2.5 தொண்ணூறுகளுக்குப் பின் கவிதை

     இரண்டாயிரம் ஆண்டுக் கவிதையின் போக்கில் பல மாறுதல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. உலகமயமாதல், நகர்மயமாதல், தொழில்மயமாதல், சமூக அரசியல் நிகழ்வுகள், தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சி ஆகியன பிற இலக்கியத் துறைகளைப் பாதித்ததைப் போலவே கவிதைத் துறையையும் பாதித்தது.

     புதிய இலக்கியக் கோட்பாடுகளான பின்நவீனத்துவம், இருத்தலியம் போன்றவற்றின் தாக்கமும் தமிழில் கலந்தன. இவற்றையெல்லாம் உள்வாங்கிய தொண்ணூறுகளில் கவிதை மரபு முற்றிலும் வேறுபட்டது.

     தொண்ணூறுகளுக்குப்     பின் வந்த கவிதைகளின் போக்குகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

  • திராவிட இயக்கத் தாக்கம், இனக்குழு அடையாளம், தொன்மம், மண்சார்ந்த படைப்பு என வெளிப்படும் கவிதைகள்.
  • தலித் கவிதைகள்
  • பெண்ணியக் கவிதைகள்
  • பின்நவீனத்துவக் கவிதைகள்

2.5.1 மண்சார்ந்த கவிதைகள்

     உலகம் பற்றிய பார்வையில் கவிதைகள் உருவானபோதும், உள்ளூர் பற்றிய அறிவைத் தமிழன் தேடாதிருந்தான். அப்போக்குத் தொண்ணூறுகளில் உடைபட்டது.

  • சாதாரண மனிதர்கள் பற்றிய கவிதைகளை முதலில் படைத்தவராக பழமலையைக் கூறலாம். உழைக்கும் மக்கள், சிறு தெய்வங்கள், தம் வளர்ப்புகளான ஆடு, மாடு, கோழி எனப் பலவற்றையும் தம் கவிதைகளில் உலவ விட்டார். வரலாற்றை இயக்குபவர்கள் மக்கள்தாம் என்பதைக் கவிதை வழி உணர்த்தினார். சனங்களின் கதை எனும் அவருடைய கவிதைத் தொகுப்பு அவ்வாறு அமைந்ததே.
  • கவிஞர் பழமலையின்     தொடர்ச்சியாகவும், தனித்த அடையாளங்களைக் கொண்டவர்களாகவும்     அறிவுமதி, வித்யாசாகர், இலக்குமி குமாரன், ஞான திரவியம், என்.டி.ராஜ்குமார்,     மகுடேஸ்வரன்     ஆகியோரைச் சொல்லலாம்.
  • சிற்றூர், கிராமம் சார்ந்த வாழ்க்கைச் சித்திரங்கள் நகர்மயமாதலின் விளைவு, வாய்மொழி வழக்கில் எழுதும் தன்மை, உள்ளூர் அனுபவங்களை     உலகளாவிய போக்குகளுடன் இணைத்தல் எனப் புதிய மாற்றங்களை இக்கவிஞர்களால் தமிழ்க் கவிதை பெற்றது.

2.5.2 தலித் கவிதைகள்

     அதிகாரத்திற்கு     எதிராகவும்,     விடுதலைக்காகவும் எழுந்தவையே தலித் கவிதைகள். பண்பாடு, ஆதிக்கம் எனும் கட்டுகளை உடைப்பதாகவும், தங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள குற்ற உணர்ச்சியை உதறுதல் என்பதற்காகவும் தலித் கவிஞர்கள் கவிதைகளைப் படைத்தனர்.

     என்.டி.ராஜ்குமார், அன்பாதவன், மதிவண்ணன், ராஜமுருகு பாண்டியன், விழி.பா.இதயவேந்தன், எனப் பலர் தலித் கவிதைகளை ஆழத்துடன் எழுதினர்.

     தலித் கவிதைகள் புதிய மொழி அழகுடன் வெளிப்பட்டன. அனுபவங்களின் வீச்சோடு உண்மையைக் கூறுவனவாகக் கவிதைகள் அமைந்தன.

2.5.3 பெண்ணியக் கவிதைகள்

     சங்க காலப் பெண் கவிஞர்களுக்குப் பின் அங்கொருவர், இங்கொருவராகத் தமிழ்க் கவிதைப் பரப்பில் பெண் கவிஞர்கள் அபூர்வமாகவே வெளிப்பட்டனர். 1990-ஆம் ஆண்டிற்குப் பின் ஏராளமான பெண் கவிஞர்கள் தங்களுடைய சுயதன்மையுடன் கவிதைகள் படைத்து வருகின்றனர்.

     நவீனப் பெண் கவிஞர்கள் இன்று ஏராளமாக எழுதி வருகின்றனர். அவர்களில் அணங்கு இதழின் ஆசிரியை மாலதி மைத்ரி. சுகிர்தராணி, சல்மா, சுகந்தி சுப்பிரமணியம், பனிக்குடம் இதழின் ஆசிரியர் குட்டி ரேவதி, வெண்ணிலா, உமா மகேஸ்வரி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

     இக்காலப் பெண் கவிஞர்கள் படைப்பு ஆணாதிக்கம், குடும்ப அமைப்பு ஆகியனவற்றிற்கு எதிராக நிற்கிறது.

     பெண்ணியச் சொல்லாடல், பெண் தன் உடலை எழுதுதல் எனப் புதிய பாதையில் பெண்ணியக் கவிதைகள் செல்கின்றன.

2.5.4 பின்நவீனத்துவக் கவிதைகள்

     ஒரு     படைப்பைப்     படைப்பவன்,     தான் நினைப்பதையெல்லாம்     எழுத     முடிவதில்லை. அப்படி எழுதப்பட்டதை வாசிப்பவன், எழுதியவன் என்ன நினைத்து எழுதினானோ அதை மட்டுமே மனத்தில் கொள்வதில்லை என்பது பின்நவீனத்துவச் சிந்தனை. அந்தச் சிந்தனையின் அடிப்படையில் தமிழில் பல கவிஞர்கள் கவிதைகள் படைத்தனர்.

     பிரேம் - ரமேஷ், யுவன், சூத்ரதாரி, யூமா வாசுகி, பாலை நிலவன், தபசி, யவனிகா ஸ்ரீராம், சங்கரராம சுப்பிரமணியன் எனப் பலர் பின்நவீனத்துவ காலக் கவிதைகள் படைத்து வருகின்றனர்.

2.5.5 ஹைக்கூ கவிதைகள்

     ஜென் பௌத்தத்தின் தாக்கத்தால் ஜப்பானில் தோன்றியது ஹைக்கூ. மூன்றடியில் உலகத்தையே சுருக்கிக் காட்டும் ஹைக்கூ தமிழிலும் பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கின்றது.

  • மூன்று அடிகள், 5, 7, 5 என்ற சீர் அமைப்பில் மிகக் குறுகிய வடிவமாக ஹைக்கூ உள்ளது.
  • தமிழில் சிந்தர், கரந்தடி, துளிப்பா, விடுநிலைப்பா, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை என்று குறிப்பிடப்பட்டாலும் ஹைக்கூ என்ற பெயரே நிலைத்துள்ளது.
  • அமுதபாரதி, அறிவுமதி, தமிழன்பன், புதுவை சீனு, தமிழ்மணி, மித்ரா, முருகேஷ் எனப் பலர் தமிழில் ஹைக்கூ படைக்கின்றனர்.
  • தமிழன்பன் சென்றியு எனும் வகைக் கவிதைகளையும் படைத்துள்ளார்; லிமரைக்கூ என்ற கவிதை வகையையும் படைத்துள்ளனர்.

2.5.6 நவீன கவிதை - மரபும் மாற்றமும்

     நவீன கவிதை தமக்கு முந்தைய கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கின்றது. அவற்றின் உள்ளடக்க, வடிவ வேறுபாடுகளுக்குக்கான காரணங்களை இவ்வாறு பட்டியலிடலாம்.

  • மேலைச் சிந்தனை வழங்கிய அதிகார எதிர்ப்பு, விடுதலை உணர்வு.

  • அம்பேத்கார்,     பெரியார்     போன்ற     சமூக மறுமலர்ச்சியாளர்களது சிந்தனைப் போக்கு, போராட்டம் ஆகியன ஏற்படுத்திய விளைவுகள்.

  • சிறுபத்திரிகைகள் தோற்றம்.

  • மேலைச் சிந்தனைவாதிகளின் கருத்துகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டமை.

  • வணிக இதழ்களும் நவீன கவிதையை வெளியிட்டமை.

  • பிறமொழிக் கவிஞர்களின் கவிதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டமை.