6.4 தலபுராணங்களின் தோற்றம்

    தலபுராணங்களின் விரிந்த பரப்பையும், செய்யுள்களால் அமைந்த எண்ணற்ற தலபுராண நூல்களையும் நோக்கினால், இவை தமிழுக்கே உரியன என்று அறுதியிட்டுக் கூறலாம். இருப்பினும் தமிழ்த் தலபுராணங்கள், வடமொழியிலிருந்து தோன்றின என்று கூறுதற்கு அக்காலச் சூழ்நிலைகளே காரணம் என்று கூறலாம்.

    தமிழும் வடமொழியும் அறிந்த தமிழ்ப் புலவர்கள் தமிழிலுள்ள பழங்கதைகளை வடமொழியில் எழுதி, வடமொழித் தலபுராணங்களாக வெளிக்காட்டிப் பெருமை கொண்டனர் என்பதே உண்மையாகும்.

    தலபுராணங்கள் தமிழ் மரபோடு இயற்றப்பட்டன என்பதும் ஒரு சில நூல்கள் மட்டுமே வடமொழியின் தழுவல் என்பதும் தெளிவாகிறது.

    பாமர மக்கள் ஒரு குறிப்பிட்ட தலத்தின் பெருமைகளையும், சிறப்புகளையும், பழைய வரலாறுகளையும் பன்னெடுங் காலமாக வழிவழியாகப் பல கதைகளாகக் கூறி வந்துள்ளனர்.

    சான்று :

    கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை

    மகாமக நீராடல் - கும்பகோணம்

    சித்திரைத் திருவிழா - மதுரை

    மேலும் அக்கதைகளில் இடம் பெறக்கூடிய செய்திகளின் மீதும் நம்பிக்கை கொண்டு போற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பல தலபுராணங்கள் இயற்றப்பட்டன என்பதைச் சான்றுகள் வழி அறியலாம்.

    புராணம் என்றால் புராதனம், பழமை எனப் பொருள்படும். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதலே தலபுராணங்கள் தோன்றியதாக     அறிகிறோம். சான்று : தலபுராணங்களில் முதலாவதாக கருதப்படும் பெரும்பற்றப்புலியூர் நம்பி அவர்கள் இயற்றிய திருவிளையாடற் புராணமாகும். இடைப்பட்ட காலத்தில் (14-16     நூற்றாண்டு வரை) தலபுராணங்கள் அதிகமாக இயற்றப்படவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணங்களாகக் கருதப்படுவன அந்நியர் ஆதிக்கமும், சமயப் பூசல்களும், அமைதியின்மையுமே ஆகும் . இதனால் கோயில்களுக்கும் வழிபாட்டுக்கும் பெருந்தீங்குகள் ஏற்பட்டன. கல்வியிற் சிறந்த புலவர்களை ஆதரிக்கப் புரவலர்கள் இல்லை. அவர்கள் வறுமையினால் வாடினார்கள். இச்சமயத்தில் மூவர் பாடிய தேவாரப் பதிகங்கள் இவர்களுக்குத் துணையாயின.     

    சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் தேவாரத்தில் கூறியதாவது: “புலவர்களே பொய்யர்களைப் பாடி வாடாதீர்கள், இறைவனைப் பாடுங்கள். அவன் இம்மையிலே பொருளும் மறுமையிலே அருளும் தருவான். இதில் ஏதும் ஐயம் வேண்டாம். தலங்களைப் பாடுங்கள், திருப்புகலூர் போன்ற இறைவன் திருத்தலங்களைப் பாடுங்கள்” என்றார்.

    புலவர்களும் இக்கூற்றுக்குச் செவி சாய்க்கும் வகையில் இறைவன் உறையும் திருத்தலங்களுக்குச் சென்று பாடினார்கள். இவை மக்களுக்கு எழுச்சி தரும் இன்ப ஊற்றுகளாயின. அந்நியர் தாக்குதல்களால் அல்லலுற்று மனங்குன்றியிருந்த மக்களுக்கு இத்தலபுராணங்கள் புத்துயிர் தந்தன. அதனால், புராணம் பாடிய புலவர்களைப் புகழ்ந்தனர் ; அவர்களை ஆதரித்து அள்ளி வழங்கினர். சுந்தரர் கூறியது வீண் போகவில்லை. இறைவன் உறையும் ஊரைப் பாடியவர்களுக்குப் பேரும், பெரும்புகழும் கிடைத்தது மட்டுமல்லாமல் சோறும் கூரையும் கிடைத்தன. இதனால் தமிழில் தலபுராண நூல்களும் பெருகின. இந்நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் தொடர்ந்ததால் பல தலபுராணங்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன.

6.4.1 தலபுராணங்களின் நோக்கம்    

    உருவ வழிபாட்டின் அளப்பரிய பயன்களை அனுபவப் பூர்வமாக உணர்ந்த இடங்களே திருத்தலங்களாகும். இவற்றின் தொன்மையான வரலாற்றுச் சிறப்பினை விவரிக்கும் நூல்களே தலபுராணங்கள் ஆகும்.

    பெரும்பாலான தலபுராணங்களில் இறைவன், இறைவி எழுந்தருளித் தேவருக்கும், முனிவருக்கும் அருள்பாலித்த கருத்தை மையமாகக் கொண்டே இயற்றப்பட்டன.

    எனவே, தலபுராணங்கள் தெய்வ நம்பிக்கையும், சமய நம்பிக்கையும் அடிப்படையாகக் கொண்டு சரியை, கிரியை என்னும் இரு நெறிகளை வலியுறுத்தித் திருக்கோயில் வழிபாடு, பூசை, விழா, நோன்பு இவற்றின் பயனைக் கூறுகின்றன.

    தமிழகத்தில் வைதிக சமயம் எழுச்சி பெற்று மக்கள் சமயமாக மாற வேண்டும் என்பதே தலபுராணங்களின் முதன்மை நோக்கமாகும்.

    மனிதர்களைப் பாடி இம்மைக்குப் பொருள் சேர்ப்பதைவிட, இறைவனைப் போற்றி மறுமைக்கும் அருள் சேர்க்க வேண்டும் என்பதும் இத்தலபுராணங்களின் நோக்கமாகும்.

    வாழ்வில் இன்னல் உற்று, அவதியுற்றோரின் நிலையைச் சுட்டிக்காட்டி, பிறர் அவ்வண்ணம் செய்யாமல் தவிர்ப்பதும் இதன் நோக்கமாகும்.

    கதை, பொருண்மை வாயிலாகச் சமயத் தத்துவமும் நீதிக் கருத்துகளும் புகுத்தப் பெறுவதும் இவ்விலக்கிய வகையின் நோக்கமாகும்.

    சமயத் தத்துவங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தலபுராணங்கள் அமைந்திருப்பதால், சமயத்தைப் பின்பற்றுவோர் அதன் கொள்கைகளையும்,     நடைமுறைகளையும் எளிதில் உணர்ந்துகொள்ள முடிகிறது.

    மொத்தத்தில் இம்மை வாழ்வு இனிதே அமைய எளிய வழிகாட்டியாக அமைந்து மறுமைப் பயனையும் நல்குவதே தலபுராணங்களின் நோக்கமாகும்.