். 1176)

        இதிலிருந்து இறைச்சி என்பது உரிப்பொருளுக்குப் புறத்தே தோன்றும் பறவை, விலங்குகள் போன்ற உயிரினங்களின் செயல் பற்றிய செய்தி என்பது தெரியவருகிறது. அதாவது உயிரினங்களின் செயல்கள் மூலம் ஒரு குறிப்பை உணர்த்துவது இதன் கருத்தாகும்.

        நசைபெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;  
       பிடிபசி களைஇய பெருங்கை வேழம்   
      மென்சினை யாஅம் பொளிக்கும்    
    அன்பின தோழிஅவர் சென்ற ஆறே (குறுந்தொகை, 37)

        (நசை = விருப்பம் (காதல்); நல்கல் = தருதல் (இங்கே திரும்பி வருதலைக் குறிக்கும்); பிடி = பெண்யானை; வேழம் = ஆண்யானை; யாஅம் = யா எனும் மரம்; பொளி = உரி; அன்பின = அன்பை உடையவை)

        தலைவன் விரைவில் திரும்பி வருவான் என்று கூறித் தலைவியை ஆற்றுவிக்கும் தோழி கூறும் செய்தி இது. “இவன் சென்ற வழியில் ஆண்யானை ஒன்று தன் பிடியின் பசியைப் போக்க யா என்னும் மரத்தின் பட்டையை உரித்து அதிலுள்ள ஈரத்தைப் பருகச் செய்யும். இந்த அன்பு தலைவன் நெஞ்சைத் தொடும். அவன் உன்மீது பெருங்காதல் கொண்டவனாதலின் திரும்பி வருவான்.” யானையின் செயலை உவமையாகக் கூறாமல் குறிப்பாகக் கூறியதனால் இது இறைச்சி ஆயிற்று.