3.1 தமிழின் முதற்கட்ட நாவல்கள்

     அச்சு இயந்திரமும், ஆங்கிலக் கல்வியும் வேர்கொள்ள ஆரம்பித்த போது, வாசிக்கும் பழக்கமும் மக்களிடையே அதிகமானது. தமிழ் நாவல் இலக்கிய வகை தோன்றுவதற்கு முன்பே உரைநடையில் கதை கூறும் மரபு இருந்தது. வீரமாமுனிவரின் உரைநடை தமிழ் நாவலின் தோற்றத்திற்கு அடித்தளம் அமைத்தது. உரைநடையில் நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் கூட இலங்கையைச் சேர்ந்த பொன்னம்பலம் பிள்ளை என்பவர் செய்யுள் வடிவில் நாவல் எழுதினார். அகவல் யாப்பு வடிவத்தில் அமைந்த அந்நாவலின் பெயர் சதாசிவலீலா சரித்திரம் என இந்தியாவில் நாவல் என்னும் நூல் குறிப்பிடுகிறது. அதே போல் ஆதியூர் அவதானி சரிதம் எனும் நாவலும் 1875-இல் செய்யுள் வடிவில் வெளியிடப்பட்டது.

  • மாயூரம் வேதநாயகம் பிள்ளை

     19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தமிழ் அறிஞர் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை சிறந்த ஆங்கிலப் புலமை உடையவர். நாவலின் செல்வாக்கை அறிந்தவர். அதனால் தாமே நாவல் எழுத முயற்சி செய்து 1879-இல் பிரதாப முதலியார் சரித்திரம் எனும் நாவலை எழுதினார்.

     பிரதாப முதலியார் சரித்திரம் சுயசரிதையைப்போல் அமைந்த நாவலாகும். ஓய்வும் வசதியும் பெற்ற பிரதாப முதலியாரே தம் வாழ்க்கையின் நிகழ்ச்சிகளைப் பிறப்பு முதற்கொண்டு சுவையாகச் சொல்கிறார்.

     சமுதாயப் பின்னணி, அரச வாழ்க்கைப் பின்னணி என இரண்டையும் கலந்து நாவல் படைக்கப்பட்டிருந்தது.

  • குருசாமி சர்மா

     பிரதாப முதலியார் சரித்திரத்தை அடுத்து 1893-இல் குருசாமி சர்மா எழுதிய பிரேம கலாவதீயம் என்ற நாவல் வெளியானது. பிரேமன் என்னும் சிறுவன் சிற்றன்னையின் கொடுமைக்கு ஆளாகிறான். அதனால் வீட்டை விட்டு வெளியேறுகிறான், பின் வாழ்க்கையில் அவன் முன்னேறிய நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு கதை அமைகிறது.

     தொடக்கம் முதல் சமூக நாவலாகச் செல்லும் இது, பிற்காலத்தில் ராஜா - ராணி எனச் சரித்திரக் கதையாக மாறுகிறது.     உரையாடல்கள் கொச்சையான நடையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் ஒவ்வொரு பாட்டு அமைந்துள்ளது.

  • ராஜம் ஐயர்

     ராஜம் ஐயர் தமது இருபத்தொன்றாவது வயதிலேயே கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலைப் படைத்தார். 1896-இல் எழுதப்பட்ட இந்நாவல் 1893லிருந்து 1895 வரை தொடர்கதையாக வெளிவந்ததாகும். தமிழில் முதன் முதலாகத் தொடர்கதையாக வெளிவந்த நாவல் கமலாம்பாள் சரித்திரம் எனலாம். விவேக சிந்தாமணி என்ற இதழ் இந்நாவலைத் தொடர்கதையாக வெளியிட்டது.

     ஆபத்துக்கிடமான அபவாதம் என்ற பெயரில் முதலிலும், பின்னரே கமலாம்பாள் சரித்திரம் என்ற பெயரிலும் இந்நாவல் அறியப்பட்டது. நாவலுக்கு இரண்டு தலைப்புகள் வைப்பதைத் தமிழில் முதலில் ராஜம் அய்யரே அறிமுகப்படுத்தினார்.

     நாவலின் ஒட்டுமொத்த உருவுடன், இலக்கணச் சிறப்புடன்     அமைந்த     தமிழின்     முதல் நாவல் இதுவெனலாம். ராஜம் ஐயர் பாத்திரங்களைக் காவியத் தன்மையுடன் அமைத்தார். நகைச்சுவையும், எளிமையும் கமலாம்பாள் சரித்திரத்தைத் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாக்குகிறது.

  • அ.மாதவையா

     1898-ஆம் ஆண்டில் மாதவையா பத்மாவதி சரித்திரம் நாவலை வெளியிட்டார். இளமையிலேயே தந்தையை இழந்துவிட்ட நாராயணன் என்ற சிறுவன், வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிய வரலாறே இந்நாவலின் கதையாகும். 1903-இல் மாதவையா எழுதிய முத்து மீனாட்சி என்ற நாவல் வெளியானது. இந்நாவலை, “தமிழ்ச் சமூக நாவல்களின் வரலாற்றில் ஒரு திருப்பு முனை” என்பார் இரா.தண்டாயுதம். விதவையர் சிக்கலை மையமிட்டும், விதவை மறுமணமே இச்சிக்கலுக்குத் தீர்வு என்றும் நாவலை முடித்தார் மாதவையா. இந்திய மொழிகளிலே இவ்வாறு எழுதப்பட்ட முதல் நாவல் இது ஆகும் எனச் சமூக நாவல்கள் எனும் ஆய்வு நூல் குறிப்பிடுகிறது.

     சமூக ஆய்வும், சமூக விமர்சனமும் மாதவையாவின் நாவல்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. சமூகச் சீர்திருத்த நோக்கத்தில் இவரது நாவல்கள் படைக்கப்பட்டன. பெண் கல்வியின் அவசியம் அவற்றில் வலியுறுத்தப்பட்டது. தற்கூற்று முறையிலேயே மாதவையா கதையை நடத்திச் செல்கிறார்.

  • பிறர்

     1897-இல் பரிதிமாற் கலைஞர் எழுதிய மதிவாணன் என்ற நாவல் வெளியானது. நடராஜ ஐயர் என்பவர் 1896-இல் ஞானபூஷணி என்ற நாவலை வெளியிட்டார். மேலும் 1895 முதல் 1900 வரை மோகனாங்கி, வினோத சரித்திரம், ஜீவரத்தினம், நீலா எனப் பல நாவல்கள் வெளிவந்ததாகத் தெரிகின்றது.

3.1.1 முதற்கட்ட நாவல்களும் மரபு மாற்றங்களும்

     உரைநடையின் வளர்ச்சியும், ஆங்கிலக் கல்வியின் தாக்கமும், வாசிப்புப் பழக்கமும் நாவல் தோன்றக் காரணமாகின.     முதற்கட்ட நாவல்கள் முழுமையும் நாவலுக்குரிய அம்சங்கள் பெறவில்லை     என்றாலும், முழுமையான நாவலுக்குரிய திசையை நோக்கிச் சென்றன எனலாம்.

     வாய்மொழிக் கதைகள் மரபிலேயே சமூக நாவல்களில் கூட ராஜா-ராணி பாத்திரங்கள் வந்தன. உரையாடல்கள் கொச்சை     மொழிகளில்     எழுதப்பட்டன.     இரண்டு பெயர்களையுடையதாக நாவல்களின் தலைப்புகள் அமைந்தன. சீர்திருத்தக் கருத்துகள் நாவல்கள் வழி வெளிப்பட்டன.