1.1
காப்பியம்
தன்னிகரற்ற தலைவன்
ஒருவனது நீண்ட கதையைச் செய்யுளில் கூறுவதைக் காப்பியம் என எளிமையாகச் சொல்லலாம்.
காப்பியத்தைக்
குறிக்கும் எபிக் (Epic)
எனும் சொல் எபோஸ் (Epos) எனும்
கிரேக்கச் சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது. இதன் பொருள்
சொல் அல்லது பாடல்
என்பதாகும்.
1.1.1 காப்பியமும்
இலக்கியச் செழுமையும்
தமிழ்க் காப்பியங்கள்
இலக்கியச் செழுமை மிக்கனவாய் அமைகின்றன. கதை கூறல் என்பது மட்டுமன்றி, அக்காலப்
பண்பாட்டினை, தமிழ் மரபினை,வரலாற்றினை விளக்கவும் தமிழ்க் காப்பியங்கள் முயன்றன
; அதில் வெற்றியும் பெற்றன. கற்பனை வளம், உவமை நயம், தேர்ந்த சொல்லாட்சி,ஆழ்ந்த
சிந்தனையை உள்ளடக்கிய கருத்து, சுவையாகக் கதை சொல்லும் தன்மை ஆகியவற்றால்
காப்பியங்கள் இலக்கியச் செழுமை உடையனவாய்த் திகழ்கின்றன.
தமிழ்ச்
சிறுகதைகள் ஆங்கில இலக்கிய வகைமையின் தமிழ்வெளிப்பாடு என நினைக்கிறோம். ஆனால்
கதை கூறும் மரபுஈராயிரமாண்டு தொன்மை மிக்கது. தமிழ்க் காப்பியங்களில் அமைந்த
கிளைக் கதைகளைத் தனிச் சிறு கதைகளாகக் கொள்ள முடியும். பிற்கால இலக்கிய வகைமைகளான
சிற்றிலக்கியங்கள், குறுங்காவியங்கள்,சிறுகதைகள்,புதினங்கள் போன்றவை உருவாகக்
காப்பியங்கள் அடியெடுத்துக் கொடுத்தன எனலாம். காப்பியங்கள் காலத்தால் முற்பட்டிருந்தாலும்,
இன்றும் அவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான இலக்கியப்
புதுமைகள் உருவாகிக் கொண்டிருப்பதைமறுக்க இயலாது. |