|
5.6 உரைநடை இலக்கியங்கள் |
|
பக்தி இலக்கியங்களுக்குப் பின்வந்த இலக்கியங்களில் சமயம் சாராத இலக்கியங்களும் அடங்கும். குறிப்பாக, ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு உரைநடை போன்ற புதுவகைமையும், பழைய இசை, நாடகங்கள் புதுவடிவம் பெறுதலும் இடம் பெறுவதைக் காணலாம். சிற்றிலக்கியங்கள் புதிதாக இடம்பெற்றதைப் பார்த்தோம். இந்த இலக்கிய வளர்ச்சியின் தொடர்ச்சியாக உரைநடை இலக்கியமும் இந்தக் காலப்பகுதியில் வளர்ந்தது எனலாம். ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்து நல்லூரில் பிறந்த இவர் சிதம்பரத்திலும் சென்னையிலும் தங்கி, அச்சுக்கூடம் நிறுவித் தமிழ்ப்பணி ஆற்றினார் என்பர். தாமே முயன்று நூல்களும் அச்சிட்டுப் பாடசாலையும் நடத்தினார். “அவற்றிற்கு ஆகும் பணத்திற்கு வீடுவீடாகச் சென்று அரிசிப்பிச்சை எடுத்துத் தமிழ்த் தொண்டு செய்த சான்றோர் அவர்” என்று டாக்டர் மு.வ. குறிப்பிடுகிறார். அவர் சிறுபிழையும் ஏற்படாதவாறு நூல்களைப் பதிப்பித்தார். முதன்முறையாகத் தமிழில் தொடக்க நிலையினர்க்கான பாடநூல்களை எழுதி வெளியிட்டார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கவும், அவர் வல்லவராக விளங்கினார். திட்டினாலும் பிழையற்ற தமிழில் திட்டுவார் என்பது அவரைப் பற்றிய பாராட்டுரையாக இருந்தது. தமிழில் திருக்குறள் போன்றவற்றைப் பிழையற்ற திருந்திய பதிப்புகளாகக் கொண்டு வந்து, தமிழ்ப் பதிப்புக்கலைக்கு வழிகாட்டினார். சைவமும் தமிழும் தமது இரு கண்கள் எனப்போற்றினார். இலக்கண வினாவிடை, சைவசமய வினாவிடை போல்வன எழுதி, அவற்றை எளிமைப்படுத்திப் பரப்பினார். நன்னூலுக்குக் காண்டிகையுரை எழுதினார். உரைநடை வளர்ச்சியில் இவருக்குச் சிறப்பான இடம் உண்டு. வள்ளலாரின் பாடல்களை ‘அருட்பா’ எனல் தவறு என வாதிட்டவர். சைவ சமயத்தில் கொண்ட ஊன்றிய பற்றே, வள்ளலார் பாடல்களை ஏற்கத் தயங்கியது. உ.வே.சாமிநாதய்யர் இவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர். தம் ஆசிரியருடைய வரலாற்றை மிக விரிவாக எழுதியுள்ளார். இவர் தமிழ் ஏடுகளைத் தேடிக் கொண்டு வந்து அவற்றை அரிய முறையில் பதிப்பித்துத் தமிழை வாழவைத்தார். இவருடைய பதிப்புகள் பிழையற்றவை; விரிவான முன்னுரைகளோடும் ஆய்வுரைகளோடும் கூடியவை. மேனாட்டுப் பதிப்புகள் போன்ற அமைப்புடையவை. பத்துப்பாட்டு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லாருரை, மணிமேகலை, பெருங்கதை, புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் மயிலைநாதருரை முதலியவற்றை பதிப்பித்துள்ளார். புதியதும் பழையதும், கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி முதலிய உரைநடை நூல்களை எழுதியுள்ளார். தமிழ் மக்களால் ‘தமிழ்த்தாத்தா’ என அழைக்கப்படுகிறார். திரு. வி. கலியாணசுந்தரனார் திரு.வி.க. தமிழாசிரியர், தொழிலாளர் தலைவர், பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் தலைவர், காந்தியடிகளின் தொண்டர், தேசபக்தன், நவசக்தி என்ற இதழ்களை நடத்தினார். மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை முதலிய நூல்களை எழுதினார். இவருடைய சொற்பொழிவுகளைத் தொகுத்துத் தமிழ்த் தென்றல் என வெளியிட்டுள்ளனர். இவருடைய பத்திரிகைத் தலையங்கங்களின் தொகுப்பு தமிழ்ச்சோலை என வெளியிடப்பட்டுள்ளது. சொற்பொழிவுக்கலையில் வல்லவர். இவர் எளியவராய், சமரச நோக்கமுடையவராய் அனைவரது நெஞ்சத்திலும் இடம் பெற்றவர். தமிழ் உரைநடையில் அருமையும், எளிமையும், புதுமையும் புகுத்தியவர் என்று அனைவராலும் போற்றப்படுகின்றார். மறைமலை அடிகள் இவர் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை. சிவநெறியையும், சங்க இலக்கியத்தையும் மக்களிடையே பரப்பினர். ஞானசாகரம் என்ற இதழை நடத்தினார். பண்டைத் தமிழரும் ஆரியரும், தமிழர் மதம், பொருந்திய உணவும் பொருந்தா உணவும், மக்கள் நூறாண்டு வாழ்வதெப்படி? போன்ற நூல்களை எழுதினார் இவருடைய ஆராய்ச்சியுரைகளில் பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, திருக்குறளாராய்ச்சி, மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்பன குறிப்பிடத்தக்கன. இவர் திருவாசக விரிவுரை எழுதியுள்ளார் கோகிலாம்பாள் கடிதங்கள், நாகநாட்டரசி என்பன இவருடைய புதினங்கள். திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் ஆகியவை செய்யுள் நூல்கள். இவருடைய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பு இனிமையானது; எங்ஙனம் மொழி பெயர்க்க வேண்டும் என்பதற்குத் தக்க எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பண்டிதமணி இவர் மிருச்ச கடிகம் என்ற வடமொழி நாடகத்தை மண்ணியல் சிறுதேர் எனத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். உதயண சரிதம், சுலோசனை, சுக்கிரநீதி, கௌடலீயம் என்பனவும் இவருடைய மொழிபெயர்ப்பு நூல்களே. திருவாசகத்தில் திருச்சதகம், நீத்தல் விண்ணம், திருவெம்பாவை ஆகிய பகுதிகளுக்கு, கதிர்மணி விளக்கம் என விரிவான உரை கண்டுள்ளார். இவருடைய கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் உரைநடைக் கோவை என இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. செய்யுள் நூல்களும் படைத்துள்ளார்; இருமொழிப் புலமை மிக்கவர் ‘மகா மகோபாத்தியாயர்’ என்னும் சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர். |