6.1 தமிழில் உரைநடை

    தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு இருபதாம் நூற்றாண்டு பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறது. தமிழ்     உரைநடை சங்க காலத்திலேயே தோன்றிவிட்டது. செய்யுள் வடிவமாக வெளிவந்த சங்கக் கவிதைகளைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்கு உரை தேவைப்பட்டது. முதலில் சங்க காலத்தையும் சங்க நூல்களையும் ஆராயும் நோக்கிலேயே உரை எழுதப்பட்டது. பின்னர் வந்த உ.வே. சாமிநாத ஐயர், மறைமலை அடிகள் போன்றோர் சங்க நூல்களுக்குப் பதிப்புரையும் ஆராய்ச்சியுரையும் எழுதியுள்ளனர். சங்குப்புலவர், பொன்னுசாமிப் பிள்ளை ஆகிய இருவரும் சேர்ந்து வில்லிபாரதத்தின் ஒரு பகுதிக்கு உரை எழுதியுள்ளனர். தமிழ் நூல்களுக்கு வெளிநாட்டவரும் உரை எழுதியுள்ளனர்.

    டி.எம். ஸ்காட், ஜி.யூ. போப், வீரமாமுனிவர், கால்டுவெல் போன்ற சமயப் பெரியோர்களான வெளிநாட்டுக்காரர்கள் தமிழ் நூல்களுக்கு உரை எழுதியுள்ளனர்.

6.1.1 தொல்காப்பிய உரைநடை

    பண்டைக் காலம் முதல் இன்றைய காலம் வரை இலக்கிய, இலக்கணங்கள் இரண்டு வடிவில் எழுதப்பட்டன. ஒன்று செய்யுள்; மற்றொன்று உரைநடை என்பனவாகும். முதன் முதலில் செய்யுள் வடிவமே ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவதாக உரைநடை தோன்றிப் படிப்படியாக வளர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. பழந்தமிழ் நூலான தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்பே தமிழில் உரைநடை இருந்தது என்பதைத் தொல்காப்பியம் மூலம் அறிய முடிகிறது.

    தொன்மை தானே     உரையோடு புணர்ந்த பழமை மேற்றே (1496)

    உரைவகை நடையே நான்கென மொழிப (1430)

ஆகிய நூற்பாக்கள் உரை இருந்ததற்கான குறிப்பினைத் தருவதாக உள்ளது. மேலும் நான்கு வகை உரை எழுதப்பட்டதைத் தொல்காப்பியம் கூறுகிறது.

6.1.2 சிலப்பதிகாரம்

    தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். பல புரட்சிகளைச் சிலப்பதிகாரம் செய்துள்ளது என்று கூறலாம். இந்நூலில் உரை பற்றிய செய்திகள் உள்ளன. சிலப்பதிகாரத்தினை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று சொல்வதின் மூலம் உரை பற்றி அறியலாம். உரைப்பாட்டு மடை, உரைபெறு கட்டுரை, கட்டுரை போன்ற உரைநடை பற்றிய சொற்கள் சிலப்பதிகாரத்தில் காணக் கிடக்கின்றன.

6.1.3 இறையனார் களவியல் உரை

    தமிழ் உரைநடை வரலாற்றில் சிறப்பிடம் பெறுவது இறையனார் களவியல் உரையாகும். இதனையே முதல் உரைநடை என்று கூறுவர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இவ்வுரை எழுதப்பட்டிருக்கலாம். இந்நூலுக்கு உரை எழுதியவர் நக்கீரர் ஆவார்.

    இறையனார் களவியல் உரையில் கவிதைப் பண்பு மிகுந்திருப்பதைக் காணலாம். சில இடங்களில் செய்யுள் நடையும் பல இடங்களில் வினாவிடை என்ற முறையிலும் இவ்வுரை அமைந்துள்ளது. இறையனார் களவியல் உரை குறித்து டாக்டர்.மு.வ. அவர்கள், “இக்கவிதைத் தன்மை சிலப்பதிகார உரைப்பாட்டுமடை போன்றது. தமிழ் உரைநடையின் ஆரம்ப காலத்தை கவிதை நிலையிலிருந்து     உரைநிலைக்குத் தமிழ் மாறுகிற ஒரு காலப்பகுதியைக் களவியல் உரை காட்டுகிறது’’ என்று குறிப்பிடுகிறார்.

6.1.4 வைணவ உரை (மணிப்பிரவாள நடை)

    திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவர்கள் வைணவ ஆழ்வார்கள். தமிழ் உலகில் செந்தமிழை வளர்த்த பெருமைக்கு உரியவர்கள் இந்த ஆழ்வார்கள். அவர்கள் இயற்றிய நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை வைணவர்கள் வேதமாகக் கருதுகின்றனர். இப்பாடல்களுக்குக் காலந்தோறும் பல உரைகள் தோன்றின. இவ்வுரைகளை வியாக்கியானங்கள் என்று அழைப்பர். இவை மணிப்பிரவாள நடையில் அமைந்த உரைகளாகும்.

    நாலாயிர திவ்வியப்     பிரபந்தம், அஷ்டப்பிரபந்தம் போன்றவைகளுக்கு ஏராளமான உரைகள் வெளிவந்துள்ளன. திருவேங்கடாச்சாரியார், அண்ணங்கராசாரியார், புருடோத்தம நாயுடு போன்ற உரை வேந்தர்கள் குறிப்பிடத்தக்கோர் ஆவர். மணி என்பது மாணிக்கம். பிரவாளம் என்பது பவளம். மணியும், பவளமும் கலந்தது போன்று வடமொழியும் தமிழ்மொழியும் கலந்து எழுதப்பட்ட உரையாகும். சமணர் காலத்தில் தோற்றம் பெற்ற மணிப்பிரவாள நடையைப் பிற்காலத்தில் வைணவர்கள் வளர்த்தனர். மணிப்பிரவாள நடையில் வைணவ சமய நூல்களுக்கு அமைந்த உரைநடை இருபெரும் பிரிவுகளாகும். ஒன்று ஆழ்வார்களின் பாடல்களுக்கு அமைந்த வியாக்கியானங்கள். மற்றொன்று வைணவப் பெரியோர்களின் வரலாற்றைக் கூறிய நூலாகும்.

6.1.5 சைவ உரைகள்

    சிவபெருமானை     முழுமுதற்கடவுளாகக் கொண்டு வழிபடுவர்கள் சைவ நாயன்மார்கள். சைவர்களால் பாடப்பட்ட தேவாரம், திருவாசகம் முதலிய பன்னிரு திருமுறைக்கும் உரைகள் எழுதப்பட்டுள்ளன. அதேபோல் சைவ சித்தாந்த நூல்கள் அனைத்திற்கும் உரை நூல்கள் உள்ளன. சைவத் திருமடங்களான திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள், காசிமடம் போன்றவை சைவ இலக்கியங்கள் உரையுடன் வெளிவரப் பேருதவி செய்துள்ளன.