3.4 வைணவ சமயச் சான்றோர்

    தமிழ்நாட்டில் திருமால் வழிபாடு, பண்டைக் காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது. பக்தி இயக்கக்     காலத்தில் பன்னிரு ஆழ்வார்கள் தோன்றித் திருமால் வழிபாட்டை மிகவும் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றினர். திவ்வியப் பிரபந்தங்கள் திருமால்  சமயம் என ஒரு தனிச் சமயப் பிரிவையே தோற்றுவித்தன.

    வைணவ ஆசாரியர் வரலாறுகளைக் கூறும் நூல்கள் ‘குருபரம்பரை’ எனப்படும். வைணவ ஆசாரியர் வரலாறு நாத முனிகளோடு   தொடங்குகிறது. நாலாயிர திவ்வியப்பிரபந்தங்களைத் தொகுத்தவர் இவரே. திவ்வியப் பிரபந்தம் நாலாயிரத்துக்கும் மிகச் சிறந்த வியாக்கியானம் எழுதி, அதனால்‘வியாக்கியான சக்கரவர்த்தி’ என்று புகழ் பெற்றவர் பெரியவாச்சான்
பிள்ளை. இவர் காலம் 13-ஆம் நூற்றாண்டு.

  • வேதாந்த தேசிகர்

    கி.பி. 14ஆம் நுற்றாண்டைச் சார்ந்த வேதாந்த தேசிகர் காஞ்சிபுரத்தில் பிறந்தார். தந்தையார் - அனந்தசூரி, தாயார்- தோத்தாத்ரி அம்மையார். இயற்பெயர் திருவேங்கடமுடையான்     என்பது.

    பெருமாளும்     பிராட்டியாரும் இவருக்கு   ‘உபயவேதாந்தாசாரியார்’, ‘சர்வ தந்திர சுதந்திரர்’ என்று பெயர் சூட்டினர். வேதாந்த மார்க்கத்துச் சிறந்த ஆசாரியராய்த் திகழ்ந்தமையால்‘வேதாந்த தேசிகர்’ என்னும் பெயர் பெற்றார். (தேசிகர் - ஆசாரியர்) நாள்தோறும் காலையிலிருந்து இரவு வரையிலுள்ள நேரத்தைஒழுங்குபடுத்தி இவர் அமைத்திருந்த வேலைத் திட்டம் தினசரியை என வழங்கப்பட்டது. இது வைணவரின் நித்திய கரும  வழிகாட்டியாகக் கருதப்படுகிறது.

    வடமொழியில் இவர் இயற்றிய சாத்திரங்கள் 82 என்பர்.  தமிழில் பாடிய ‘அமிர்த ரஞ்சினி’ முதலான பிரபந்தங்கள் 24. இவை தேசிகப் பிரபந்தங்கள் என அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்கள், வடமொழி வேதத்திற்கு இணையானவை என நிலைநாட்டியவரும் இவரே. சரணாகதித் தத்துவத்தை நிலைபெறச் செய்தவரும் இவரே! அவரின் இனிய பாடலொன்றினைக் காணலாம்.

கண்ணனடியினை எமக்குக் காட்டும் வெற்பு
கருதுமவர் இருவினையும் கடியும் வெற்பு
திண்ணமிது வீடென்னத் திகழும் வெற்பு
......... ......... ............ . .................
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பே

    வைணவ சமயத்திற்குப் பெருந் தொண்டு புரிந்த தேசிகர் தமது 102 ஆம் வயதில் பரமபதம் அடைந்தார்.

  • பிள்ளை லோகாசாரியார்

    திருமாலின் அம்சமாகக் கருதப்படும் பிள்ளை லோகாசாரியார் 14ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். முடும்பை என்னும் நகரில் பிறந்தார். தந்தையார் வடக்குத்திரு வீதிப்பிள்ளை; தாயார் சீரங்க நாச்சியார். இவர் வடமொழியிலும் தமிழ்மொழியிலும் வல்லவர். இவருடைய சீடர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். பிள்ளை லோகாசாரியார், மணிப்பிரவாள நடையில் 18 சாத்திரங்களைப் படைத்துள்ளார்.

    சாதியினால் உயர்வு, தாழ்வு இல்லை. ஞானத்தாலும் பக்தியாலும்  உயர்வு     தாழ்வு உண்டாகிறது என்னும் கொள்கையுடையவர். இவரது ஸ்ரீவசன பூஷணம் (ஸ்ரீவைஷ்ணவ பூஷணம்) என்னும் நூல் தென்கலை வைணவ சம்பிரதாயங்களைத் தெளிவாக விளக்குகிறது. பிள்ளை லோகாசாரியார், மணவாள மாமுனிகள் ஆகியோர் மூலமாகத் தென்கலை சம்பிரதாயம் நிலை பெற்றது.

  • பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

    அட்டப் பிரபந்தம் எழுதிப் பொன்றாப் புகழ் எய்தியவர். சித்திரகவி இயற்றுவதிலும் வல்லவர். இவருக்கு அழகிய  மணவாளதாசர் என்னும் பெயரும் உண்டு. திருவரங்கத்தில் வாழ்ந்த இவர், அவ்வூரில் எழுந்தருளியிருக்கும் பெருமாளைக் குறித்துத் திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத் தந்தாதி, சீரங்க நாயகர் ஊசல், திருநாமம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். திருவேங்கட முடையானைப் பற்றித் திருவேங்கடத் தந்தாதியும், திருவேங்கட மாலையும், நூற்றெட்டுத் திருப்பதிகளைக் குறித்து நூற்றெட்டுத் திருவந்தாதியும், திருமாலிருஞ்சோலையில் குடிகொண்டிருக்கும் பெருமான் மீது அழகர் அந்தாதியும் பாடியிருக்கிறார். இங்கே  குறித்த எட்டு நூல்களே அட்டப் பிரபந்தமாகும். இதில் 790 செய்யுட்கள் உள்ளன.

    வைணவப் பிரபந்தங்களில் அட்டப் பிரபந்தத்திற்குத் தனி  இடம் உண்டு.

    பாதியாய் அழுகியகால் கைய ரேனும்
        பழிதொழிலும் இழிகுலமும் படைத்தா ரேனும்
    ஆதியாய் அரவணையாய் என்பா ராகில்
        அவர் அன்றோ யாம் வணங்கும் அடிக ளாவார்
    சாதியால் ஒழுக்கத்தால் மிக்கோ ரேனும்
        சதுர்மறையால் வேள்வியால் தக்கோ ரேனும்
    போதில்நான் முகன்பணியப் பள்ளி கொள்வான்
        பொன்அரங்கம் போற்றாதார் புலையர்தாமே

எனவரும் திருவரங்கக் கலம்பகப் பாட்டு ஒன்று நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.

  • வில்லிபுத்தூரார்

    இவர் மகாபாரதத்தைத் தமிழில் பாடிப் புகழ் பெற்றவர். தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்த சனியூரில் பிறந்தவர். வைணவக்    குடும்பத்தவர்.   ஆழ்வார்களுள்     ஒருவராகிய  வில்லிப்புத்தூரர் என்றழைக்கப்படும் பெரியாழ்வார் பெயரே இவருக்கு இடப்பட்டது. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அருணகிரி நாதரின் காலமே இவர் காலம். இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளதாகக் கூறுவர்.

    வில்லிபுத்தூரரை ஆதரித்தவன் வரபதி ஆட்கொண்டான்  என்பவன். இம்மன்னன் வக்கபாகை என்னும் இடத்திலிருந்து ஆட்சி செய்து வந்தான். மன்னன் பாரதம் பாடுமாறு வேண்டிக் கொள்ள,இவரும் தமிழில் பாரதத்தைப் பாடினார். இந்த அரசனை வில்லிபுத்தூரார் நூலில் பல இடங்களில் புகழ்ந்து பாடியுள்ளார். 

    வில்லிபுத்தூரார் தமது நூலில் பாரதக் கதையை, 18  பருவங்களில் 4351 பாடல்களைப் பாடியுள்ளார். ஐந்தாம் வேதம்  என்று போற்றப்படும் பாரதம் மிகப்பெரிய நூலாகும். தமிழகத்தில் பாரதக் கதையைத் திருவிழாக்களில் ஒரு மாதம் வரை கூட இரவு நேரங்களில்    கூட்டத்தில் படித்து விளக்குவதும், கூத்தாடி மகிழ்வதுமுண்டு. வில்லிபுத்தூரார் வரம்பின்றி, வடசொற்களை கலந்து
சந்த இனிமை பொருந்தத் தம் நூலைப் பாடியுள்ளார்.