தமிழிலக்கியம் ஏறக்குறைய 25 நூற்றாண்டுகளுக்கு மலோன
பழமையான
வரலாறு உடையது. தமிழின் பழமையான இலக்கண
நூல் தொல்காப்பியம் என்பதாம். இந்நூலினை இயற்றிய
பெருமைக்குரியவர் தொல்காப்பியனார் என்னும் பழம்புலவர்.அக்கால மக்களின்
பழக்க வழக்கங்களையும் பேச்சு வழக்கையும்,
புலவர்களின் செய்யுள் வழக்கையும் ஆராய்ந்து நூலை எழுதினார்.அந்நூலில் பொருளதிகாரத்தில் அகத்திணை இயலில் ஒவ்வொரு
நிலத்திற்கும்
கூறப்படும் கருப்பொருள்களுள் ஒன்றாக, தெய்வம்
குறிக்கப்படுகின்றது. இதன்மூலம் குறிஞ்சி நிலத்திற்கு முருகனும்,
முல்லை நிலத்திற்குத் திருமாலும், மருத நிலத்திற்கு இந்திரனும்,
நெய்தல் நிலத்திற்கு வருணனும், பாலை நிலத்திற்குக் கொற்றவையும்
தெய்வங்களாகக் குறிக்கப் பெறுகின்றனர். இதன் மூலம் அக்கால
மக்களிடையே தெய்வ வழிபாட்டு நிலை மிகுந்த அளவிற்குப்
பரவியிருந்தமையினை
உணரலாம்.
1.2.2 சங்க இலக்கியத்தில் பக்தி நிலை
சங்க காலத்தில் சைவம், தமிழ்நாட்டில் தலைசிறந்த சமயமாக
இருந்தது. அதனையடுத்து வைணவம் சிறப்புற்று இருந்தது.
பௌத்தமும், சமணமும் அத்துணை அளவு
விரிவு அடையவில்லை.
ஆனால் சங்க கால இறுதியில் பௌத்தமும், சமணமும் தொடக்கம்
பெற்றன.
எனவே சங்க காலச் சமய சைவம் என்று கூறலாம்.
சங்க காலத்தில் சிவன் பிறவா யாக்கைப் பெரியோன் ஆகி,
முதலிடத்தில் வைத்துப் பேசப்படுகின்றான். திருமுருகாற்றுப்படை,
முருகன் புகழ் பாடும் நூலாகும்.
பரிபாடல் முருகன், திருமால்
ஆகிய தெய்வங்களைக்
குறித்துப் பாடுகின்றது. மேலும் முப்புரம்
எரித்தது, ஆதிரையான் முதலான குறிப்புகள் மூலம்
சிவபெருமானைப் பற்றியும் குறிப்பிடுகின்றது.
திருமுருகாற்றுப்படை சைவ இலக்கியத் திருமுறைத் தொடர்
வரிசையில்
பதினோராந் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
1.2.3 நீதி இலக்கியங்களில் பக்தி நிலை
மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்தத் தோன்றிய நூல்களே
நீதிநூல்கள். அவற்றுள் முதலிடம் பெறுவது திருக்குறள்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் (குறள் - 10)
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை (குறள் - 9)
அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு (குறள் - 610)
என்று கூறப்படும் இடங்களில், சிவன், திருமால் என்று
சிறப்புப்படுத்திக்
கூறாமல், இறைவன் என்று பொதுத் தன்மையிலும்,
எண்குணத்தான், கோள் இல், பொறிஇல் என்று
அவனது சிறப்பு
இயல்புகளும் விவரிக்கப்படுகின்றன. கடவுளை முன்னிலைப்படுத்தி,
ஏனைய நீதி நூல்கள் பாடியுள்ள வாழ்த்துப் பாடல்கள்
குறிப்பிடத்தக்கனவாகும்.
மனித வாழ்க்கை சிறக்க, அறக் கருத்துகளை, வலியுறுத்தி,
சமண, பௌத்த
அறிஞர்கள் நீதிநூல்களைப் பாடியுள்ளார்.
1.2.4 முற்காப்பியங்களில் பக்திநெறி
கடவுளுக்குப் பலியிட்டு வழிபடும் வழக்கம் இருந்ததையும்
மலர்தூவி வழிபட்ட தன்மையையும் சங்க இலக்கியங்கள்
தெரிவிக்கின்றன. ஆடல் பாடல் முதலிய செய்திகளும் குறிப்பிடப்
பெறுகின்றன. சிவனை முதலிலும், திருமால், முருகன், கொற்றவை
முதலான தெய்வங்களைப்
பின்னரும் வழிபடு தெய்வங்களாகப்
போற்றினர் மக்கள் என்பதைச்
சிலப்பதிகாரம் நமக்குத்
தெரிவிக்கின்றது. அப் பாடலடிகள்
:
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும் (சிலம்பு-5;169-172)
மணிமேகலை
ஆசிரியரும்
நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக (மணி, 1;55)
என்று சிவ வழிபாட்டு நெறியைக் குறிப்பிடுகின்றார்.
மேலும் சமயத்திறம் உரைத்த காதையில் பல்வேறு சமயக்
கருத்துகளையும் எடுத்துக் கூறி, புத்த சமயத்தின் பெருமையை
நிலை நாட்டுகின்றார். சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை
வாயிலாகத் திருமால் வழிபாட்டு நெறியை நாம் அறிய முடிகிறது.
இளங்கோவடிகள் சமணராக இருந்தபோதிலும் பல்வேறு
கோயில்களைப் பற்றியும், பல்வேறு தெய்வங்களைப் பற்றியும்,
வழிபாட்டு நெறிகளையும் பொதுமை நிலையில் கூறியுள்ளார்.
ஆனால் சீத்தலைச் சாத்தனார், பௌத்த சமயக் கருத்துகளை
வலியுறுத்துவதற்காகவே
மணிமேகலை என்னும் காப்பியத்தைப்
படைத்தளித்துள்ளார்.
சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களின்
வாயிலாக, புகார், வஞ்சி, காஞ்சி, மதுரை ஆகிய பெரிய
நகரங்களில் புத்த விகாரங்களும்,
சமணப் பள்ளிகளும் இருந்ததை
அறிய முடிகிறது.
வேதங்களையும் வேள்விகளையும் ஒப்புக் கொள்ளாது,
அறநெறியும் ஒழுக்க நெறியுமே உயர்வை அளிக்கும் என்ற
கொள்கையை வலியுறுத்தி, புத்த, சமண சமயங்கள் அரசியல்
செல்வாக்குடன் தழைக்கத் தொடங்கின.
சைவ வைணவக் கோயில்களில் உருவச்சிலைகள் வைத்து
வழிபடும் வழக்கமும்
அக்காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது.
மேலும் ஆடல், பாடல் விழா நிகழ்ச்சிகள்
இருந்துள்ளதையும்
அறிய முடிகிறது. அதற்கு எதிர்ப்பாக, சமணமும் பௌத்தமும்
கொல்லாமை நெறியை வலியுறுத்தி, துறவறத்தைப் போற்றினஎன்பது நன்கு புலனாகின்றது.