6.7 தலபுராண நூல்கள்

    தலபுராணச்     சுவடிகள் பல அழிந்துபோய்விட்டன. எஞ்சியுள்ளவற்றைக்     கொண்டே     நூல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.     தலபுராண     நூல்கள் பல பெயர்களைக் கொண்டும்     அமைந்திருக்கின்றன . சிறந்த தலபுராணங்களாகச் சில நூல்கள் பயிலப்படுகின்றன. தலபுராண நூலாசிரியர்கள்     இலக்கியப் படைப்பாளர்கள் நிலையில் போற்றத்தக்கவர்கள்.     பல     மொழிபெயர்ப்புகளும் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

6.7.1 தலபுராணச் சுவடிகள்

    அக்காலத்தில் எழுதப் பெற்ற நூல்கள் எல்லாம் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டுப் பின்னரே நூலாக்கம் பெற்றுள்ளன. கற்றவர்கள் ஓலைச் சுவடிகளைப் போற்றிப் பாதுகாத்து வந்தனர். கல்லாதவர்கள் ஓலைச் சுவடிகளை ஆடிப் பெருக்கிற்கும், போகிக்கும் பலியாக்கினர். மிக அதிகமான ஓலைச் சுவடிகளை மேற்கண்டவாறு     மட்டுமல்லாமல்,     சீரான பாதுகாப்பு இல்லாததாலும் நாம் இழந்துள்ளோம். ஓலைச் சுவடித் துறை என்ற ஒரு துறையை இன்று பல பல்கலைக்கழங்கள் உருவாக்கியுள்ளன.

    தமிழ்நாட்டில் சுவடி நூலகங்கள் பல உள்ளன. அவை,

 • சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம்: இந்நூலகத்தில்     சுமார்     13,000     தமிழ்ச் சுவடிகளில் நூற்றுக்கணக்கான     தலபுராணச் சுவடிகள் உள்ளன.

 • தஞ்சை சரசுவதி மகால் சுவடி நூலகம் : இங்கு 50 தலபுராணச் சுவடிகள் உள்ளன.

 • தமிழ்ப்     பல்கலைக்கழகச் சுவடி     நூலகம்: இந்நூலகத்தில் சுமார் 4000 - க்கும்     மேற்பட்ட ஓலைச்சுவடிகள் உள்ளன. இவற்றுள் சுமார் 160 தலபுராணச் சுவடிகள் உள்ளன.

 • உ.வே.சாமிநாதையர் நூலகம் : இங்கு மட்டும் சுமார் 140 தலபுராணச் சுவடிகள் உள்ளன. இவற்றுள் பல உ.வே.சா. அவர்களே தொகுத்தவையாகும்.

 • கேரளப் பல்கலைக்கழகச் சுவடி நூலகம் : இங்கு சுமார் 3340 தமிழ்ச் சுவடிகள் உள்ளன. இவற்றுள் சுமார் 140 தலபுராணச் சுவடிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அருணாசல புராணம் மட்டுமே     60 சுவடிகள் இருப்பது சுட்டத்தக்கது.

    தமிழ்நாடு மட்டுமன்றி அயல்நாடுகளிலும் தமிழ்த் தலபுராணச் சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. இங்கிருந்து சென்ற பாதிரியார்களும், ஆங்கிலேய அரசில் பணிபுரிந்த தமிழ் அறிந்த ஆங்கிலேய அதிகாரிகளும், அவற்றின் மீது கொண்ட ஆர்வத்தினாலும், பக்தியினாலும் பல சுவடிகளை அங்கே எடுத்துச்     சென்றுள்ளனர். அவ்வாறு கொண்டு சென்ற தலபுராணங்கள் பல்வேறு நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவை

 • பாரிசு தேசிய நூலகம்
 • இலண்டன் நூலகம்
 • ஆக்ஸ்போர்ட் பாட்லியன் நூலகம்
 • ரோம் நூலகம்
 • ஸ்வீடன் நூலகம்

முதலியன.     இந்நூலகங்களில் காஞ்சிப் புராணம், அருணகிரிப் புராணம், திருக்காளத்திப் புராணம், சீரங்க மகாத்மியம், திருவிளையாடல் புராணம், அருணாசல புராணம் போன்ற சுவடிகள் வைக்கப்பட்டுள்ளன.

6.7.2 பலவகைப் பெயர்களால் அமைந்த புராண நூல்கள்

    தலங்களின் அடிப்படையில் மட்டுமல்லாது வனம், ஆரண்யம், நகர், கோயில், நதி, மலை, பூ முதலானவற்றின் பெயரினை     அடிப்படையாகக்     கொண்டும் புராணங்கள் அமைந்துள்ளன. அதற்குச் சான்றாகச் சில தலபுராணங்களைக் காணலாம்.    

வனம் - கடம்பவனப் புராணம் ;தேவதாருவனப் புராணம் ; வேணுவன புராணம்
ஆரண்யம் (ஆரண்யத் தலபுராணம்) - வில்வாரண்யத் தலபுராணம்
நகர் (நகர்ப் புராணம்) - நெல்லை மாநகர்ப் புராணம் ; கரையேற விட்ட நகர்ப் புராணம்

கோயில் (கோயிற் புராணம்)

- கோயிற் புராணம், இராசமன்னார் கோயிற் புராணம்
நதிப் புராணம் - பஞ்சநதிப் புராணம்; காவேரிப் புராணம்; பெண்ணை நதிப் புராணம்; திருக்கூவப் புராணம்

மலைத் தலபுராணம் - சென்னிமலைத் தலபுராணம்; திருமூர்த்தி மலைப்புராணம்; தணிகாசல புராணம்; மகாதேவ மலைப் புராணம்; திருப்பருப்பதப் புராணம்
பூப் புராணம் (பூவின் பெயரால்) - செவ்வந்திப் புராணம்
இறைபெயர் புராணம் - சிதம்பர சபாநாத புராணம்

இவ்வாறு புராணங்கள் பல உள்ளன எனலாம்.

6.7.3 சிறந்த சில தலபுராணங்கள்

    திருவிளையாடற் புராணம் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில்     வாழ்ந்திருந்த     பரஞ்சோதி     முனிவரால் இயற்றப்பட்டதாகும். இந்நூலை வடமொழியில் உள்ள ஆலாசிய மகாத்மியம்     என்பதை     அடிப்படையாகக்     கொண்டு மதுரையிலுள்ள இறைவனின் திருவிளையாடல்களைப் புராணமாகப் பாடியுள்ளார் என்பர். இந்நூல் வடமொழி நூலை அடிப்படையாகக் கொண்டு அமைத்தாலும், வடமொழி மரபையே தழுவாது தமிழ் மரபை மிகுதியாக அமைத்துப் பாடியுள்ளது சிறப்பாகும். பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடலுக்கு முன்னரே தமிழில் சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், கல்லாடம் போன்ற நூல்களில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் பல கூறப்பெறுகின்றன. இது போன்ற நூல்களின் கருத்துகளையும், தொடர்களையும், சொற்களையும் அமைத்து இப்புராணத்தைப் பாடியிருப்பதே இந்நூலின் தனிச்சிறப்பாகும்.

    இப்புராணம் மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என மூன்று பெரும்பிரிவுகளாக உள்ளது.

    இனிய சந்தங்கள் பல இதில் இடம் பெற்றுள்ளன. சைவப் பெருமக்களால் தினமும் பாராயணம் செய்யப்பட்டு வரும் உயர்ந் தன்மையுடையது இது. இந்நூல் கயிறு சாத்தி உண்மை காணும் வழக்கத்தையும் கொண்டிருக்கும் சிறப்புடையது. சைவ விரதங்களின் பெருமையை எடுத்துரைக்கின்றது.

    தற்போது     நமக்கு     கிடைத்திருக்கும் பாடல்களின் எண்ணிக்கை பாயிரம் உட்பட 3363 ஆகும்.

    பரஞ்சோதி முனிவர் இந்நூலை முடிக்கும் போது இதுவரை கூறியவற்றைப் பற்றிச் சுருக்கமாக எடுத்துரைத்து உள்ளார். இந்த வகையில் வேறெந்தத் தமிழ் நூலும் அமையவில்லை . பரஞ்சோதி முனிவரின் சிறப்புக்கு இது ஒன்றே போதுமானதாகும்.

 • சீகாழித் தலபுராணம்

    திருஞானசம்பந்தரின் திருஅவதாரத் தலம் சீகாழி ஆகும். இத்தலத்துக்குப் பிரமபுரம்,     வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம் முதலிய பன்னிரு பெயர்களுண்டு.

    சீகாழி என்னும் இத்தலத்தைச் சீகாழி அருணாசலக் கவிராயர் சீகாழித் தலபுராணம் பாடியுள்ளார்.

 • சிதம்பர புராணம்

    சிதம்பர புராணம், புராணத் திருமலை நாதரால் இயற்றப் பெற்றது. இதில் 10 சருக்கங்களும், 813 பாடல்களும் உள்ளன.

    இப்புராணத்திற்கு     முன்பே கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியர் இயற்றிய கோயிற் புராணம் இருப்பது பற்றியும், அவர் வழிவந்த சிற்றம்பல நாடி மாணாக்க வழியினரான காஞ்சி ஞானப்பிரகாசரின் மாணாக்கரான தாம் இந்நூலை இயற்றியது பற்றியும்,     புராணத்     திருமலைநாதர் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

 • தணிகைப் புராணம்

    திருத்தணிகைத் தலச்சிறப்பைப் பலபட விரித்துரைக்கும் இப்புராணம் சுவை நலம் பயக்கும் சிறந்த தமிழ்ப் புராணங்களில் ஒன்றாகும்.     தொண்டை     மண்டலத்திலுள்ள திருத்தணிகையம்பதியிலேயே தோன்றிய கச்சியப்ப முனிவர் இயற்றிய இப்புராணம் மிகவும் செறிவுடையதாகும். இந்நூலில் 19 படலங்களும் 3161 பாடல்களும் உள்ளன. 1876ஆம் ஆண்டு முதல் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.

    காப்பு, கடவுள் வாழ்த்து, nஅவையடக்கம் என முற்பகுதி அமைந்து, நாட்டுப் படலம், நகரப் படலம் எனத் தொடர்ந்து படலங்கள் அமைந்துள்ளன.

    வடமொழி ஸ்கந்த புராணத்தில் சங்கர சங்கிதையின் பிற்பகுதியில் கூறப்பெறும் தணிகை மலையின் பெருமையைத் தமிழில் மொழிபெயர்த்துக் கூறுவதாகவும் குறிப்பிடுவர். புராண வரலாற்றுப் படலத்தில் தணிகையின் பெயர்க் காரணங்களைக் கூறுவர். (பா. 59-61) தணிகையின் இருப்பிடம், சிறப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது சுட்டத்தக்கதாகும்.

 • காஞ்சிப் புராணம்

    காஞ்சிப்     புராணம்     இரண்டு காண்டங்களைக் கொண்டுள்ளதாக     அமைந்துள்ளது. முதற் காண்டத்தைப் பாடியவர் திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிட     மாபாடிய கர்த்தராகிய சிவஞான முனிவராவார். இரண்டாவது காண்டத்தைப் பாடியவர் சிவஞான முனிவரின் தலையாய மாணாக்கராகிய கச்சியப்ப முனிவராவார்.

    முதற் காண்டத்தில் மட்டும் 65 படலங்களும், 2743 பாடல்களும் உள்ளன. இவற்றுள் அநேகதங்காவதம், கச்சபேசம், கச்சிமயானம்,     குமரக்கோட்டம்,     திருநெறிக்காரைக்காடு, திருமேற்றளி, திருவோணகாந்தன் தளி, திருமாற்பேறு போன்ற பல தலங்களுக்குரிய வரலாறுகளும் தனித்தனி படலங்களில் விளக்கப்பட்டுள்ளது.

    இரண்டாம் காண்டத்தில் 7 படலங்களும் 2113 பாடல்களும் உள்ளன.

    திருமுறையின் பொருளை யறிதற்குப் பெரிய புராணம் இன்றியமையாதவாறு போல, மெய்கண்டார் நூல்களின் பொருளை யாவரும் எளிதில் விளங்க அறிவதற்கும், உபநிடதம் முதலிய வடநூல்களுக்கு உண்மைப் பொருள் காண்பதற்கும் இக் காஞ்சிப் புராணம் இன்றியமையாததாகும்.

6.7.4 தலபுராண நூலாசிரியர்கள்

    ஒவ்வொரு தலத்தின் சிறப்பையும் வழிவழியாக வந்த கதைகளின் மூலம் அறிந்து, அக்கதையைச் சிறந்த இலக்கிய நடையும், கற்பனைச் சுவையும் சேர்த்து நூலாக இயற்றிய பெருமை தலபுராண நூலாசிரியர்களையே சாரும்.

    இத்தலபுராண ஆசிரியர்கள் அனைவருமே இரு மொழி வல்லவர்கள்,     பல்துறை     அறிஞர்கள், பல நூல்களைப் படைத்தவர்கள், தேவார, திருவாசகங்களில் ஈடுபாடு மிக்கவர்கள். சைவ சமய சாத்திரம், வைணவக் கோட்பாடுகள், பிற சமயக் கருத்துகள், தத்துவக் கருத்துகளைத் தெளிந்தவர்கள், வித்தாரக் கவிஞர்கள், சித்திரக் கவிஞர்கள், நால்வகைப் புலமைத் திறம் மிக்கவர்கள் ஆவர். நாட்டின் பெருமைக்குப் பல காரணங்கள் இருப்பினும், இத்தகைய சிறப்பு மிக்க ஆசிரியர்கள் இயற்றிய தலபுராணம் நாட்டிற்கும் இவர்களுக்கும் பெருமை தருகிறது.

    கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை, பல நூலாசிரியர்கள் பெயர்களை அறிய முடியவில்லை     என்றாலும்,     இருநூற்றுக்கும் மேற்பட்ட தலபுராணங்களின் ஆசிரியர்கள் பெயரை நாம் அறிய முடிகிறது.

    நாம் அறிந்த பல சான்றுகள் மூலம் ஒரே தலபுராணத்தைப் பல நூலாசிரியர்கள் எழுதியுள்ளனர். மேலும், ஒரே ஆசிரியர் பல நூல்களையும் எழுதியுள்ளார் என்பதனையும் அறிய முடிகிறது.

    இத்தலபுராண     நூலாசிரியர்களில் மிகச் சிறந்த ஒரு வழிகாட்டியாக உமாபதி சிவாச்சாரியாரைக் குறிப்பிடலாம்.

    அதேபோல், தமிழ்த் தலபுராண வரலாற்றிலே தனிப்பெரும் புலவராக விளங்கி, மிக அதிகமான தலபுராணங்களைப் பாடிய பெருமை,     இருபத்திரண்டு     தலபுராணங்களைப் பாடிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களையே சாரும்.

    ஒரே நூலை ஒன்றிற்கு மேற்பட்ட நூலாசிரியர்கள் இயற்றினர் என்பதற்கு உதாரணமாக சீகாளத்திப் புராணத்தைக் கூறலாம். இதனைக் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசரும், அவரின் இளவல்களாகிய வேலையப் பிரகாசர், கருணைப் பிரகாசர் ஆகியோரும் பாடினர்.

    சில இடங்களில் நூலாசிரியர் பற்றிய குறிப்பும், தலபுராணம் எழுதிய குறிப்பும் கிடைக்கிறது. சில இடங்களில் கிடைக்காமலும் உள்ளது. அதற்கு உதாரணமாக ஸ்ரீ சிவப்பிரகாசர் எழுதிய தலவெண்பா நூலைக் குறிப்பிடலாம்.

    பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் இன்று வரை பல நூலாசிரியர்கள் தோன்றினார்கள். அவர்களுள் ஒரு சிலரைப் பற்றிக் காண்போம்.

    பழமையான     தலபுராணமாகக்     கருதப்படும் திருவாலவாயுடையார் திருவிளையாடல் என்னும் நூல் பெரும்பற்றப் புலியூர்     நம்பி அவர்களால் பதிமூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகும்.

    பதினான்காம் நூற்றாண்டில் நூலாசிரியர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்த கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியர் அவர்கள் இயற்றிய கோயிற் புராணம் என்னும் சிதம்பர புராணம் என்றும் நம் நினைவில் நிற்பதாகும்.

    மேற்கூறிய கால கட்டங்களைக் காட்டிலும், தமிழ்ப் புராண வரலாற்றில் பதினாறாம் நூற்றாண்டு சிறப்பிடத்தைப் பிடிக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், இருபத்திரண்டு ஆசிரியர்களால் இயற்றப் பெற்ற நாற்பத்தொரு புராணங்களே ஆகும். இவற்றுள் 36 சைவ புராணங்கள், 5 வைணவப் புராணங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    பதினேழாம் நூற்றாண்டில் அருணாசல புராணம் பாடிய சைவ  எல்லப்ப நாவலர், திருக்கூவப் புராணம் பாடிய சிவப்பிரகாச சுவாமிகள் திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் ஆகிய மூவரும் சிறப்பிடம் பெறுகின்றனர்.

    பதினெட்டாம் நூற்றாண்டில் தலபுராண வளர்ச்சிக்குப் பெருங்காரணமாகத்     திகழ்ந்தவர்கள் சிவஞான முனிவரும் (காஞ்சிப் புராணம்), கச்சியப்ப முனிவரும் (தணிகைப் புராணம்) ஆவர்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்த் தலபுராணங்களை மிகுதியான எண்ணிக்கையில் (22) இயற்றி, சாதனை படைத்தவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் ஆவார்.

 • தலபுராண உரையாசிரியர்கள்

    பழங்காலத்தில்     தலபுராணங்களுக்கு உரை நூல்களே தேவையில்லாமல்     இருந்ததற்குக்     காரணம் அக்காலத்தில் புலவர்கள்     இறைவன் உறையும் தலத்தின் சிறப்பினையும், பெருமையினையும் பாடி, மக்களிடம் சென்றடையச் செய்தனர். அதன்பிறகு  புராணிகர்கள்     இப்புராணங்களைக் கதாகாலட்சேபமாகச்  (சொற்பொழிவாக) சொல்லும் போது அவர்தம் விரிவுரையைக் கேட்பதே வழக்கமாயிற்று.

    காலம் செல்லச் செல்ல, காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப இந்நூல்களுக்கு உரை எழுத வேண்டிய அவசியம் உண்டாயிற்று. ஆதியில் இருந்த தலபுராணங்களில் பெரும்பாலும் குறிப்புரைகள் மட்டுமே இருந்தது. விளக்கவுரை, விருத்தியுரை செய்திகள் கிடைப்பதற்கு அரிதாயிருந்தது.

    எனவே,     செய்யுள் நடையிலான தலபுராணங்களை அனைவரும் படித்துப் பயன் பெறும் வகையில், அதை அப்படியே பொழிப்புரையாக, உரைநடை வடிவில் பலரும் இயற்றினர்.     பல     நேரங்களில்     மூல நூலாசிரியர்களே உரையாசிரியர்களாகவும்     இருந்துள்ளனர்.     அவர்களுள், உ.வே.சாமிநாதையர்,     நல்லூர்     ஆறுமுக     நாவலர், நா.கதிரைவேற்பிள்ளை, தணிகைவேள் பாரதியார், பூவை கல்யாண சுந்தர முதலியார், வேங்கடராம சாத்திரி, ச.சின்னப்பாவு முதலியார், வ.த.சுப்பிரமணிய பிள்ளை, சிவ.சோலைமுத்துப்     பிள்ளை, இராமேசுவரம் முத்து விசயம் பிள்ளை, ஈழம் மாப்பண முதலியார், சாமிநாத தேசிக சுவாமிகள் முதலானோர் குறிப்பிடத்தக்கவராவர். இவர்கள் எழுதிய உரைநூல்களுக்குச் சிறந்த புலவர்கள் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார்கள் என்பது குறிக்கத் தக்கது.

    இவ் உரையாசிரியர்களின் நோக்கம், செய்யுள் நடையில் தலபுராணங்கள் இருந்த பொழுது, அது கற்றறிந்தவர்களுக்கு மட்டுமே பயன்பட்டது. அதுவே மிக எளிமையாக வசனம், சுருக்கம், பொழிப்புரை, தெளிவுரை, வரலாறு போன்ற பல செய்திக் குறிப்புகளுடன்     உரைநடை     வடிவில் வெளியிடப்படுவதால், தமிழ் அறிந்த     அறிஞர்கள் மட்டுமன்றி அதன்பால் பற்றுக் கொண்டோரும் படிக்கும் வண்ணம் எளிமை பெற்றது.

6.7.5 மொழிபெயர்ப்புகள்

    நம்     மொழியில் சிறந்தனவாக உள்ளவற்றைப் பிற மொழியிலும், பிறமொழியில் சிறந்தனவாக உள்ளவற்றை நம் மொழியிலும்  மொழிபெயர்ப்பது     இலக்கிய வகைமையில் புதிதானதல்ல. அவ்வகையில் தலபுராணங்களிலும் இந்நிலைமை அதிகமாகவே     காணப்படுகிறது.  எல்லாரும் எல்லாச் செய்திகளையும் அறிந்துகொள்ளும் ஆர்வமே மொழிபெயர்ப்புக்கு மிக முக்கியமான காரணமாகும்.

    முதலில் தமிழில் எழுதப் பெற்ற கோயில் பற்றிய புராணங்களைப் பெருமை கருதி வடமொழியில் எழுதினர். காலப்போக்கில் வடமொழியிலிருந்தே தலபுராணங்கள் தமிழிலே இறக்குமதியானது என்னும் கருத்துப் பரவியது.