5.7 இசை நாடக இலக்கியம்

பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை தமிழ் இசையும் நாடகமும் தனிவளர்ச்சி குன்றிக் கலப்பும் திரிபும் உடையனவாயின. இதனால் தமிழ் நாடக இலக்கியம் உண்டென்பதையும், இசைத்தமிழ் என ஒன்று ஈடும் எடுப்புமின்றி இருந்ததையும் ஆராய்ந்து நிறுவ வேண்டிய தேவை ஏற்பட்டது.

 • இசைத்தமிழ்

 • இசைத்தமிழ் வரலாறும் தமிழில் மிக நீண்டதொன்றாக அமைகிறது. சுவாமி விபுலானந்தரின் யாழ்நூல் கற்பார் இவ்வுண்மையை உணர்வர். தமிழிசை ஆய்வுக்கு அது மிக்க உறுதுணையாக அமையும். இறையனார் அகப்பொருள் உரையில் குறிக்கப்படும். இசைத்தமிழ் நூல்களான - முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, சிற்றிசை, பேரிசை, பரிபாடல், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சமரபு, பஞ்சபாரதீயம், தாளசமுத்திரம், சச்சபுட வெண்பா, இசைநுணுக்கம், தாளவகையோத்து, இசைத்தமிழ்ச் செய்யுள் துறைக் கோவை என்று இனையன பலவும் முற்காலத்து இருந்தன.

  பரிபாடல் இருபத்திரண்டு பாடல்கள் மட்டுமே கிடைக்கின்றன. அப்பாடல்களின் கீழே இசைப்பண்ணும் இசையமைத்தவர் பெயரும் குறிக்கப்படுகின்றன. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என ஏழு நிலைகள் தமிழிற் சுட்டப்படும். சிலப்பதிகாரம் தமிழிசை இலக்கண நூல் என்றே போற்றப்படுகிறது. அதற்குரிய அரும்பதவுரையும்,     அடியார்க்கு     நல்லாருரையும்     இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிகின்றன.

  இடைக்காலத்தில் இசையோடு தமிழ் பாடிய ‘தேவார திருவாசகம்’ தமிழிசை வளர்ச்சியைக் காட்டக் கூடியனவாகும். திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவர் மனைவியார் மதங்க சூளாமணியாரும் தேவாரத்திற்குரிய பண்களை வகுத்து அவற்றை அதன்படி பாடி, நாடெங்கும் பரப்பி வந்துள்ளனர். பரிபாடலும், தேவாரமும் இங்ஙனம் பண்முறைப் படி தொகுக்கப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் திருப்புகழபாடி இசைத்தமிழை வளர்த்தார். ஆயிரத்தெட்டு மேளகர்த்தாப் பண்களுக்கும் அவர் திருப்புகழ் பாடினார்.

  சீர்காழி     அருணாசலக்     கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனைகள, கோபால கிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் போலப் பல நூல்கள் தமிழிசை வளர்ச்சியை நிலை நிறுத்தியமையைப் பிற்காலத்தில் காண்கிறோம். வடலூர் வள்ளலார் இராமலிங்கரும், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரும் முறையே கீர்த்தனைகளும், காவடிச் சிந்தும் பாடினர். குணங்குடி மஸ்தான் சாகிபு, கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர், கவி குஞ்சர பாரதி, முத்துத் தாண்டவர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை     போல்வாரும்     இசைத்தமிழ்     வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றினர்.

  பாரதியார் பண் அமைந்த பாடல்கள் பல பாடினார். தேசிக விநாயகம் பிள்ளை பல கீர்த்தனைகளை இயற்றினார். பாரதிதாசன் இசையமைதி பொருந்திய பாடல்களை மிகுதியும் பாடித் தமிழிசையை வளப்படுத்தினார் என்பதை அவருடைய முதலிரு தொகுதிகளும், இசையமுது தொகுதிகளும் மெய்ப்பிக்கும். யோகி சுத்தானந்த பாரதியார், பெரியசாமித்தூரன் போல்வார் தமிழிசைப் பாடல்களை மிகுதியாக இயற்றினர்.

  அண்ணாமலை அரசர் 1943-இல் தமிழிசை இயக்கத்தைத் தொடங்கித் தமிழிசை வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்தார். சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியாரும், கோவை சி.எஸ். இரத்தினசபாபதி முதலியாரும், இரசிகமணி டி.கே.சியும், கல்கியும் தமிழிசை இயக்கத்தை முன்னின்று செயல்படுத்தினார்கள்.

 • நாடகத்தமிழ்

 • இசையுடன் கூடித் தமிழ் நாடகமும் அன்று முதல் இன்று வரை வளர்ச்சி பெற்றது. மறைந்துபோன நாடக நூல்கள் பல, யந்தம், செயிற்றியம், முறுவல், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, கூத்தநூல் என்று அவை குறிக்கப்படுகின்றன.

  இடைக்காலச் சோழர் காலத்தில் நாடகங்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டதை அக்காலக் கல்வெட்டுகளால் அறிகிறோம். தஞ்சை பெரிய கோயிலில், ‘இராசராசேச்சுவர நாடகம்’ நடிக்கப்பட்டதற்கான குறிப்பு இராசராசன் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அடுத்துவரும் இசை நாடக வளர்ச்சியை நான்குபடி நிலைகளில் வைத்துக் காணலாம். முதலாவது, பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய பள்ளு, குறவஞ்சி வளர்ச்சி; இரண்டாவது கீர்த்தனைகள், நொண்டி நாடகம் ஆகியவற்றின் வளர்ச்சி; மூன்றாவது விலாசம், சரித்திர நாடகங்கள், தெருக்கூத்து, சங்கரதாசு சுவாமிகளின் நாடகங்கள். அரங்க முன்னேற்றம் வாய்ந்த புதிய நாடகங்கள், இக்கால நாடகங்கள். இவை பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு வளர்ச்சிகளாகும்.

 • நொண்டி நாடகம்

 • தீய வழிகளில் நடந்து ஒழுக்கம் கெட்டுப் பரத்தையரிடம் உறவு கொண்டு முடிவில் துன்பப்பட்டு, நொண்டியாகி வருந்துவதாகக் கற்பனை செய்து பாடுவன இவ்வகையினவாகும். சீதக்காதி நொண்டி நாடகம் புகழ் பெற்றது. திருடன் மனம் மாறி மெக்காவிற்குச் சென்று திரும்பி வருவதாக இக்கதை கூறுகிறது. சிந்து என்னும் யாப்பினால் பாடப்பட்டதால் ‘நொண்டிச்சிந்து’ என்றே இப்பாட்டு அழைக்கப்பட்டது. மாரிமுத்துப் புலவர் எழுதியது திருக்கச்சூர் நொண்டி நாடகம். நாட்டுப்புற வழக்காயும், இலக்கிய வழக்காயும் நடிக்கப்பட்ட நொண்டி நாடகங்கள் மிகப்பலவாகும்.

 • கீர்த்தனை நாடகம்

 • சீகாழி அருணாசலக் கவிராயர் பாடியது இராமநாடகக் கீர்த்தனைகள், அசோமுகி நாடகம், சீகாழித் தலபுராணம், அனுமார் பிள்ளைத்தமிழ். எல்லாம் அவர் எழுதியிருந்தாலும், அவருக்கு அழியாப்புகழ் தந்தது இராம நாடகமே. முழுவதும் பாடல்களாகவே இந்நாடகம் அமைந்தது. நல்ல ‘மெட்டு’ அமைந்த மக்கள் விரும்பிக்கேட்கும்படியான இசைப்பாடல்களின் தொகுதி இது. கோபாலகிருஷ்ண பாரதியார் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பாடிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளும் மிகவும் புகழ்பெற்ற நாடகமாகும். நாகைப்பட்டினத்துக்கு அருகில் நரிமணம் என்ற ஊரில் தோன்றிய இவர் இசைத்தமிழில் இணையற்றவர். மாயூரம் வேதநாயகம் பிள்ளையும், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் இவருடைய நண்பர்கள் என்பர். திருநீலகண்ட நாயனார் கீர்த்தனையும் இவரெழுதியதே. இக்காலத்தில் தோன்றிய கீர்த்தனை நூல்கள் மிகப்பலவாகும்.

 • சங்கரதாஸ் சுவாமிகள்

 • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகப்பணி புரிந்து, தமிழ் நாடகத்தைச் சிறக்கச் செய்த துறவி இவர். தெருக்கூத்து வகை புகழ்பெற்றுத் திகழ்வதைப் பார்த்து அதே பாணியில் நாடகங்களை எழுதி மேடையேற்றிப் புகழ் பெற்றார். இவருடைய நாடகங்களில் பாடல்கள் மிகுதியாக இருக்கும். பாடல், பேச்சு ஆகிய இரண்டும் செந்தமிழ் நடையில், இலக்கணப் பிழையின்றிக் காணப்படும். அவை புராணக் கதைகளை ஒட்டியவை; நீதி போதனை மிக்கவை. பிரகலாதன், சிறுத்தொண்டர், பவளக்கொடி, லவகுசா போன்ற நாற்பது நாடகங்களை எழுதி இவர் மேடையேற்றியுள்ளார்.

  நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களடங்கியஅபிமன்யுநாடகத்தை ஒரே இரவில் எழுதினார் என்றால் இவருடைய படைப்பாற்றலுக்குக் கேட்கவும் வேண்டுமா? இவர் காலத்திற்குப் பிறகு சதி சுலோசனா, சதி அனுசூயா, அபிமன்யு சுந்தரி போன்ற சில நூல்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. இவரை இன்றைய ‘தமிழ் நாடகத் தந்தை’ என்று போற்றுகிறார்கள்.

 • சம்பந்த முதலியார்

 • தமிழ்நாடகப் பேராசிரியர் என்று போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் (கி.பி. 1873-1964) தமிழ் நாடக வளர்ச்சியில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார். பாடல்களை மிகவும் குறைத்து, மேனாட்டு முறையை ஒட்டி எளிய உரையாடல்களுடன் கூடிய நாடகங்களை இவர் படைத்துள்ளார். மக்கள் வழக்கைப் பின்பற்றினார். நீதிபதி போன்ற உயர்பதவியில் இருந்தாலும் ‘சுகுணவிலாச சபா’ என்ற நிறுவனத்தின் மூலம் பல நாடகங்களை அரங்கேற்றி, அக்கலைக்கு இருந்து வந்த இழிவைப் போக்கினார். புஷ்பவல்லி என்பது அவர் முதன்முதலாக எழுதி நடித்த சமூக நாடகமாகும். தொண்ணூறு நாடகங்கள் வரை எழுதினார். பிறமொழி நாடகங்கள் பலவற்றை மொழிபெயர்த்துத் தந்தார். இரத்தினாவளி, மனோகரா, இரண்டு நண்பர்கள், கள்வர் தலைவன், வேதாள உலகம் என்பன புகழ் பெற்றவை; சபாபதி நகைச்சுவை நாடகம், மாக்பெத், ஹாம்லெட், வெனிஸ் வணிகன், விரும்பிய வண்ணமே, சிம்பலின் போன்ற சேக்ஸ்பியர் நாடகங்களைத் தமிழில் தந்தார். வடமொழி நாடகங்கள் சிலவும் இவரால் தமிழாக்கப்பட்டன.