1.3 காப்பியம் பற்றிய கருத்துகள் காப்பியம் என்பது ஓர் இலக்கிய வடிவம். அது அமைய வேண்டிய முறையைப் பற்றி அறிஞர்கள் பல்வேறு வகையான கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த வகையில் மேல்நாட்டு அணுகுமுறையும், நம்நாட்டுக் கருத்துப்போக்கும் வேறுபட்டிருப்பதைக் காணலாம். அறம், பொருள், இன்பம், வீடு போன்ற நாற்பெரும் பொருள்களைப் பற்றிக் காப்பியம் பேச வேண்டும் என்னும் ஒரு விதி பரவலாக நம்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதைக் காணலாம்.
பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, “காப்பியக் கதை இராமாயண மகாபாரதக் கதைகளின் தழுவலாகவோ, மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற பழங்கதையாகவோ, கவிஞன் ஒருவனால் சமுதாயச் சூழலுக்கு ஏற்பப் படைத்துக் கொள்ளப்பட்ட ஒரு கதையாகவோ இருக்கலாம்”எனக் காவிய காலம் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகைப் பொருளைப் பற்றிப் பேசும் நெடுங்கதையே காப்பியம் எனத் தண்டியாசிரியர் குறிப்பிடுகிறார். அக்கதை செய்யுள் வடிவில் அமைந்திருக்க வேண்டும் என்கிறார் பெருங்காப்பியத்தின் இலக்கணம் பற்றி விளக்கிய தண்டியாசிரியர்.
(நாற்பொருள் = அறம், பொருள், இன்பம், வீடு ; தன்னிகரில்லாத் தலைவன் =தன்னோடு ஒப்பாரும் மிக்காரும் இல்லா உயர்திறன் படைத்த தலைவன்) காப்பிய வகைமையை, இந்நூற்பாவை அடிப்படையாகக் கொண்டே பலரும் செய்திருக்கிறார்கள்.
அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகைப் பொருளைப் பற்றித் தண்டியாசிரியர் விளக்கினாலும், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் அறத்துப்பால் உரைப் பாயிரத்தில் அதை மறுத்து,முதல் மூன்றுமே சாத்தியம் என்கிறார். “இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது சிந்தையும், மொழியும் செல்லா நிலைமைத்தாகலின், துறவறம் ஆகிய காரண வகையால் கூறப்படுவதல்லது இலக்கண வகையால் கூறப்படாமையின், நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமே ஆம்” என்கிறார். அதாவது அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று நிலைகளையும் நம்மால் உணர முடியும். செயல்படுத்த முடியும். ஆனால் வீடுபேறு எனும் நான்காம் பொருளைக் காணவோ, அதில் சிந்தையைச் செலுத்தவோ முடியாது என்பதால் முதல் மூன்றினை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார். தொல்காப்பியமும் இதே கருத்தையே விளக்குகிறது. தண்டியாசிரியருக்கும் பரிமேலழகருக்குமான வேறுபட்ட கருத்து நிலை,காப்பிய வகைமைப் படுத்தும்போது தெளிவாகத் தெரிகிறது. ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவக சிந்தாமணி, வளையாபதி,குண்டலகேசி என்பன முழுமையாகக் காப்பியத்திற்கான நால்வகைப் பொருளினைக் கொண்டிருக்கின்றன வா என்றால், இல்லை என்றேபதில் கூற வேண்டியுள்ளது. அறம், பொருள், இன்பம் எனும் மூன்று கருத்து நிலைகளை முன்வைத்து அக்காப்பியங்கள் கதை சொன்னாலும், ‘வீடுபேறு’பற்றிய கருத்தாக்கம் ஒவ்வொரு சமயத்திற்கும் வேறு வேறாக இருக்கிறது. உலகப் பொதுமறையைப் படைத்த திருவள்ளுவர் அறம், பொருள், இன்பத்தோடு நிறுத்திக் கொண்டார். வீடுபேறு என்பதற்குத் தனியே பால் அமைக்க முயலவில்லை. |