3.5 புராண காப்பியங்கள்

    புராணம் என்றால் பழங்கதை     என்று பொருள். புராணங்களாகவும் காப்பியத் தகுதி பெற்றுக் காப்பியங்களாகவும் திகழ்வன புராண காப்பியங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டு : பெரிய புராணம், கந்த புராணம்.

3.5.1 பெரிய புராணம்

    ஆசிரியர் சேக்கிழார்.

    இந்நூலுக்குத் திருத்தொண்டர் புராணம் என்ற பெயரும் உண்டு. வடமொழிச் சார்பின்றி, தமிழில் தனித்துவத்துடன் தோன்றிய காப்பியம் இது.

    அறுபத்து மூன்று நாயன்மார் பற்றி, சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய 11 பாடல்களில் அமைந்த திருத்தொண்டத் தொகைப் பதிகமும் அவருக்குப் பின்வந்த நம்பியாண்டார் நம்பி 89 பாடல்களில் பாடிய அமைந்த திருத்தொண்டர் திருவந்தாதியும் பெரிய புராணம் தோன்றக் காரணமாய் அமைந்தன.

· நூல் அமைப்பு

    13 சருக்கங்கள், 4286 பாடல்களை உடையது இந்நூல்.

    இக்காப்பியம் திருமலைச் சருக்கம் என்பதில் தொடங்கி,வெள்ளானைச் சருக்கத்துடன் நிறைவடைகிறது.

· கள ஆய்வு

    63 நாயன்மார்கள், 9 தொகையடியார்களைப் (குழுவினர்) பற்றி அவர்கள் வாழ்ந்த இடத்திற்கே சென்று கள ஆய்வுசெய்து எழுதியுள்ளார்.

· நூலின் தனிச் சிறப்பு

    பலருடைய கதையைக் கூறுவதால் காப்பியச் சுவை குறையுமே என்பதற்காக, காப்பியத் தலைவனாகச் சுந்தரமூர்த்தி நாயனாரைக்  கொண்டு தொடங்கி, அவர் கதையுடனே காப்பியத்தை நிறைவு செய்துள்ளார். அவர் தன்னிகரில்லாத் தலைவனாக அமைவதால் பெருங்காப்பிய இலக்கணப்படி காப்பியம் அமைகிறது.

    ‘உலகெலாம்’ என இறைவன் அடியெடுத்துத் தர ‘உலகெலாம்’
என்றே  சேக்கிழார் காப்பியத்தை நிறைவு செய்கிறார்.

    மங்கலச் சொற்களை மட்டுமே பயன்படுத்தி, அமங்கலச் சொற்களைப் பயன்படுத்தாமல் பாடியுள்ளார். ஞானசம்பந்தரைப் பற்றிய பெரிய புராணப் பாடல் வியக்க வைக்கிறது.

ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையின்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக் கண்குளிரக் கண்டார்கள்.
        - (திருஞானசம்பந்தர் புராணம், 728)

(மிசை = மீது ; வளர்மதிக் கொழுந்து = இளம்பிறை ; எழுபிறப்பு = ஏழ்வகைப் பிறப்பு)

· கந்த புராணம்

    வடமொழியில் உள்ள சிவசங்கர சங்கிதையைக் கச்சியப்ப சிவாச்சாரியார் 10436 பாடல்களால், ஆறு காண்டங்களாகத் தொடுத்துத் தமிழில் தந்தார். முருகன் வள்ளி கதை தமிழகக் கதையாக இருந்தாலும் வடமொழிப் புராணக் கலப்போடு அது கந்தபுராணமாயிற்று. காலம் கி.பி.18ஆம் நூற்றாண்டு.