5.2 பிற சமய இலக்கியங்கள்

நம் இந்தியத் திருநாட்டிற்கு வெளியிலிருந்து வந்த சமயங்களுக்குரிய எண்ணிறந்த இலக்கியங்களைத் தமிழ்மொழி தன்னகத்தே கொண்டுள்ளது.

5.2.1 அயல்நாட்டுக் கிறித்துவர்களின் இலக்கியங்களும்      தமிழ்த்தொண்டும்

தேம்பாவணி, இரட்சண்ய யாத்ரிகம் ஆகியவை கிறித்துவ சமயத்தைச் சேர்ந்த காப்பியங்களாகும். அவ்வாறே இசுலாமிய இலக்கியமாகத் திகழ்வது உமறுப்புலவரின் சீறாப்புராணமாகும். கிறித்துவ சமயம் பரப்ப வந்தாலும் தமிழைக் கற்றுத் தேர்ந்து தமிழ் இலக்கிய இலக்கணங்களுக்கு வளம் சேர்த்த மேலை நாட்டுக் கிறித்துவ அறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

 • வீரமாமுனிவர்

 • வீரமாமுனிவரின் காலம் 1680-1746 ஆகும். இவர் இத்தாலி நாட்டுக் கத்தோலிக்க மதகுரு ஆவார். இவரது இயற்பெயர் கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி. இவர் தமது 30-வது வயதில் சமயத் திருப்பணியாற்றத் தமிழகம் வந்தார். சுப்ரதீபக் கவிராயரிடம் 20 ஆண்டுகள் தமிழ் பயின்றார் . தமிழோடு தெலுங்கு, வடமொழி ஆகியனவும் கற்றார். தமிழில் சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (குட்டித் தொல்காப்பியம்) என்னும் இலக்கண நூல் ஆகியவற்றோடு கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கியங்கள், பரமார்த்தகுருகதை என்னும் உரைநடைக் கதைநூல், தேம்பாவணிப் பெருங்காப்பியம் ஆகியன படைத்தும் எழுத்துச் சீர்திருத்தம் கண்டும் பெருமைகள் சேர்த்தார். தேம்பாவணியில் கன்னிமேரிக்குக் குழந்தை இயேசு பிறந்தபோது ஆயர்கள் இயேசுவைக் காணவந்த     நிகழ்ச்சியைக் கூறும் காட்சிப் படலம் சிறப்பான பகுதி. அதில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல்:-

  எண்ணுளே அடங்கல் இன்றி ஏந்துமாட்சி பூண்டு, வான்
  விண்ணுளே பொலிந்து உவந்த விண்ணவர்க்கு வேந்தனே!
  புண்ணுளே மருந்து நீவிப் போன ஆட்டை மீட்கவோ
  மன்ணுளே எழுந்து வந்து மன்னன் என்று உதித்தனை?

  கடவுளை ஆயனாகவும் மனித ஆன்மாக்களை ஆடுகளாகவும் உருவகித்தல் விவிலியமரபு (மத்தேயு:10-12); பிரிந்து போன ஆடு என்று விவிலியம் கூறுவது, பாவத்தால் ஆண்டவனை விட்டு விலகிச் சாத்தான் என்ற பேய்க்கு அடிமையாகிப்போன மனிதனைக் குறிக்கும். அத்தகைய மனிதர்களை மீட்டுக் காப்பதற்காகவே இயேசு இந்த மண்ணுலகில் அவதரித்தாரோ என்று கோவலர்கள் வியந்து போற்றுகிறார்களாம். 'எண்ணில் அடங்கா உயர்ந்த மாட்சிமை பூண்டு, விண்ணுலகின் வானவர்க்கு வேந்தனாக     இருக்கும் ஆண்டவரே, உம்மைவிட்டுப் பிரிந்துபோன ஆட்டை அதன் புண்ணுக்கு மருந்து தடவி மீட்டுக் காக்கவோ இம்மண்ணுலகில் மனிதனாகப் பிறந்து எழுந்து வந்திருக்கிறீர்?’ எனப் போற்றினார். இது அவர் புலமைக்கு ஒரு சான்று ஆகும்.

 • டாக்டர் ஜி.யு.போப். (1820 - 1907)

 • இவர் இங்கிலாந்து நாட்டவர். தமது 19-வது வயதில் தமிழகம்     வந்தார். மகாவித்துவான் இராமானுஜ கவிராயரிடம் தமிழை முறையாகப்  பயின்றார். முதலில்     திருநெல்வேலி சாயர்புரத்திலும்,     அடுத்துத் தஞ்சையிலும், பின்னர் நீலகிரியிலும் சமயப் பணி புரிந்தார். திருக்குறள், நாலடியார் போன்றவற்றில் தோய்ந்து மகிழ்ந்து அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றுள் சில செய்யுள்களையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.1880 - இல் இங்கிலாந்து சென்று, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழும் தெலுங்கும் போதிக்கும் ஆசிரியராகப் பணிசெய்தார். 40 ஆண்டுகளுக்கும் மலோக நற்றமிழ்ப்பணியாற்றினார். அப்போது திருவாசகத்தில் மனம் ,தோய்ந்து அதனை ஆங்கிலத்தில்     மொழிபெயர்த்து    வெளியிட்டார்; திருக்குறளையும் மொழிபெயர்த்தார். இவரால் தமிழ், உலகறியும் பெருமை பெற்றது.

 • டாக்டர் கால்டுவெல்

 • இவர் அயர்லாந்தில் பிறந்து, ஸ்காட்லாந்தில் கல்வி பயின்று, ஆங்கிலக் கிறித்தவ சங்கத்தின் துணையோடு தமது 23-வது வயதில்     சமயம் பரப்புவதற்காகத் தமிழகம் வந்தார். திருநெல்வேலி     மாவட்டம் இடையன்     குடியை இருப்பிடமாகக்     கொண்டு ,     ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களைக் கிறித்தவராக மாற்றினார். இவர் இலத்தீன், ஈப்ரு, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மேலை மொழிகளிலும், தமிழ்,     தெலுங்கு, மலையாளம்,     துளு     போன்ற தமிழிய (திராவிட) மொழிகளிலும் வடமொழியிலும், அறிவும், புலமையும் பெற்றிருந்தார். இதனால், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், (A Comparative Grammar of the Dravidian Languages) என்ற ஒப்பற்ற ஆராய்ச்சி நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் மூலம், ஆரிய இன மொழிகள் வேறு, திராவிட இனமொழிகள் வேறு; தமிழுக்கும் வடமொழிக்கும் எவ்வித உறவும் இல்லை; அது ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது; இந்தியாவிற்கு வந்து திராவிட மொழிச் சொற்களை வாங்கிக் கலந்ததால், வடமொழியை இந்தோ ஐரோப்பிய  மொழி என்று குறிக்கலாம்’ என்ற உண்மையைச் சான்றுகளுடன் நிறுவினார்.     சென்னைப்     பல்கலைக்கழகம் மற்றும் இராயல் ஆசியக் கழகம் (Royal Asiatic Society) இரண்டும் இவருக்கு இலக்கிய வேந்தர், வேத விற்பன்னர் என்ற பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தன. இவர் எழுதிய திருநெல்வேலி மாவட்ட வரலாறு என்ற நூல் ஓர் அரிய வரலாற்றுக் கருவூலமாகும். இந்தியாவில் 53 ஆண்டுகள் வாழ்ந்த இவர் தமது 77- ஆம் வயதில் கொடைக்கானலில் உயிர்துறந்தார்.     இவரது சமாதி இடையன்குடியில் இவர் எழுப்பிய தேவாலயத்தில் இருக்கிறது.

 • தத்துவ போதகர் (1577 - 1656)

 • இத்தாலி நாட்டுக்காரரான இவரது இயற்பெயர் இராபர்ட் டி நொபலி (Robert De Nobili) என்பதாகும். வடமொழியும், தென்மொழிகளும்     கற்றவர்.     சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி முதலிய நகரங்களில் அவ்வப்போது தங்கி உயர் சாதியினரைக் கிறித்தவர்களாக     மதம் மாற்றினார். வீரமாமுனிவருக்கு நூறு ஆண்டுகள் முன்னர் வாழ்ந்தவர். தமிழில் முதல் உரைநடை நூலை எழுதிய பெருமை இவரையே சாரும். தமிழ் - போர்ச்சுகீசிய அகராதியை உருவாக்கினார். தரங்கம்பாடியில் இவர் பெயரில் ஓர் அச்சகம் இன்றும் உள்ளது.

 • சீகன்பால்கு ஐயர் (1683 - 1719)

 • இவர் செர்மனி நாட்டவர். 1705-இல் தமிழகம் வந்தார் தஞ்சாவூருக்கு     அடுத்த தரங்கம்பாடியில் எல்லப்பா என்பவரிடம் தமிழ்     கற்றார்.     அங்கேயே சமயப் பணியும் புரிந்தார். தரங்கம்பாடியில் ஓர் அச்சுக் கூடத்தையும், அதற்கு உதவியாகக் காகிதத் தொழிற்சாலை ஒன்றையும் நிறுவினார். முதன் முதலில் தமிழ் நூல்களை அச்சிட்ட பெருமை இவரையே சாரும். கமில் சுவலபில், ஆன்டிரநோவ், ரூதின் செம்பியன், டாக்டர் ஆஷர் போன்ற இக்காலத்து வெளிநாட்டுக்     கிறித்தவர்களும்     தமிழுக்கு அரிய தொண்டினை ஆற்றியுள்ளனர்.

  5.2.2 தமிழகக் கிறித்துவர்களின் இலக்கியங்களும்      தமிழ்த்தொண்டும்

  இதுவரை, மேலை நாட்டுக் கிறித்துவ அறிஞர்கள் தமிழுக்குச் செய்த அரும்பணிகளைப் பற்றி அறிந்தோம். இனி நாம் நம் தமிழ்நாட்டில் தமிழர்களாகப் பிறந்த கிறித்தவப் புலவர்களின் தமிழ்ப் பணிகளை ஆராய்வோம்.

 • வேதநாயகம் பிள்ளை (1826 - 1889)

 • தமிழகக் கிறித்தவத் தொண்டர்களில் தலையாயவர் இவர். திருச்சிராப்பள்ளி     குளத்தூரில்     பிறந்தவர். மாயவரத்தில் உரிமையியல் நீதிபதி பதவி வகித்தவர். தமிழில் முதல் புதினமான (நாவல்) பிரதாப முதலியார் சரித்திரம் என்பதை எழுதித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார். இவர் கிறித்தவரேயாயினும் சமரச சன்மார்க்க அன்பர் ஆவார். இவர் எழுதிய சர்வசமய சமரச கீர்த்தனை இதற்குச் சான்று. இவரது நீதி நூல் எளிமையான, இக்கால அறநூலாகும். பெண்ணின் பெருமைகளைக் கூறும் பெண்மதி மாலை எழுதினார். இவர் எழுதிய மற்றொரு புதினம் சுகுண சுந்தரி சரித்திரம் என்பதாகும்.

 • எச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை (1827-1900)

 • திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் வைணவ வளோளர் மரபில் தோன்றி, கிறித்தவராக மாறியவர். இவரைக் கிறித்தவக் கம்பன் என்று அழைப்பார்கள். ஜான் பன்யன் என்பவர் எழுதிய பில்கிரிம்சு பிராக்ரசு (Pilgrims Progress) என்ற நூலைத்     தமிழில்      இரட்சண்ய யாத்ரிகம் என்ற காவியமாக எழுதினார். இது 4000 விருத்தப்பாக்களைக் கொண்ட பெருங்காப்பியம் ஆகும்.

  இவரது இன்னொரு நூல் கிறித்தவர்களின் தேவாரம் என்று போற்றப்படும் இரட்சண்ய மனோகரம் என்பதாகும்.

 • வேதநாயக சாஸ்திரியார் (1774 - 1864)

 • திருநெல்வேலியில் பிறந்து தஞ்சையில் பணிபுரிந்தவர். இவர் இயற்றிய பெத்லகேம் குறவஞ்சி இயேசு நாதரைக் கதைத் தலைவராகக் கொண்ட நாடகம் ஆகும். இவர் இயற்றிய மற்றொரு     நாடகம்  சென்னைப் பட்டணப் பிரவேசம் என்பது.     கர்த்தர் உலகைப் படைத்த திறம் வியந்து ஞானத்தச்சன் நாடகம் ஒன்றை இயற்றினார். மாலை, உலா, கும்மி முதலிய சிற்றிலக்கிய வகையிலும் இவர் நூல்கள் பல எழுதியுள்ளார்.

 • தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர்

 • திருநெல்வேலி சாம்பூர் வடகரை இவரது சொந்த ஊர். தமிழிசைக்கு இவர்     ஆற்றிய     தொண்டு பெரிது. மேலை நாட்டு இசைக்கும், தமிழிசைக்கும் உள்ள ஒற்றுமை     வேற்றுமை,     வடநாட்டு  இசைக்கும், தென்னாட்டு இசைக்கும் உள்ள வேறுபாடு முதலியவற்றைக் கூறியுள்ளார். கருணாமிர்தசாகரம் என்ற     பெயரில் இசைப்பேரிலக்கியம்     படைத்துள்ளார்.     எந்த நாட்டவரிடமும் இல்லாத சிறப்பாக 2000 ஆண்டுகட்கு முந்தியது     தமிழிசை     என்ற    உண்மையினை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.

  கிறித்தவம் தந்த தமிழ் - இயல், இசை , நாடகம், மொழி, ஒப்பாய்வு, உரைநடை, சிறுகதை, புதினம் எனப் பன்முகங்களை உடையதாகும்.

  5.2.3 இஸ்லாமிய இலக்கியங்கள்

  கிறித்துவம் போலவே, நம் இந்தியத் திருநாட்டிற்கு வெளியிலிருந்து வந்த சமயம்     இஸ்லாமியம் ஆகும். இஸ்லாமிய இலக்கியங்கள் பல தமிழில் தோன்றிச் சிறப்புப் பெற்றுள்ளன.

  ஏனைய     மதத்தினர் போலவே இஸ்லாமியர்களும் இன்தமிழுக்குச் செய்யுள்,     உரைநடை இருவகையிலும் எண்ணற்ற     இலக்கியங்களைத் தந்துள்ளனர். மேலும், முனசாத்து, மசலா, நாமா எனப் புதிய சில இலக்கிய வகைகளையும் இஸ்லாமியர்     தமிழுக்கு அறிமுகம் செய்திருப்பதையும் நாம் மறுக்க முடியாது.

 • காப்பியங்கள்

 • உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களுள் பெரியதும், முதன்மையானதும் ஆகும். இது காப்பிய வகையைச் சேர்ந்தது. முகம்மது நபி இதன் நாயகர்; கதீசா இதன் காப்பிய நாயகி ஆவார். சீறாப்புராணம் மூன்று காண்டங்களையுடையது. முதல் காண்டம் ‘விலாதத்துக்காண்டம்’; அதில் 24 படலங்கள் உண்டு. அதில் 21-வது படலம் கதீசா கனவு கண்ட படலம் ஆகும். ‘குவைலிது’ என்ற செல்வந்த வணிகரின் மகள் கதீசா. முகம்மது ஏழை, அனாதை. முகம்மதின் நேர்மையும், கடின உழைப்பும் கதீசாவின் மனத்தை ஈர்க்கின்றன. முகம்மது, ஷாம் நகருக்குச் சென்ற பிறகு கதீசா ஒரு கனவு காண்கிறார். கதீசா வாழும் தெரு வழியாக யானை, குதிரை, இரதம், பல்லக்கு என வானவர்களும், வானவ மகளிரும் நிறைந்துவர முகம்மது பவனி வருவது போலக் கனவு கண்டார். கனவை உண்மை என நினைத்துத் தெருவுக்கு வந்து நோக்க, யாருமில்லாதது கண்டு மனம் வருந்தினார். அது முதல் ஒப்பனை தவிர்த்து, பஞ்சணை தவிர்த்து, ஊண் உறக்கமின்றி, செல்லக்கிளியுடன் கொஞ்சாமலும் தோழியருடன் பேசாமலும் தனித்து இருந்தார். இதனை உமறுப்புலவர்,

  பஞ்சணை பொருந்தார், இருவிழி துயிலார் பழத்தொடு
                    பாலமுது அருந்தார்
  கொஞ்சுமென் குதலைக் கிளியொடு மொழியார்,
          கொழுமடல் செவிக்கிசை கொள்ளார்
  கஞ்சமென் மலர்த்தாள் பெயர்த்திட உலவார்
               கடிமலர் வாசநீர் ஆடார்
  வஞ்சிநுண் இடையார் தம்மிடத்து உறையார்
          
  முகம்மது மனத்திடத்து உறைந்தார்

  என்று வருணித்துள்ளது, கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகியை இளங்கோவடிகள்     வருணிப்பது     போல நயமூட்டுகின்றது  வண்ணக்களஞ்சியப்     புலவரின் இராஜநாயகம்     என்ற இசுலாமியப் பெருங்காப்பியம் குறிப்பிடத்தக்கது. பனி அகமது மரைக்காயர் இயற்றிய சின்ன சீறா என்பதும் இஸ்லாமியக் காப்பியம் ஆகும்.

 • சிற்றிலக்கிய வகைகள்

 • தமிழில் தோன்றிய சிற்றிலக்கிய வகைகளிலும் இஸ்லாமிய இலக்கியங்கள் எழுந்தன. நபி அவதார அம்மானை, பப்பரத்தியார் அம்மானை  முதலியன அம்மானை என்னும் வகையில் பாடப்பட்டனவாகும். திருமதீனத்து அந்தாதி, திருமக்காத் திரிபந்தாதி, நாகை அந்தாதி ஆகியன அந்தாதி வகைக்குச் சான்று . குலாம்     காதிரு நாவலர் இயற்றிய மதுரைச் சங்கத்துப் புலவராற்றுப்படை என்னும் நூல் ஆற்றுப்படைக்குச் சான்று. செய்யது அனமியா சாகிபு     நபிகள்  நாயகத்தின்     பேரில் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். செய்யிது முகைதீன் கவிராயர் முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். நாகூர் ஆண்டவர் பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் ஒரு நூல் உண்டு. பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குச் சான்றாகப் பாத்திமாநாயகி பிள்ளைத் தமிழ் என்பதைக் கூறலாம்.

 • இஸ்லாமியர் தமிழுக்குத் தந்த புதுவகை இலக்கியங்கள்

 • இஸ்லாம் வருகையால் தமிழுக்குச் சில புதிய இலக்கிய வரவுகள் கிடைத்தன. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை நொண்டி நாடகம்,     படைப்போர்,     முனசாத்து, கிஸ்ஸா, மசலா,     நாமா முதலியனவாகும். திருக்கச்சூர் நொண்டி நாடகம் குறிப்பிடத்தக்கது. கதைத் தலைவன் திருட்டு, காமம் முதலிய கெட்ட வழிகளில் சென்று அதற்குத் தண்டனையாகத்     தன் கால்களை இழந்து நொண்டியான பிறகு, தான் செய்த தவறுகளுக்கு வருந்தி மேல்நிலை யடைவதாகக் காட்டுவதே நொண்டி நாடகம் என்பதன் பொது அமைப்பாகும்.

  5.2.4 குறிப்பிடத்தக்க இஸ்லாமியப் புலவர்கள்

  உமறுப் புலவருக்குப்பின் வந்த இஸ்லாமியப் புலவர்களுள் சிலர்குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளைக் காணலாம்.

 • காசிம் புலவர்

 • இவர் திருவடிக்     கவிராயரிடம்     தமிழ் கற்றவர். அருணகிரிநாதரின் திருப்புகழில் மிகவும் ஈடுபட்டவர். நபிகள் நாயகம் ‘பரும்’ என அடியெடுத்துக் கொடுக்க அவர் மீது திருப்புகழ் பாடியுள்ளார். அருணகிரி நாதர் பாடியனவோ என ஐயுறும்படி காசிம் புலவரின் திருப்புகழ் அமைந்துள்ளது. சவ்வாதுப் புலவர்     இவரை      மதுரகவி என்று பாராட்டியுள்ளார்.

 • சவ்வாதுப் புலவர்

 • வசைபாடுவதில் காளமேகப் புலவரைப் போன்று இவர் சொல்லால் சபித்துவிடும் ஆற்றல் கொண்டவர் என்பர். நாகைக்     கலம்பகம், மதீனத்தந்தாதி, முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ் ஆகியன இவர் பாடிய நூல்கள் ஆகும்.

 • சையது முகையதீன் கவிராயர்

 • கோட்டாறு இவருடைய சொந்த ஊர். இவரும் திருப்புகழ் சந்தத்தில் பாடல்கள் புனைவதில் வல்லவர். முகைதீன் பிள்ளைத் தமிழ், மாணிக்கமாலை முதலியன இவர் இயற்றியுள்ள நூல்களாகும்.

 • வண்ணக்களஞ்சியப் புலவர்

 • அமீது இபுறாகிம் என்ற நாகூர்த் தமிழ்ப் புலவரை வண்ணக் களஞ்சியப் புலவர் என அழைத்து மகிழ்ந்தனர். இவர் இராமநாதபுர மாவட்டம் மீசல்  என்ற ஊரில் குடியமர்ந்து வாழ்ந்தார் என்பர். இவர் சுலைமான் நபியின் கதையைக் கூறும் இசை நாயகம் என்ற காப்பியத்தை 2,240 பாக்களால் இயற்றியுள்ளார். தீன் விளக்கம் என்ற புராணமும் இவர் இயற்றியதே.

 • குணங்குடி மஸ்தான் சாகிபு (1788 - 1885)

 • சுல்தான் அப்துல் காதிரு என்ற இயற்பெயருடைய இவர் இளமை முதல் துறவு பூண்டு வாழ்ந்தவர். சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைகளிலும் தனித்து வாழ்ந்து முற்றிய மோனத்தில் ஞானம்   பெற்றவர். மதுரை, காரைக்கால், சென்னை முதலிய ஊர்களில் வாழ்ந்தவர். தாயுமானவர் பாடல்களில் பெரிதும் ஈடுபட்டு அவரது பராபரக்கண்ணிப் பாடல்களைப்     போலவே,     இஸ்லாமியப் பாடல்கள் புனைந்துள்ளார். இவரது பாடல்களைப் பண்டாரங்கள் நாடெங்கும் பாடித் திரிந்தது     உண்டு. திருத்தணிகை சரவணப்     பெருமாளையர் இவர் மீது நான்மணிமாலை பாடியுள்ளது     இவரது பெருமையை     உணர்த்தும். ஐயாசாமி முதலியார் ‘குணங்குடியார் பதிற்றுப்பத்தந்தாதிபாடியிருப்பதும் இவரது பெருமைக்குச் சான்று தரும்.

  இவர் தாயுமானவர் பாடல்களில் பெரிதும் ஈடுபட்டு அப்பாடல்களைப் போலவே தம் பாடல்களைப் பாடினார். குருநிலை, தவநிலை, துறவு நிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை முதலியன இவர் பாடியன. பராபரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி - முதலிய இவருடைய பாடல்களைப் பண்டாரங்களும் ஏழை எளியவர்களும் நாடெங்கும் பாடித் திரிந்ததுண்டு ‘கடல் சூழ்புவியில் உளத் திருளைக் கருணை ஒளியினால் களைந்து விடல் சூழ்பவரில் குணங்குடியான் மிக்கோன்’ என, அவரைச் சரவணப் பெருமாளையர் பாராட்டுவது முற்றிலும் பொருந்தும்.

 • செய்குத் தம்பி பாவலர்

 • இவர் ஒரு சதாவதானி, ஒரே சமயத்தில் நூறு செய்திகளை உள்வாங்கி விடையளிக்கவல்ல நினைவாற்றலுடையவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த இணையற்ற தமிழ்ப்புலவர்.

  நாஞ்சில்     நாட்டு இலங்கை ஊரினராகிய இவர் சங்கரநாராயணரிடம்  கல்வி     கற்றுத் தேர்ந்தவர். யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலரும். கதிரை வேற்பிள்ளையும், வடலூர் வள்ளலாரின் திருவருட்பாவை ‘மருட்பா’ எனக் கூறிப் போராடிய காலத்தில், அஃது அருட்பாவே என வாதிட்டு வள்ளலாரின் பெருமையை நிலைநாட்டியவர். திருநாகூர்த்  திரிபந்தாதி,  திருகோட்டாற்றுப் பதிற்றுப்பத்து. நாயகமான்மிய மஞ்சரி, நீதிவெண்பா, அழகப்பக் கோவை, ஷம்சுத்தாசீம் கோவை என்பன இவர் இயற்றியன.

  இவர்களைத் தவிர வேறு பல புலவர்களும் வாழ்ந்து, இஸ்லாமியத்  தமிழை     இன்சுவைப்படுத்தியுள்ளனர். கவிக்களஞ்சியப் புலவரின் நபி அவதார அம்மானையும், பிச்சை இபுராகிம் புலவரின் திருமதீனத்தந்தாதியும், தக்கலை பீர் முகம்மது சாகிபின் ஞானமணிமாலை, ஞானப் புகழ்ச்சி, ஞானக்குறம், ஞானரத்தினக் குறவஞ்சி, ஞானப்பாட்டு ஆகிய நூல்களும் குறிப்பிடத்தக்கன. திருக்கச்சூர் நொண்டி நாடகம், திருக்காரோணச் சிங்காரக் கும்மி முதலிய சிற்றிலக்கிய நூல்கள் நூற்றுக் கணக்கில் தோன்றியுள்ளன. நொண்டி நாடகம் இஸ்லாமியம் தமிழுக்குத்தந்த புதிய இலக்கிய வகையாகும்.