1.2
தமிழில்
காப்பியங்கள்
தமிழின் செவ்வியல் இலக்கியக்
காலமான சங்க காலத்தில் நீண்ட காப்பியங்கள் வழக்கில் இல்லை. மூன்று அடிச்
சிற்றெல்லை முதல் 782 அடிப் பேரெல்லை வரை அமைந்த நீண்ட தனிப்பாடல் அமைப்பே
வழக்கத்தில் இருந்தது. இலக்கிய நடையில் எழுதப்பட்ட காப்பியங்கள் இல்லையே
தவிர, நிறையக் கதைகள் மக்களின் வாய்மொழி இலக்கியங்களாக இசையோடு நடிப்புடன்
தெருக்கூத்தாக அரங்கேற்றப்பட்டன.
ஏட்டில் எழுதா வாய்மொழிக் கதைகள்,
வழிவழியாக அடுத்தடுத்த தலைமுறைக்குப் பெயர்த்துத்
தரப்பட்டன. நெடுங்காலமாய் மண்ணில் உலவிய கதைகள் புலவர்களால் யாப்பு வடிவில்
காப்பியங்களாக ஆவணப் படுத்தப் பட்டன.
1.2.1 தனிமனித
மேன்மையும் காப்பியமும்
ஜான்
கிளார்க் எனும் மேனாட்டு அறிஞர் “காப்பியம் என்பது தனி மனிதனின்
மேன்மையைப் புகழ்ந்து பாடும் ஒருவகை நாட்டுப்புறப் பாடலே” என்கிறார்.
இனக்குழு வாழ்க்கை வாழ்ந்த போது,
வீரதீரச் செயல்கள் செய்து சமுதாய மக்களைக் காப்பவன் இனக்குழுத் தலைவனாக மதிக்கப்பட்டான்.
போரில் வீரமரணம் அடைவது
தெய்வநிலைக்குக் கொண்டு செல்லும் என உணர்த்தும் வகையில் நடுகல் வழிபாடுகள்
முன் நிறுத்தப்பட்டன. அவனுக்குப் போற்றுதல்களும் சமூக மரியாதைகளும் மரணத்திற்குப்
பின்னும் தரப்பட்டன. குறிக்கோள் சார்ந்து வாழும் உயரிய மனிதனாக அவன் முன்
நிறுத்தப்பட்டான்.
அவனது வீர வரலாறு மற்ற மக்களை
வீரம் செறிந்தவர்களாக மாற்றப் பயன்பட்டது. அந்த வீரயுக வழிபாடே பின்னர் இறை
வழிபாடாக மாறியது. மன்னனைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் அமைந்த கதைப்
பாடல்களே பின்னரக் காப்பியங்களாக இலக்கிய வடிவம் பெற்றன.
1.2.2 இளங்கோ காட்டிய நாட்டுப்புற வகைமை
சேரநாட்டு
அரச குடும்பத்தைச் சார்ந்த இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரம் நாட்டுப்புறச்
சாயலோடு அமைவதோடு, வீரயுகப் பெண்ணாகக் கண்ணகியைக் காட்டுகிறது.
முத்தமிழ்க்
காப்பியமாக, மூவேந்தர் காப்பியமாக, முக்காண்டங்களில், முப்பது காதைகளில்,
‘மூன்று’ எனும் எண் வகைமைக்குள் இளங்கோ சிலப்பதிகாரம் படைத்தார். பேரியாற்றங்கரைக்குச்
சேரன் செங்குட்டுவனுடன்
மலைவளம் காண்பதற்காக இளங்கோவடிகள் சென்ற சமயத்தில், குன்றக் குறவர்கள் கண்ணகி
எனும் பெண் பற்றிக் கூறினர். அவளுடைய வரலாற்றைச் சீத்தலைச் சாத்தனார் விரிவாகக்
கூற, இளங்கோ சிலப்பதிகாரம் படைத்தார்.
“கடற்கரையில்
செம்படவர்கள் பாடிய காதல் பாடல்கள், காவேரி ஆறு பற்றி மக்கள் பாடிய பாடல்கள்,
ஆயர் குல மக்கள் கைகோத்து ஆடிப் பாடிய குரவைக் கூத்து, முருகவேளை வணங்கி
மக்கள் பாடிய பாடல்கள், சேரநாட்டில் பெண்கள் ஆடிப் பாடிய அம்மானைப் பாடல்கள்,
வேடர்கள் காளியை வாழ்த்திப் பாடிய பாடல்கள், நெல் குற்றும்போது பாடியது,
ஊசலாடும் போது பாடியது, அரச வாழ்த்தாகப் பாடியது முதலான பழங்காலப் பாடல்களால்,
மக்கள் என்ன என்ன வடிவில் பாடினரோ அவற்றைக் கேட்டு உணர்ந்து, அந்தந்த வடிவங்களில்
செய்யுள் இயற்றி அந்தந்த நாட்டு மக்களின் வாயால்
பாடப்படுவதாகக் காப்பியத்தில் அமைத்துள்ளார். அதனால்
பழங்கால நாட்டுப் பாடல்களின் வடிவங்களை இன்று நாம் உணர்வதற்குச் சிலப்பதிகாரம்
ஒன்றே உதவுகிறது” என்று டாக்டர் மு.வரதராசனார் கூறும் கருத்து நோக்கத்தக்கது.
|