1.4 காப்பியப் பண்புகள்

    பெருங்காப்பியம், காப்பியம் என்ற இரு வகைகளைக் கூறிய தண்டியலங்கார ஆசிரியர் இந்தப் பிரிவுக்குக் காரணம் கூறுகிறார். அதாவது அறம் முதலிய நான்கு பொருள்களையும் பற்றிக் கூறுவது பெருங்காப்பியம். இவற்றுள் ஒன்று அல்லது இரண்டு குறைந்தாலும், பெருங்காப்பியக் கூறுகளில் சில குறைந்து வந்தாலும் அது காப்பியம் ஆகும். இந்த அடிப்படையிலேயே தமிழ் இலக்கியத்தில் இரண்டு வகைகளைப்
பார்க்கிறோம். பின்னர் வந்த இலக்கிய ஆய்வாளர்கள் வகைமைக்குக்குரிய  சில     பண்புகளாகப் பலவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவற்றைப் பார்க்கலாம்.

  • டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தியின் கருத்து

    “சுவை மற்றும் மெய் உணர்வோடு காப்பியங்கள் திகழ வேண்டும்” என்கிறார் டாக்டர் தா.ஏ,ஞானமூர்த்தி.

  • ஆங்கில இலக்கியத் திறனாய்வாளர் டிலியார்டு கருத்து

    ஆங்கில இலக்கியத் திறனாய்வாளர் டிலியார்டு கூறும் கருத்துகளை மொழிபெயர்த்துத் தரும் டாக்டர் இரா.காசிராசன் தமது உலகக் காப்பியங்கள் எனும் நூலில் பின்வருமாறு தருகிறார்.

    டிலியார்டு குறிப்பிடும் நான்கு காப்பியக் கூறுகள் :

(1) பண்பு நலன் சிறந்த ஒரு கதைக்கரு, உயர்ந்த ஒரு குறிக்கோள் உணர்வுடன் விவரிக்கப் பெறுதல் வேண்டும்.

(2) பரப்பு, உள்ளடக்கம், தகுதி ஆகியவற்றில் காப்பியம் மேலோங்கி நிற்க வேண்டும்.

(3) மனித நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் கொண்டிருக்க வேண்டும்.

(4) ஆடல், பாடல்கள் சிறப்பிடம் பெற வேண்டும்.

  • அறிஞர் சி.எம்.பௌராவின் கருத்து

    வர்ஜிலிலிருந்து மில்டன் வரை எனும் நூலில் அறிஞர் சி.எம்.பௌரா சில காப்பியப் பண்புகளை முன்வைக்கிறார்.

(1) புலவன் தான் எடுத்துக் கொண்ட காப்பியப் படைப்பு இனிது நிறைவேற வழிபடு கடவுளை வாழ்த்தி வணங்கி அருள் வேண்டுதல்.

(2) காப்பிய இடைநிலைத் தொடக்கம்.

(3) தொடர் உவமைகளைத் திறம்படக் கையாளுதல்.

(4) நாடகம் போன்ற நீண்ட தனிமொழிகளை அமைத்தல்.

(5) விளையாட்டுப்     போட்டிகளையும்     சண்டைப் போட்டிகளையும் பற்றிச் சுவைபட வருணித்தல்.

(6) ஆவியுலகிற்குப் பயணம் சென்று ஆவிகளுடன் உரையாடுல்.

(7) உருமாற்றம் அடைதல்

முதலானவும், காப்பியக் கூறுகளாக எண்ணப்படுகின்றன என்கிறார்.

    காப்பியப் பண்புகளைப் பற்றி ஆழமாக அறிந்தாலன்றி, காப்பியங்களை வகைமைப்படுத்த இயலாது. காப்பியப் பண்புகளைப் பகுப்பாய்வு செய்து ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து செய்யப்படும் காப்பிய வகைமை இன்று அறிவியல் சார்ந்தே செய்யப்படுகிறது.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
சைவ இலக்கியங்களைத்     திருமுறைகளாகத் தொகுத்தவரின் பெயரைக் குறிப்பிடுக.
2.
எந்தச் சொல்லின் அடிப்படையில் ‘எபிக்’ எனும் சொல் அமைந்துள்ளது? அது எம்மொழிச் சொல்?
3.
தமிழ்க் காப்பிய இலக்கியத்தின் முன்னோடி எது?
4.
“காப்பியம் என்பது தனி மனிதனின் மேன்மையைப்
புகழ்ந்து பாடும் ஒருவகை நாட்டுப்புறப் பாடலே”
என்பது யார் கூற்று?
5.

‘மூன்று’ என்ற எண் வகைமைக்குள் காப்பியம்
கண்ட புலவர் யார்?
6.

சேரன் செங்குட்டுவனிடம் கண்ணகி குறித்து முதலில் கூறியவர்கள் யாவர்?
7.

‘காப்பிய காலம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
8.

தண்டியாசிரியர்     குறிப்பிடும்     காப்பியத்தின்
நால்வகைப் பொருட்களைக் குறிப்பிடுக.
9.
“வீடு என்பதைக் காணவோ, அதில் சிந்தையைச் செலுத்தவோ முடியாது” என்றவர் யார்?