6.7. சிறுகதை, நாவல் உரைநடை

    இன்றைய உரைநடை வரலாற்றில் சிறுகதையும் நாவலும் சிறப்பிடம் பெற்றுள்ளன. உரைநடை வளர்ச்சியின் பயனாகச் சிறுகதையும் நாவலும் வளர்ச்சியடைந்தன எனலாம்.

6.7.1. வேதநாயகம் பிள்ளையின் நடை

    வேதநாயகம் பிள்ளை அவர்களை உரைநடை ஆசிரியர் என்று கூறுவதே பொருந்தும். தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதி வெளியிட்டார். மக்களிடையே வழங்கும் பேச்சு வழக்கையும், பழமொழிகளையும் நகைச்சுவையாக எழுதியுள்ளார். வடசொல் கலந்து எழுதியிருப்பினும் இலக்கிய நயமிக்க உரையாகும்.

6.7.2. வ.வே.சு ஐயரின் நடை

    வ.வே.சு ஐயர் அவர்கள், ஹென்றி, எட்கார் ஆலன்போ, கோகேல் போன்ற மேல்நாட்டாரின் சிறுகதைகளையொட்டி, தமிழில் சிறுகதை எழுதியவர். இவரது நடை இலக்கணமுள்ள, செந்தமிழ் நடையாகும். பிறமொழிச் சொற்களைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தியுள்ளார். இவரது குளத்தங்கரை அரசமரம் என்னும் சிறுகதை புதிய உத்திகளைத் தமிழில் புகுத்தியது.

6.7.3. புதுமைப்பித்தன் நடை

     சொ. விருத்தாசலம் என்ற இயற்பெயர் கொண்டவர் புதுமைப்பித்தன். சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர். வசன நடைக்குப் புதுமைப்பித்தன் புது மெருகு கொடுத்தார். இவரது கதைகள் நடப்பியல் என்னும் அடிப்படையில் அமைந்தவையாகும்.

    சிறுகதை உலகில் சாதனை புரிந்த புதுமைப்பித்தன், உரைநடை உலகிலும் சாதனை செய்துள்ளார். சாதாரணச் சொற்களையும் புதுமையும் ஆற்றல் மிக்கதாயும் இவர் நடையில் எழுதிக் காட்டினார்.

    இவரது நடையில் எளிமையும் இனிமையும் இருந்தது. எனினும் சிக்கலும் அழுத்தமும் புதுமையும் கலந்திருந்தன. பொன்னகரம், சாப விமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், ஆண்மை, தனி ஒருவனுக்கு போன்ற அருமையான சிறுகதைகளை எழுதியுள்ளார்.

6.7.4. கல்கியின் நடை

    ‘கல்கி’     என்ற புனைப்பெயர் கொண்டவர் ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள். மறுமலர்ச்சி நடையினைக் கையாண்டு, சிறந்த உரைநடை இலக்கியங்களை எழுதியவர்.

    கல்கி அவர்கள் எழுத்திலும் பேச்சிலும் நகைச்சுவைக்கு முக்கிய இடம் அளித்தார். சில சிறுகதைகளில் மணிப்பிரவாள நடை காணப்படுகிறது. எளிமை, தெளிவு, இனிமை, நகைச்சுவை, கற்பனை     நயம்     சேர்ந்த அழகான உரைநடையை அறிமுகப்படுத்தினார். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலையோசை போன்ற நாவல்களையும் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

6.7.5. ந. பிச்சமூர்த்தியின் நடை

    ந. பிச்சமூர்த்தியின் நடை கவிதை நடையாகும். தெளிவும் எளிமையும் நிறைந்தது. கவிதை நயத்துடன் உவமை நயமும் தனித்தன்மையோடு இவரது நடையில் விளங்குகிறது.

6.7.6. ஜெயகாந்தன் நடை

    ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்கள் இரண்டிலும் சமூகப் பிரச்சனைகளே மேலோங்கி நிற்கிறது. தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், பிச்சைக்காரர், விபச்சாரிகள் போன்றோர் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதியுள்ளார்.

    பேச்சு நடையிலும், வருணனை நடையிலும் இவரது நூல்கள் உள்ளன. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு பிடிசோறு, சினிமாவுக்குப் போன சித்தாளு போன்ற பல உரைநடை நூல்களை இயற்றியுள்ளார்.

6.7.7. சுஜாதா நடை

    சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். இவரது நடையில் எளிமையும் இனிமையும் சுவையும் கலந்துள்ளது. புதுமையும், பல புதுச் செய்திகளும் கலந்து எழுதப்பட்டிருக்கிறது. ஆங்கிலச் சொற்களை அதிகம் கலந்து எழுதுபவர். இவர் நடை ஈர்ப்பும் கற்பனை வளமும் நிறைந்தது.

6.7.8. சாண்டில்யனின் நடை

    சாண்டில்யன்     வரலாற்று     நாவல் படைப்பதில் விருப்பமுடையவர். யவனராணி, கடல்புறா, மன்னன்மகள், மலைவாசல், ஜீவபூமி, கன்னிமாடம், பல்லவ திலகம் போன்ற வரலாற்று     நாவல்களை எழுதியுள்ளார். இவரது நடை எளிமையானது; தெளிவானது; விளக்கமானது; வருணனை மிகுந்தது.