5.3 பக்தி இலக்கிய வகைமை

     தமிழைப் ‘பத்திமையின் மொழி’ என்று சொல்வதற்கு ஏற்பப் பக்தி இலக்கியம் சிறப்புற்றது. பரிபாடல் காலத்திலிருந்து பாரதியாரின் கண்ணன் பாட்டு வரை, பல்வகை இசைத்தமிழ் மரபாக இது வளர்ந்தது.

     காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள், முதலாழ்வார் மூவர் தொடங்கி கி.பி. 7, 8, 9-ஆம் நூற்றாண்டளவில் அடித்த பக்திப்பேரலைகள் பலவாகும். சமண பௌத்த பக்திப் பாடல்களும், சைவ வைணவப் பாசுரங்களும் ஒலியும் எதிரொலியுமாகப் பரவிப் பெருகின. பன்னிரு திருமுறையும் நாலாயிர திவ்வியப் பிரபந்தமும்     பக்திப்     பேழைகளாகும். நாயன்மார்கள், ஆழ்வார்களைத் தொடர்ந்து அருணகிரிநாதர், பட்டினத்தார், தாயுமானவர், வள்ளல் இராமலிங்கர் என இப்பக்தி வெள்ளம் தமிழ் இலக்கிய வரலாற்றில் உயிர் ஆறாகப் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. இசுலாமிய, கிறித்தவ இசைப் பாசுரங்களும் ஈடுஇணையற்ற எல்லைகளை எட்டின. நாட்டுப்பாடல்     மரபுகளை ஏற்று மாணிக்கவாசகர் காலம் முதல் இத்துறை பெற்ற பல்வேறு வளர்ச்சிப் படிகளும் வகைமைகளும் பலவாகும்.

     பக்தி இலக்கியத்துள், சங்க கால அகத்துறைகள் போலக் காதலுணர்வுடன் கூடிய புனைவுப்பாடல்கள் உள்ளத்தைத் தொடுவனவாம். அப்பரடிகள் அதற்கும் தோற்றுவாய் செய்து பாடிய பாடல்கள் பலவுள்ளன.

எ.டு. முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன் நாமங்கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே ! (6. 25: 7)

     அப்பரடிகள் தாண்டகம் என்ற விருத்த வகையையும் பாடியதால் தாண்டகவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார்.

     பக்தி இலக்கியத்திற்குத் தோற்றம் தொல்காப்பியத்தில் வரும் ‘பூவைநிலை’, ‘புறநிலை வாழ்த்து’, ‘கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’ என்னும் தொடர்களில் கால்கொண்டது எனலாம். கொடிநிலை, கந்தழி, வள்ளி முதலிய சொற்களும் இறைநிலை சார்ந்தனவே !

     மேலும் பக்தி இலக்கியத்திற்குத் திருமுருகாற்றுப்படையும் சிலப்பதிகாரமும் உறுதுணை புரிந்துள்ளன. கவுந்தியடிகள் அருகனை வழிபடுதலும், ஆய்ச்சியர்கள் மாயவனை வழிபடுதலும் பத்திமை மரபின் தோற்றுவாய்கள் எனலாம்.

     வெண்பா, விருத்தம், நாட்டுப்பாடல் மரபு, இசைப்பாட்டு மரபு ஆகியவற்றில் இணைந்து பக்திப் பாடல்கள் கிளைத்தன. சிவநெறி, மாலிய நெறி (வைணவம்) இரண்டிற்கும் பெருவளர்ச்சி நல்கியவை இவையே எனலாம்.

     சங்க இலக்கிய அகத்துறை மரபுகள் அப்படியே பக்தி இலக்கியத்திற்கு மாறியமைந்ததால்தான் தமிழ்ப் பக்தி இலக்கியம் இவ்வளவு சிறப்புடையதாயிற்று. சங்க இலக்கியம் செவ்வியல் நெறி சார்ந்தது. அதன் கண் மிகவுயரிய நாகரிகமான செவ்விய குறிக்கோள் காதலுணர்வுகளைக் காணலாம். அவையே பக்தி இலக்கியத்தில் படிந்து அதனை வளப்படுத்தின எனலாம்.     பக்தி இலக்கிய வளர்ச்சிக்குப் புராணக் கதைகளின் உதவியும் பெரிதாம். நாட்டுப்புறக் கதைகளாகவும் வடமொழிப் புராணக் கதைகளாவும் செவிவழிச் செய்திகளாகவும் வழங்கிய கதைக்கூறுகளால் பக்திப் பாடல்களின் கற்பனைத்திறம் வளர்ச்சி பெற்றது. வாய்மொழி மரபும் பக்திப் பாடல் வளர்ச்சியில் முக்கியக் கூறாகும். இசையோடு பாடும் மரபும் தமிழ்ப் பத்திமைப் பாடல்களுக்கு இனிமை கூட்டியது. உவமையும் கற்பனை வளமும் சிந்தனைக்கு விருந்தாயின. யாவற்றுக்கும் மலோகச் சுவை எனப்படும் மெய்ப்பாடமைந்து உள்ளத்தை உருக்கியதே அதன் முடிமணி எனலாம்.

     பொதுவாகத் தமிழ்ப் பத்திமைப்பாடல்கள் மன அழுக்கைக் கழுவுவன;     உள்ளுணர்வை     வெளிப்படுத்துவன ; உலக நிலையாமையை உணர்த்துவன ; மானிட இனத்தை உயர்த்துவன எனலாம்.

     பக்தி இலக்கிய காலத்தில் மட்டுமே இவ்வகை இலக்கியங்கள் தோன்றிச் சிறந்தன என்பதில்லை. அன்று முதல் இன்றுவரை பக்திப் பா வெள்ளம் இடையறாது வற்றா நதியாக ஓடிக்கொண்டிருக்கத்தான் செய்கின்றது.