| 1940 வரை தமிழில் தோன்றிய நாவல்கள், பெரும்பாலும்
முழுமை பெற்ற நாவல் இலக்கணமுடையவை எனக் கூறமுடியாது.
1940க்குப் பிறகுதான் நாவல் இலக்கண முழுமை பெற்று, புதிய
சோதனை
முயற்சிகளுடன் எழுதப் பெற்றது. 1940-இல் தொடங்கி
இன்றைய
காலகட்டம் வரை உள்ள நாவல்களை மூன்றாம் கட்ட
நாவல்களாகக் கொள்ளலாம். மூன்றாம் கட்ட நாவல்கள்
முந்தைய நாவல்களிலிருந்து மாறுபடக் காரணங்கள் உண்டு.
அவை:
(1) சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த காலம்.
(2) மேலை நாடுகளில் பிறந்த புதிய இலக்கியப்
போக்குகளின் வரவு.
(3) கல்விக் கூடங்கள் பெருகிய நிலை.
(4) படித்த வர்க்கம் புதுமை தேடல்
(5) படைப்பாளிகள் பெருக்கம்.
3.3.1 ஜனரஞ்சகப் படைப்புகளும் இலக்கியப் படைப்புகளும்
மூன்றாம் கட்ட நாவல்களின் காலத்தில் எழுந்த
நாவல்களை,
(1) ஜனரஞ்சகப் படைப்புகள்
(2) இலக்கியப் படைப்புகள்
என இரு பிரிவுகளாகத் திறனாய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
அதிக அளவு வாசகர்கள் படித்தல், பெரும்பாலும்
பொழுதுபோக்கிற்காகப் படித்தல் என்ற நிலையில் உள்ள
நாவல்களை ஜனரஞ்சகப் படைப்புகளாகக் கொள்கின்றனர்.
ஓரளவு வாசகர்களைக் கொண்டதும், சிற்றிதழ்களில்
வெளிவந்ததுமாகிய படைப்பாளிகளின் படைப்புகளை இலக்கியப்
படைப்புகள் எனக் கொள்கின்றனர்.
இவ்விரு வகைகளுக்கு இடைப்பட்டும் பலர்
ஜனரஞ்சமாகவும், இலக்கியத் தரமாகவும் படைப்புகளை
எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ் நாவல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர்
கல்கி
ரா.கிருஷ்ணமூர்த்தி. துப்பறியும் கதைகள் மலிந்த
நிலையிலிருந்த நாவல் உலகத்தை, சற்றே பாதை மாற்றியவர்
கல்கி எனலாம்.
ஆனந்தவிகடனில் பணியாற்றிய கல்கி
1937-இல்
கள்வனின் காதலி எனும் தொடர்கதையை
எழுதினார்.
1939-இல்
தியாக பூமி எனும் தொடர்கதையை எழுதத்
தொடங்கினார். இது திரைப்படமாகவும் வெளிவந்தது. பின்,
கல்கி என்ற இதழைத் தொடங்கி 1941-இல் பார்த்திபன் கனவு,
1944-இல் சிவகாமியின் சபதம், 1948-இல்
அலைஓசை, 1950-
இல் பொன்னியின் செல்வன் எனத் தொடர்ந்து
தொடர்கதைகளாக
வெளியிட்டார். காந்தியப் போராட்டம், சரித்திரப் பின்னணி, நகைச்சுவை
என்பன கலந்ததாகக் கல்கியின் நாவல்கள் அமைந்தன.
தமிழ்ப் பேராசிரியரான மு.வரதராசன்
அகல் விளக்கு,
மண் குடிசை, மலர்விழி, பெற்ற மனம், வாடாமலர்,
கள்ளோ காவியமோ போன்ற பதினைந்து நாவல்களை
எழுதியுள்ளார்.
தூய செந்தமிழ் நடையிலும், குறட் கருத்துகளைப் பரப்பும்
வகையிலும் இவரது நாவல்கள் அமைந்திருந்தன.
ஞானப்பீடப் பரிசுபெற்ற அகிலன் ஏராளமான
நாவல்களை எழுதியுள்ளார். சிநேகிதி, பாவை விளக்கு,
எங்கே போகிறோம், சித்திரப்பாவை என்பன அவற்றில்
சிலவாகும்.
குடும்ப நிகழ்வுகளையே நாவலின் கருவாக அகிலன்
கையாண்டார். பாத்திரங்கள் பேச்சுநடையிலேயே உரையாடின.
மிக எளிய சொற்களையே நாவலில் பயன்படுத்தி
எழுதியுள்ளார்.
தமிழ்ப் பண்டிதராக விளங்கிய நா.பார்த்தசாரதி
தீபம்
என்ற இலக்கிய இதழை நடத்தினார்.
குறிஞ்சி மலர்,
ஆத்மாவின் ராகங்கள், மணி பல்லவம்
எனப் பல
நாவல்களைப் படைத்துள்ளார்.
நா.பார்த்தசாரதியின் நாவல்களில் பாத்திரங்கள் மிக
உத்தமர்களாகவும் சுத்தமானவர்களாகவும் படைக்கப்பட்டனர்.
நல்ல தமிழ் நடையில் நாவல்களைப் படைத்தார்.
1921 - ஆம் ஆண்டில் பிறந்த தி.ஜானகிராமன் தஞ்சை
மண்மணம் கமழ எழுதியவர். அமிர்தம், அம்மா வந்தாள்,
உயிர்த்தேன், அன்பே ஆரமுதே, செம்பருத்தி, மோகமுள்,
மலர் மஞ்சம், மரப்பசு, நளபாகம் என்னும் ஒன்பது
நாவல்களை எழுதியுள்ளார். அவருடைய நாவல்கள்
பெரும்பாலும் இதழ்களில் தொடர்கதைகளாக வந்தவையாகும்.
ஆண் - பெண் உறவுகளைக் கதையின் மையமாகக்
கொண்டு நாவல்களைப் படைத்தார். இசை
அவருடைய
நாவல்களில் முதன்மை பெற்றது. தஞ்சை வட்டார வழக்கு,
எதார்த்தமான கதைப்போக்கு, மறக்கமுடியாத பாத்திரப்
படைப்பு போன்றன தி.ஜானகிராமனின்
நாவல்களின்
சிறப்புக்களாகும்.
சமூகப் பிரச்சினைகளை நாவலில் எழுதிப் புகழ்பெற்றவர்
ஜெயகாந்தன் ஆவார். இயல்பான பேச்சு நடை, தெருவோர
மக்களையும் கதைமாந்தர் ஆக்குதல், சென்னை வட்டாரப்
பேச்சு, போலிப் பகட்டைக் கேலி செய்தல் போன்றன இவர்
நாவல்களில் இடம்பெற்றுள்ளன. பிராமணப் பேச்சு வழக்கு,
ஆங்கில மொழிக்கலப்பு ஆகியனவும் நாவலில் அதிகம்
காணப்படுகின்றன.
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், கோகிலா என்ன
செய்து விட்டாள், யாருக்காக அழுதான், பாரீஸு க்குப்
போ, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்பன அவர்
நாவல்களில் சிலவாகும்.
கொங்கு வட்டார வழக்கில் நாவல்களைப் படைத்தவர்
ஆர்.சண்முகசுந்தரம். “கிராமியச் சூழல்களை முழுதும்
உபயோகித்துப் பிராந்திய நாவல் என்ற துறையை இந்தியாவில்
உருவாக்கியவர்” என்று இவரைப் பாராட்டியிருக்கிறார்
க.நா.சுப்பிரமணியன்.
இவர் கிராமத்து மனிதர்களை இயல்பாகப் படைத்துள்ளார்.
நாகம்மாள், அறுவடை, பூவும் பிஞ்சும், அழியாக்கோலம்
போன்றன இவரின் நாவல்களில் குறிப்பிடத்தக்கனவாகும்.
சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் 1931-இல் பிறந்தார்.
1951-இல் மலையாளத்திலிருந்து தோட்டியின் மகன்
என்ற
நாவலை மொழிபெயர்த்தார். மூன்று நாவல்களை எழுதியுள்ளார்.
காலச்சுவடு என்ற இதழையும் சுந்தர ராமசாமி தொடங்கி
நடத்தினார்.
ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள்,
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்பன இவரின்
நாவல்களாகும்.
தமிழ் நாவல் உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய
புதுமையான நாவல் ஜே. ஜே. சில குறிப்புகள்
எனத்
திறனாய்வாளர்கள் பாராட்டுவர். நகைச்சுவை, எளிய நடை,
புதுமையான சிந்தனை என நாவல்களைப் படைத்தார்
சுந்தரராமசாமி.
தமிழில் நவீனத்துவ நாவல்கள் சுந்தர ராமசாமியின்
படைப்புகளுக்குப் பின்பே அதிகம் தோன்ற
ஆரம்பித்தன.
சமகாலச் சமூகத்தையும் வாழ்க்கையையும் திறனாய்வு
செய்யும் போக்கில் நாவல்களைப் படைத்தவர் பிரபஞ்சன்
எனலாம். புதுச்சேரியில் பிறந்த இவர் பல இதழ்களிலும்
பணிபுரிந்து வந்தார்.
சந்தியா, கனவு மெய்ப்பட வேண்டும், மகாநதி,
மானுடம் வெல்லும், சுகபோகத் தீவுகள், ஒரு மனுஷி
எனப்
பல நாவல்களைப் படைத்துள்ளார்.
புதுவை ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பைக்
கொண்டு வரலாற்று நாவலையும் எழுதியுள்ளார்.
வட்டார வழக்கில் சிறப்பாக எழுதிப் புகழ்பெற்றவர்களில்
நீல.பத்மநாபனும் ஒருவர். இவர் மலையாளம் கலந்த தமிழில்
படைத்த நாவல்கள் இலக்கியத் தரம் வாய்ந்தனவாகும்.
தலைமுறைகள்,
தேரோடும் வீதி,
பள்ளிகொண்டபுரம்,
ஃபைல்கள், உறவுகள்
என்பன
இவரின் சிறந்த நாவல்கள்.
கோவில்பட்டிப் பகுதியான “கரிசல் மண்ணைக்
கண்முன்னே நிறுத்திக் கதை படைத்தவர்” கி.ராஜநாராயணன்
அவர்கள். இவரைத் தொடர்ந்து பலரும் “வட்டார வழக்கு”
நடையில் நாவல்கள் படைத்துள்ளனர்.
1976-இல் கி.ராஜநாராயணன்
கோபல்ல கிராமம் என்ற
நாவலை முதன் முதலில் எழுதினார். இது ஆந்திராவிலிருந்து
தமிழகத்திற்குக் குடியேறிய தெலுங்கு மக்களின்
இடப்பெயர்ச்சியைச் சொல்கிறது.
பிஞ்சுகள், கோபல்லபுரத்து மக்கள் என்பனவும்
இவரின் நாவல்களாகும்.
திருவரங்கத்தில் பிறந்த ரங்கராஜன், சுஜாதா என்ற
புனைபெயரில் ஏராளமான நாவல்களை எழுதியுள்ளார்.
துப்பறியும் கதைகள் மீண்டும் இவரால் உயிர் பெற்றன.
நகைச்சுவை அதிகமாகவும், கதை குறைவாகவும்
இவருடைய நாவல்களில் காணப்படுகின்றன. பிரபலமான
இதழ்களில் இவருடைய நாவல்கள் தொடர்கதைகளாக
வெளிவந்தன.
கனவுத் தொழிற்சாலை, கரையெல்லாம் செண்பகப்
பூ, ஒரு பிரயாணம் ஒரு கொலை, பிரிவோம்
சந்திப்போம், அனிதாவின் காதல்கள்
எனப் பல
நாவல்களை எழுதியுள்ளார்.
நாஞ்சில் நாட்டு வட்டார மொழியில் நாஞ்சில்நாடன்
எழுதி வருகின்றார். 1977-இல் இவரின் முதல் நாவலாக
தலைகீழ் விகிதங்கள் வெளியானது. பின்
என்பிலதனை
வெயில்காயும், மாமிசப் படைப்பு, மிதவை, சதுரங்கக்
குதிரை, எட்டுத்திக்கும் மதயானை
போன்ற நாவல்கள்
வெளியாயின.
நகைச்சுவையுணர்வு, சிறந்த பின்னணி எனப் பல
கலவையால் இவரின் நாவல்கள் எழுதப்பட்டுள்ளன.
1990-களில் குறிப்பிடத்தக்க நாவலாசிரியராக விளங்கியவர்
ஜெயமோகன். இவரது முதல் நாவல் ரப்பர். நாகர்கோவில்
வட்டார வழக்கோடு எழுதப்பட்ட இந்நாவல் பெரும் பாராட்டுப்
பெற்றது.
விஷ்ணுபுரம் காவியப் பாணியிலான ஒரு கற்பனை
நகரத்தில் நிகழும் நிகழ்ச்சிகளையும், அந்நகரின் தோற்றம்,
வளர்ச்சி, அழிவு ஆகியவற்றைச் சித்தரிக்கும் படைப்பு.
பின் தொடரும் நிழலின் குரல், கன்னியாகுமரி,
ஏழாம் உலகம், காடு எனப் பல நாவல்களையும் ஜெயமோகன்
படைத்துள்ளார்.
தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த இமையம் பள்ளி
ஆசிரியராகப் பணிபுரிகிறார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த
இவர் சிறந்த நாவல்களையும் படைத்துள்ளார். 1994-இல்
இவரின் முதல் நாவலான
கோவேறு கழுதைகள் வெளியானது.
பின்
ஆறுமுகம் என்ற நாவலையும் எழுதியுள்ளார்.
2006-ஆம் ஆண்டு
செடல் என்ற நாவல் வெளியானது.
இது குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணைப்
பொட்டுக்கட்டி, அவளை அவளது சுய விருப்பப்படி
வாழவிடாது விலக்கி வைக்கும் பழக்கத்தை மையமாகக்
கொண்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைத்
தன் நாவல்களில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
நாவல், சிறுகதை, கட்டுரைகள் எனப் பன்முகப்
பார்வையுடன் எழுதிவருபவரான எஸ்.ராமகிருஷ்ணன்
நவீனத்துவமிக்க நாவலாசிரியர் ஆவார். இவருடைய
உபபாண்டவம் மகாபாரதக் கதையை மையமாகக் கொண்டு
எழுந்தது. இரண்டாவது நாவலான
நெடுங்குருதி 2003-ஆம்
ஆண்டின் சிறந்த நாவலாகப் பரிசு பெற்றதாகும். 2006-இல்
உறுபசி என்ற நாவலை எழுதினார்.
(1) புதுமுறையில் கதை கூறல்.
(2) மரபிலிருந்து முற்றிலும் விலகிய தன்மை என்பன
எஸ்.ராமகிருஷ்ணனின் சிறப்புத் தன்மைகளாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் மனவேதனைகளை, அவர்கள்
மொழியிலேயே காட்டும் நாவல்கள் தமிழில் கடந்த
பத்தாண்டுகளில் நிறைய வெளியாகியுள்ளன. பூமணி,
சோ.தர்மன், பாமா, சிவகாமி, அழகிய பெரியவன், ராஜ்
கௌதமன் ஆகியோரின் நாவல்கள் இவ்வகையில்
குறிப்பிடத்தக்கனவாகும்.
ராஜ் கௌதமனின் சுய அனுபவ நிலையில் அமைந்த
சிலுவைராஜ் சரித்திரம், காலச் சுமை, லண்டனில்
சிலுவைராஜ்
ஆகிய நாவல்கள் புதிய முறையில்
எழுதப்பட்டனவாகும்.
வாசந்தி, அனுராதா ரமணன், ராஜம் கிருஷ்ணன்,
அநுத்தமா, லட்சுமி, ரமணி சந்திரன், சிவசங்கரி, இந்துமதி
எனப் பலரும் வெகுஜன இதழ்களில் எழுதிப்
பிரபலமானவர்கள் ஆவர். திலகவதி, பாமா, சிவகாமி, உமா
மகேஸ்வரி, சல்மா, பாரத தேவி போன்றோர்
நவீனத்துவத்தைத் தொடும் புதிய மரபில் நாவல் படைத்து
வருகின்றனர்.
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நாவல்கள்
சிறப்பான முறையில், பன்முக அனுபவங்களோடு
வெளிப்படுகின்றன. செ.கணேசலிங்கன், எஸ்.பொன்னுதுரை,
கே.டேனியல் என்போரின் நாவல்கள் வெளியாகியுள்ளன.
ஷோபா சக்தியின்
கொரில்லாம் எனும் இரண்டு
நாவல்களும் வடிவத்தில், உள்ளடக்கத்தில் இதுவரை
எழுதப்பட்ட தமிழ் நாவல்களிலிருந்து வேறுபட்டனவாக
அமைகின்றன.
அசோகமித்திரன், சா.கந்தசாமி, ஜி.நாகராஜன்,
க.நா.சுப்பிரமணியம், சி.சு.செல்லப்பா, விந்தன்,
கு.சின்னப்பபாரதி, தொ.மு.சி.ரகுநாதன், டி.செல்வராஜ்,
ஹெப்சிபா ஜேசுதாசன், லா.ச.ராமாமிருதம்,
எம்.வி.வெங்கட்ராம், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன்,
வண்ணநிலவன், தோப்பில் முகம்மது மீரான் என முந்தைய
தலைமுறை எழுத்தாளர்களின் நாவல்கள் தமிழுக்குப் புதிய
பாதைகளைக் காட்டியனவாகும்.
யுவன் சந்திரசேகர், ச.தமிழ்ச்செல்வி, சாரு நிவேதிதா,
கோணங்கி, பா.ராகவன், க .பஞ்சாங்கம், சுதேசமித்திரன்,
எம்.கோபாலகிருஷ்ணன், ஜே.டி.குரூஸ், எம்.ஜி.சுரேஷ் ஆகிய
இன்றைய தலைமுறையினரின் நாவல்கள் தமிழின்
நவீனத்துவத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளனவாக.
3.3.2
மூன்றாம் கட்ட நாவல்களும் மரபு மாற்றங்களும்
1940-க்குப் பிறகு தோன்றிய நாவல்கள் தமிழின்
வளத்தைக் காட்டின. புதிய சோதனை முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு நாவல்கள் எழுதப்பட்டன.
-
ஜனரஞ்சகப் படைப்புகள், இலக்கியப் படைப்புகள் என
இரு பிரிவுகளாக நாவல்கள் அமைந்தன.
-
வரலாறு, சமூகம் என்ற களங்களைக் கொண்டும்
நாவல்கள் படைக்கப்பட்டன.
-
வட்டார மொழியில் நாவல்கள் தோன்றின.
-
ஆண் - பெண் உறவுகள், பாலியல் சிக்கல்கள்
நாவல்களில் அலசப்பட்டன.
-
எதார்த்த நாவல்கள், பின்நவீனத்துவ நாவல்கள்,
சர்ரியலிச நாவல்கள், இருத்தலியல் நாவல்கள் எனக்
கோட்பாட்டுப் பார்வைகளில் எழுத்துகள் உருவாகின.
-
தலித்திய, பெண்ணிய நாவல்கள் சிறப்பானவையாக
எழுந்தன.
-
புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் வீரியம்
மிக்கனவாகவும் புதுமுறையில் அமைந்தனவாகவும்
இருந்தன.
-
சிறுபத்திரிக்கைகள் நாவல் இலக்கியங்களைத்
திறனாய்வு செய்து அறிமுகப்படுத்தின.
இவையே மூன்றாம் கட்ட நாவல்களின் புதுமைப்போக்கு எனலாம்.
|