3.0 பாட முன்னுரை

    இந்தியாவின்     தொன்மையை உலகிற்கு அறிவிக்கும் வரலாற்றுப் பதிவுகள் இதிகாசமும் புராணமும் ஆகும். இந்தியாவின் ஒப்பற்ற     இதிகாசங்களாகிய இராமாயணம், மகாபாரதம் இரண்டையும்     தந்த மொழி வடமொழி. இந்தியாவின் அனைத்து மொழி இலக்கியங்களும் வான்மீகி இராமாயணத்தையும்     வியாசருடைய மகாபாரதத்தையும் தத்தம் மொழிகளில், தத்தம் பண்பாட்டுப்     பதிவுகேளாடு இலக்கியங்களாக     உருமாற்றித் தந்திருக்கின்றன. தமிழ்க் காப்பியங்களான பெருங்கதை, சிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம், குண்டலகேசி     ஆகியன வடமொழித் தழுவல்களாகவே     அமைகின்றன. அக்காலப் புலவர்கள் தமிழிலும்     வடமொழியிலும் ஆற்றல் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். இராமாயண, மகாபாரத இலக்கியங்களுள் காலத்தால் முற்பட்டது இராமாயணமே. வான்மீகி இராமாயணத்தைக் கம்பர் தமிழ்ச் சூழலுக்கு ஏற்பத் தந்ததும், வியாசருடைய மகாபாரதத்தை     அடியொற்றித் தமிழில் பெருந்தேவனார் பாரதம், பாரத வெண்பா,வில்லிபாரதம், நல்லாப்பிள்ளை பாரதம், நளவெண்பா, நைடதம் ஆகியன தோன்றியதும் குறிப்பிடத் தகுந்த நிகழ்வுகள் ஆகும். அதே போன்று இதிகாசக் கதைகளை முன்னிறுத்திப் புராணங்களும் தமிழில் தோன்றின. சமயத்தை ஒட்டிப் புராணங்கள் தோன்றியதும், தல புராணங்கள் தோன்றியதும் தமிழில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தின. அத்தகைய சிறப்புடைய இதிகாசங்களையும் புராணங்களையும் பற்றி விளக்குவதே இப்பாடத்தின் நோக்கமாகும்.