4.4 சித்தர்கள் நெறி    

    சித்தர்கள் யாவரும் மனித நேயம் மிக்கவர்கள், சாதி சமய வேறுபாடு அற்றவர்கள், சமரச சன்மார்க்கத்தைப் போற்றுபவர்கள், போலிச்     சடங்குகளையும், பொருளற்ற சடங்குகளையும், மூடநம்பிக்கைகளையும் கண்டிப்பவர்கள். அவர்கள் மனித வாழ்வு மிக உயர்ந்தது என்று கருதுபவர்கள். உடம்பைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று வற்புறுத்துபவர்கள். மனிதன் சிற்றின்பத்தில் மூழ்கிச் சீரழியக் கூடாது என்று எச்சரிக்கை செய்பவர்கள். யாக்கை நிலையற்றது, செல்வம் நிலையில்லாதது ; இளமை நிலை பெறாதது என்று இடித்துரைப்பார்கள்.

    மனம் தூய்மை இன்றிச் செய்யும் தெய்வ வழிபாடு பயன் தராது. பொய், களவு, கொலை, கோபம், கள், காமம் ஆகியவை மனித இனத்தை நாசமாக்கி விடும். ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்று வாழும் வாழ்க்கை பயனற்றது. எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த இறைவனை மனம், மொழி, மெய்களால் போற்ற வேண்டும். அன்பு,     இரக்கம், தொண்டு ஆகியவற்றைக் கொண்டவர்கள் சித்தர்கள். மேற்காணும் செய்திகளைத் தங்களது வாழ்க்கையில் பின்பற்றி, உலகிற்கு உணர்த்திப் பின்பற்றவும் செய்தார்கள் என்பது குறிக்கத்தக்கது.

4.4.1 சித்தர்கள் கண்ட இறைமை    

    சித்தம் போக்கு சிவன்போக்கு என்பது முதுமொழி. அஃதாவது மனம் போன போக்கெல்லாம் போகக் கூடியவர் சிவபெருமான் என்பதல்ல இதன் கருத்து. சிவனுடைய போக்கு அன்பு நிலை. அதனாலேயே ‘அன்பே சிவம்’ என்றார். திருமூலரும்,

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே

என்கிறார்.

    இவ்வன்பு நிலையை மையமாகக் கொண்டு இறைவனை நேசித்தவர்கள் சித்தர்கள். அதனால் சித்தர்கள் பின்பற்றிய வழி அன்பு நெறியாகும்.

    கடவுள்     வெளியில் இல்லை , நம் உள்ளத்திற்குள்ளே இருக்கின்றான் என்று கூறி வலியுறுத்தியவர்கள் சித்தர்கள்.

4.4.2 சமரச சன்மார்க்க நெறி    

    ஞானம் என்பது மெய்யறிவு. சித்தர் பாடல்களில் பலப்பல ஞான முறைகள் கூறப்படுகின்றன. குரு உணர்த்துவதால் மட்டுமே இந்த ஞான நெறிகளை நன்கு பயில முடியும்.

  • போலி குருமார்கள்
  •     திருமூலர் போலியான குருமார்களுக்கும் உண்மையான குருமார்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கும் போது,    

    குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
    குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
    குருடும் குருடும் குழி வீழுமாறே (திருமந்திரம்)

    என்று கூறுகிறார். இதன் மூலம் மெய்யறிவு பெற்ற ஒரு
    குருவே, மெய்யறிவு பெறாதவர்க்குக் குருவாகும் தகுதியுடையவர்
    ஆவர் என்பதனைத் தெளிவுபடுத்துகின்றார்.

    4.4.3 புறச்சடங்குகளின் பயனின்மை

        புறச்சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மன ஒருமைப்பாட்டை மறக்கக்     கூடாது என்னும் கருத்தைச் சிவவாக்கியர் வற்புறுத்துவதனைக் காணலாம். அப்பாடல் :

    நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலுபுட்பம் சாத்தியே
    சுற்றி வந்து மொண மொணவென்று சொல்லும்
                 மந்திரம் ஏதடா !
    நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

        (சட்டுவம் = கரண்டி)

        இறைவன் வெளியில் எங்கும் இல்லை ; எதிலும் இல்லை. அவன் உள்ளத்தில் இருக்கிறான் என்பதனைக் குறிப்பிடவே இப்பாடலைப் பாடினார். மேலும் எங்குதான் இறைவன் உள்ளான் என்பதனையும் கூறுகிறார்.

         கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே

        இப்பாடல்வழி உண்மை வழிபாடு ஆன்ம வழிபாடுதான்;
    ஆன்மா மாசற்ற தன்மையை அடைதல்தான், என்பதனை அனைவரும் உணர வேண்டும் என்று கூறுகிறார்.

        

    4.4.4 மனிதப்பிறவி ஓர் அரிய பிறவி    

    நந்த வனத்தில் ஓர் ஆண்டி - அவன்
    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
    கொண்டு வந்தான் ஒருதோண்டி - மெத்தக்
    கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி
    .

        இது வாழ்க்கைநிலையை வெளிப்படுத்தும் ஒரு மிகச் சிறந்த பாட்டாகும்.

        இந்த உடம்பு என்பது ஒரு மட்குடம்தான். ஒரு நாள் உடையக்கூடியதுதான். ஆயினும் இது அழிந்து மண்ணாவதற்குள் இதில் ஒழுக்கம் என்னும் நீரை நிரப்பி, பூந்தோட்டம் என்னும் உயிரைப் பாதுகாத்து முக்தி என்னும் மலரை மலர்ந்திடச் செய்ய வேண்டும் என்பதனை உணர வேண்டும். நந்தவனத்து ஆண்டிபோல் பொறுப்பற்று, இந்த உடலைப் பயனற்றதாக்கிவிடக் கூடாது என்பது கருத்தாகும்.

        கிடைத்தற்கரிய பிறவி மனிதப் பிறவி. அரிதின் பெற்ற மனித உடம்பை, ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி வீணாகத் தொலைத்துவிடக் கூடாது என்பதைக் குறிப்பாக உணர்த்துகின்றார் கடுவெளிச் சித்தர்.

    4.4.5 மந்திரக் கலை

        உலகம் தோன்றிய காலம் தொட்டு பூஜைகளும் மந்திரங்களும் உள்ளன. பரம்பொருளின் பல்வேறு தெய்வ வடிவங்களை மந்திரங்கள் மூலமாக, காணவோ அல்லது அணுகவோ முடியும் என்பது சித்தர்களின் வாக்கு. மந்திரங்கள் ஆகாயத்தில் நுண் அலைகளாகக் கலந்திருக்கின்றன. யோகிகளின் உச்சாடனங்களின் வாயிலாக அவைகள் வெளிப்படும்போது மந்திரத்துக்குரிய ஆற்றல்களாக உருப்பெற்று வெளிவருகின்றன. இதன் வழி, அவர்கள் ஒலியின் நுண் அதிர்வுகளால் ஐம்பூதங்களையும் தமக்கு அடி பணிய வைத்த நிலையையே மந்திரக் கலை     என்கின்றார்கள். இம் மந்திரக்கலையை நல்லொழுக்கமுடையவர்கள் பயன்படுத்தினால் பயனடையலாம். போலி     மந்திரவாதிகள், பொதுமக்களை நம்பச் செய்து, பொருளைப் பறிக்கின்றனர். இது தவறு என்பதனாலேயே சித்தர்கள் ரகசியமாகவே வைத்திருந்தனர்.

    4.4.6 சாகாக் கலை    

        சித்தர்கள்     மெய்யறிவினால் ஐம்புலனைக் காத்து வாழ்வதுதான்     முக்தியாம் என்கின்றனர். ஐம்புலன்களின் உணர்வுகளை வழிமுறையோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் ‘பொறிவாயில் ஐந்து அவித்தல்’ என்றும், சிவநெறியைச் சார்கின்ற அறிவு பெற்று, வரும் வழியைத் தெரிந்து கொண்டால் அதன்பின் இந்த உடம்பு சாவை அடைவதில்லை என்றும், ஐந்து புலன்களின் அவாவைக் கட்டறுத்திருந்தால் இந்த உடம்புக்குச் சாவேயில்லை என்றும் கூறுகின்றனர்.

        உடம்பினை முழுவதும் அழியாமல் காத்துக் கொள்ள முடியும். அதற்குவழி ஒன்றே தான். குண்டலி யோக சாதனையால் மூலதாரத்தினின்று எழுப்புகின்ற குண்டலினி சக்தியை நெற்றிக்கு நேராகச் சுழிமுனையிலே வியாபித்திருக்கும் ஞானாக்கினியைக் காண வேண்டும். அப்படிக் கண்டு விட்டால் உடம்பானது என்றைக்கும் அழியாதிருக்கும் என்று கூறி, இதுவே சாகாக் கலை அல்லது மரணமிலாப் பெருவாழ்வு என்கின்றனர். இச்சாகாக் கலையைப் பற்றிச் சித்தர்கள் விரிவாகக் கூறுகின்றார்கள்.

    4.4.7 சித்த வைத்தியம்

        சித்த வைத்தியர்கள் அல்லது சித்தர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டு நோயுடன் வருபவர்களின் கையின் நாடித் துடிப்பின் தன்மைகளை அறிந்து கொண்டு, நோயினை நீக்குவர். மலைகளிலிருந்து கொண்டு வரும் மூலிகைச் செடிகளின் இலைகளைப் பொடியாக்கியும், தைலமாகவும் தருவர். இம்மருந்து உடலில் மெதுவாகக் கரைந்து, இரத்தத்துடன் கலந்தபின் நோய் முற்றிலும் குணமாகி விடும். இதனால் எந்த விதமான பின் விளைவும் இருக்காது. தீராத வியாதிகளும், தீர்த்து வைத்திடும் வைத்தியம் சித்த வைத்தியம் ஆகும். இவ்வைத்தியத்தினை எல்லாச் சித்தர்களும் பின்பற்றியுள்ளனர்.