6.1 நீதிநூல்கள் | |
பொதுவாக, சங்க காலத்திற்கு அடுத்து வரும் காலகட்டத்தில்தான் பெரும்பான்மையான நீதிநூல்கள் தோன்றின என்று கருதப்படுகிறது. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை இத்தகைய நீதி நூல்கள் பல்கிப் பெருகியிருக்க வேண்டும் என்பர். தமிழகத்தில் களப்பிரர்களின் இடையீடு காரணமாக மூவேந்தர்களின் ஆட்சி கி.பி. 3-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது எனலாம். களப்பிரர்கள் வேற்றுமொழியினர்; வேற்றுச் சமயத்தவர். இவர்கள் காலத்தில் புத்த வழிபாடும், பாலி, பிராகிருத மொழிச்செல்வாக்கும் மிகுந்தன. சங்க காலத்திலேயே பௌத்த, சமணக் கொள்கைகள் ஓரளவு தமிழகத்தில் தலைகாட்டியிருந்தன. ஆனாலும் நாட்டை ஆள்வோரே அவற்றை ஆதரித்து, வலிதில் புகுத்திய காலம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு அளவில் தொடங்கியது எனலாம். பாண்டிய நாட்டையும், சோழ நாட்டையும் கைப்பற்றிய இக்களப்பிரர் பௌத்த சமயத்தைத் தென்னகத்தே பரப்ப முயன்றனர். கி.பி.நான்காம் நூற்றாண்டில் சோழநாட்டு உறையூரினனாகிய புத்ததத்தன் அபிதம்மாவதாரம், விநயநிச்சயம் என்ற இரு நூல்களைப் பாலி மொழியில் எழுதி வெளியிட்டான். அச்சுதவிக்கந்தன் என்ற களப்பிர மன்னன் காலத்தில்தான் விநயநிச்சயம் என்ற நூல் எழுதப்பட்டதாக அவனே குறிப்பிட்டுள்ளான். அக்காலத்தில் பௌத்த சமயக் குருமார்கள் இருபதின்மர் காஞ்சியில் வாழ்ந்தனராம். இவை தமிழும் தமிழ் இலக்கியமும் அடைந்த பின்னடைவைச் சுட்டுவன. அக்கால கட்டத்தில் பல்லவர்கள் என்ற பிற மொழியாளர் தொண்டை நாட்டையும், நடுநாட்டையும் கைப்பற்றி ஆளத் தலைப்பட்டனர். அவர்கள் சமண சமயத்தையும் வடமொழியையும் பாதுகாத்தனர். அவர்களுடைய செப்பேடுகள் முற்பகுதியில் பிராகிருத மொழியிலும், இடைப்பகுதியில் வடமொழியிலும், கி.பி.ஏழாம் நூற்றாண்டிலிருந்து வடமொழி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உள்ளமையே அக்கால நிலையை உணர்த்தப் போதிய சான்றாகும். தமிழக மூவேந்தர்களின் பரம்பரையினர் நிலை கொள்ள முடியவில்லை. கி.பி.6-ஆம் நூற்றாண்டு அளவில்தான் பல்லவப் பேரரசு அமைந்தது. களப்பிரர்களுக்கும் உள்நாட்டு அரசர்களுக்கும் போரும் பூசலுமாக இருந்தன. இதனால், தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு யாவும் சிதைவுற்றன. இந்நிலையில் சங்ககாலச் செல்வச்செழிப்பான வாழ்வு சீரழிந்தது. கள்ளுண்டு, புலால் மிகவுண்டு இன்ப வாழ்வில் திளைத்த பழைய வாழ்க்கையை விடுத்துச் சமண, பௌத்த மதச் செல்வாக்கால் பல்வேறு நோன்பு வாழ்க்கை மேற்கொள்ளப்பட்டது. நீதி இலக்கியம் பல்கிப் பெருக அதுவே காரணம் ஆகும். கலை இலக்கிய நோக்கிலும் அரசியல் நோக்கிலும், களப்பிரர் ஆட்சி நிலவிய இக்காலத்தை இருண்ட காலம் என்பர். சங்க காலத்தை அடுத்ததாக இருத்தலால், சங்கம் மருவிய காலம் எனவும் அழைப்பர். நீதிநூல் காலம், நீதி இலக்கிய வகைமைக் காலம் என்றெல்லாம் அழைப்பது இலக்கிய வகை பற்றிய பெயராகும் எனலாம். பழந்தமிழ் இலக்கியங்கள் பத்துப்பாட்டு எனவும், எட்டுத்தொகை எனவும், பதினெண் கீழ்க்கணக்கு எனவும் வரிசையாக வழங்கப்படுகின்றன. இவை தொகை நூல்கள் என்று கூறப்படும். பல நூல்களின் தொகுப்பே தொகை நூல்கள். பத்து நூல்களைக் கொண்டது பத்துப்பாட்டு; எட்டு நூல்களைக் கொண்டது எட்டுத்தொகை; பதினெட்டு நூல்களைக் கொண்டது பதினெண் கீழ்க்கணக்கு. இத்தொகை நூல்களில் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க கால இலக்கியங்கள். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய நூல்கள். கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை சங்க காலம் என்று கருதப்படுகின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன் தோன்றிய நூல்களே சங்க இலக்கியங்களாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் ஒரே காலத்தில் தோன்றிய நூல்கள் அல்ல. அவை சங்க காலத்திற்குப் பின்னும், காவிய காலத்திற்கு முன்னும் தோன்றிய நூல்களாகும் என அறிஞர் கூறுவர். அதாவது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய காலத்தைக் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னும் ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னும் என்று தீர்மானிக்கலாம். இந்த இடைக்காலமாகிய நானூறு ஆண்டுகளிலே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றியிருக்கும் என்பர். இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே முன்னே தோன்றிய நூல் எது? பின்னே எழுந்த நூல் எது? எனத் தீர்மானிப்பது எளிதானதன்று. பிற்காலத்தினர் தொகை நூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும் கீழ்வரிசை நூல்கள் என்றும் பிரித்தனர். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் மேல்வரிசை - மேற்கணக்கு நூல்கள்; பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் கீழ்வரிசை - கீழ்க்கணக்கு நூல்கள். குறைந்த அடிகளையுடைய பாடல் நூல்களுக்குக் கீழ்க்கணக்கு நூல்கள் என்று பெயர் வைத்தனர். நிறைந்த அடிகள் அமைந்த பாடல்களைக் கொண்ட நூல்களை மேற்கணக்கு நூல்கள் என்று கூறினர். மேலும் நூல்கள் தோன்றிய காலங்களின் அடிப்படையிலும் மேற்கணக்கு, கீழ்க்கணக்கு எனப் பிரிக்கப்பட்டதாகவும் கருத வாய்ப்புண்டு. மேற்கணக்கு நூல்கள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். அவற்றின் எண்ணிக்கையும் பதினெட்டு; கீழ்க்கணக்கு நூல்களும் பதினெட்டு. மேற்கணக்கு நூல்கள் எல்லாம் பெரும்பாலும் மூன்றடி முதல் ஆயிரம் அடி வரையிலும் எழுதப்படும் ஆசிரியப்பாவால் ஆனவை. கலிப்பா, பரிபாட்டு, வஞ்சிப்பா ஆகிய பாடல்கள் கொண்ட நூல்களும் மேற்கணக்கில் உள்ளன. கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் இரண்டடி முதல் எட்டு அடி வரையிலும் உள்ள வெண்பாக்களால் ஆனவைகளே. பாட்டின் பெருக்கம், சுருக்கம் கருதியே கீழ்க்கணக்கு, மேற்கணக்கு என்று நூல்களைப் பிரித்தனர். நூல்களில் உள்ள பொருட்சிறப்பைக் கருதிக் கீழ், மேல் என்று பிரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்னவை என்பதைக் குறிக்கும் பழம் பாடல் ஒன்று உண்டு. நாலடி, நான்மணி, நால்நாற்பது, ஐந்திணைமுப் என்பது அப்பாடல். “நாலடியார், நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திணை ஐம்பது, ஐந்திணை ஐம்பது, கைந்நிலை (ஐந்திணை அறுபது), ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, முப்பால், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இனிய நிலையை எடுத்துக் கூறுகின்ற முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்பவையே ஒழுக்க நிலையைக் கூறுகின்றனவாகிய கீழ்க்கணக்கு நூல்களாகும்” என்பது இதன் கருத்து. கைந்நிலை என்பது ஒரு நூலைக் குறிப்பிடவில்லை என்று கருதுபவர்கள் ‘இன்னிலை’ என்றும் ஏற்றுக் கொள்கின்றனர். இப்பதினெட்டு நூல்களிலே ஆறு நூல்கள் அகப்பொருள் பற்றியவை. ஏனைய பன்னிரண்டு நூல்களும் புறப்பொருள் பற்றியவை. இப்பன்னிரண்டு நூல்களிலே முப்பாலலிலும், நாலடியிலும் அகப்பொருள் பற்றியும் கூறப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இவற்றில் புறப்பொருள் பற்றிய செய்திகளே மிகுதியாகச் சொல்லப்படுகின்றன. ஆதலால் இவற்றைப் புறப்பொருள் நூல்களின் தொகுதியிலே சேர்ப்பதுதான் சிறந்ததாகும். 1)
திணைமொழி ஐம்பது இந்த நூல்கள் அகப்பொருள் பற்றியவை. இவை குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்ற ஐந்து நிலங்களின் இயல்புகளைக் கூறுவன. அந்நிலத்திலே நடைபெறும் காதலன் காதலியின் ஒழுக்கங்களைப் பற்றி உரைப்பன. இன்பப் பகுதி ஒன்றையே இவை உரைக்கின்றன. சங்க இலக்கிய அகமரபின் தொடர்ச்சியை வேறு வடிவில் இங்குக் காண்கிறோம். மீதியுள்ள பன்னிரண்டு நூல்களிலே பதினொரு நூல்கள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களைப் பற்றி உரைப்பன. இப்பதினொரு நூல்களிலே தலைசிறந்தது முப்பால். அதாவது திருக்குறள். இதற்கு அடுத்தபடியாக நாலடியும் பழமொழியும் சிறந்தன ஆகும். இவை உயர்ந்த அறங்களை எடுத்துரைக்கின்றன. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும், மனித சமுதாயமும் பின்பற்ற வேண்டிய ஒழுக்க முறைகளை விரிவாகக் கூறுகின்றன. இவையே அற நூல்கள், நீதி நூல்கள், ஒழுக்க நூல்கள் ஆகும். சங்க காலத்தை அடுத்து அறநூல்கள் தோன்றுவதற்கு அக்கால வரலாற்றுச் சூழலும் தமிழ்ப் புலவர்களின் மரபுணர்த்தும் பாங்கும்கூடக் காரணமாகலாம். இந்நூல்களைப் படிப்பதனால் பண்டைத் தமிழர்களின் சிறந்த ஒழுக்கங்களைக் காணலாம். அவர்களுடைய சமுதாய அமைப்பை அறியலாம். அவர்களுடைய அரசியல் முறை, பழக்க வழக்கங்கள் இவற்றைத் தெரிந்து கொள்ளலாம். தமிழர்களின் உயர்ந்த நாகரிகத்தையும் பண்பாட்டையும் அறிவதற்கு இந்தப் பதினொரு நூல்களும் துணை செய்கின்றன. 1)
முதுமொழிக் காஞ்சி இவையே புறப்பொருள் நூல்களாம். களவழி நாற்பது என்பது போர்க்களத்தைப் பற்றி மட்டும் பாடப்பட்டிருப்பது. சோழ மன்னன் ஒருவன் போரிலே பெற்ற வெற்றியைப் புகழ்வது. இந்நூலைப் படிக்கும் போது போர்க்களத்தின் பயங்கரமான காட்சியைக் காணலாம். வளர்ந்து வரும் மனித சமுதாயத்திலே போர் என்பது ஓர் அநாகரிகம் என்ற உணர்ச்சியை ஊட்டவல்லது இந்நூல். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைப் போலவே தமிழர்களின் பண்டைய வரலாற்றுப் பெருமையைக் காணப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் துணை செய்கின்றன. படிப்படியாக வளர்ந்து வந்த தமிழர்களின் உயர்ந்த பண்பாட்டை இந்நூல்களிலே காணலாம். தமிழர்கள் தனித்தனிக் குடும்ப வாழ்விலே எவ்வளவு சிறந்திருந்தனர் என்பதற்கு அகப்பொருள் நூல்கள் சான்றுகளாகின்றன. அம்மக்கள் ஆன்மிகத் துறையிலும் அரசியல் முதலிய புறத்துறைகளிலும் எவ்வளவு உயர்ந்த நெறியைப் பின்பற்றி வாழ்ந்தனர் என்பதற்குப் புறப்பொருள் பற்றிய நூல்கள் சான்றுகளாம். மொத்தத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மக்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் உயர்ந்த நூல்கள் என்று உரைக்கலாம். தமிழர்களின் பண்டைப் பண்பாட்டை அறிதற்கு இவற்றை விடச் சிறந்த சாதனங்கள் வேறு எவையுமில்லை. இனி அந்நூல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியே சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம். |