5.5 பிற்கால நீதிநூல்கள்

சங்க இலக்கியத்தையொட்டிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்னும் நீதிநூல் தொகுப்பைப் பற்றி முன்பே படித்தோம். இந்தக் காலத்திலும் சமயத்தையொட்டிய நிலையில் சில நீதிநூல்கள் தோன்றியதை, பிற்கால நீதிநூல்கள் என்னும் தலைப்பில் விரிவாகக் காணலாம்.

  • வெற்றி வேற்கை

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தென்காசிப் பாண்டிய மன்னருள் ஒருவரே அதிவீரராம பாண்டியர். அவர் இயற்றிய நூல் வெற்றிவேற்கை    என்ற     நறுந்தொகை. அரசர்களுக்கு வெற்றி கையிலுள்ள வேலில் உள்ளது. அது போன்று மக்களின் வாழ்க்கை வெற்றி மனத்திலும் செயலிலும் உள்ளது. கை - என்பதற்குச் செயல் என்பது பொருள். இந்நூலும் தொடரால் பெற்ற பெயராகக் கொள்ளலாம். இதில் 82 அறிவுரைகள் உள்ளன.

     எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
     அக் குடியில் கற்றோரை மேல் வருக என்பர் (38)

     பொய்யுடை ஒருவன் சொல்வன்மை யினால்
     மெய்போலும்மே! மெய்போலும்மே!
     (73)

என்பது இன்றும் சமுதாயத்தில் காண்பது, இது போன்று இரண்டடியால் அமைந்த அறிவுரைகளும், (30); மூன்றடி, (16, 55) நான்கடி, ஐந்தடிகளால் (75) ஆகிய அறிவுரைகளும் உள.

     ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
     இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே     (34)

     நூறாண்டு பழகினும், மூர்க்கர் கேண்மை
     நீர்க்குள் பாசிபோல் வேர்க்கொள் ளாதே     (33)

இவை போன்ற உயர்ந்த உண்மைகள் பல இந்நூலில் இடம்
பெற்றுள்ளன.

  • நீதிநெறி விளக்கம்

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்து பல சிறந்த இலக்கியங்களை உருவாக்கிய குமரகுருபரர் இயற்றிய அறநூல் நீதிநெறி விளக்கம். 101 பாடல்களைக் கொண்டது. இந்நூல் இளமை, செல்வம், யாக்கை இவற்றின் நிலையாமைக்கு     நீரில் தோன்றுபவற்றை உவமையாகத் தருவது எண்ணி இன்புறத்தக்கது. நீரில் குமிழி இளமை - நிறை செல்வம் நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில் எழுத்தாகும் யாக்கை; இவ்வாறு தொடங்குகிறார்     நூலை.     திருக்குறளின்     கருத்துகளும் தொடர்களும் பல வெண்பாக்களில் உள்ளன. எடுத்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்குச் சில அடிப்படைகளையும் கூறுகிறார்.

     மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார்;    
    எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்; செவ்வி  
    அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்  
    கருமமே கண்ணா யினார்         (52)

  • நன்னெறி

பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய மற்றொரு துறவி சிவப்பிரகாச சுவாமிகள். அவர் இயற்றிய அறநூல் நன்னெறி. நல்வழிகாட்டும் நூல் என்பது பொருள். கடவுள் வாழ்த்துப்போக 40 வெண்பாக்களையுடைய நூல். பெண்ணை விளித்துப் பாடுவதாக அமையும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன பல பாடல்கள். மனஉறுதி உடையவர்கள் ஐம்புலன்களை அடக்குவர். அவரே உண்மைப் புலவர். காற்று கல்தூணைச் சுழற்றாது; துரும்பைச் சுழற்றும்.

பொய்ப்புலன்கள் ஐந்தும் நோய், புல்லியர்பால் அன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் துப்பின்
சுழற்றுங்கொல் கல்தூணைச் சூறா வளி? போய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு         (11)

                 (துப்பு = வலிமை)

  • உலக நீதி

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகநாத பண்டிதர் இயற்றியது உலக நீதி என்ற நூல். 13 விருத்தப் பாக்களையுடையது. எல்லாப் பாடல்களும் முருகனை வாழ்த்தி முடிகின்றன. எல்லா அறிவுரைகளும் எதிர்மறையில் வேண்டாம் என்ற சொல்லால் குறிக்கப் பெற்றுள்ளன.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
 
     ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
     வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்;
     போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரியவேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
     மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே     (1)

வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம் (5), இருதாரம் ஒரு நாளும் தேட வேண்டாம் (7), பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம் (8) போன்ற பல நற்கருத்துகள் உலக நீதியில உள்ளன.