4.2 சங்க காலத்தில் உடம்படுமெய் ஒலிகள்

    சங்க காலத்தில் உடம்படுமெய் ஒலிகள் வழங்கிய நிலையை, அக்காலத்தில் தோன்றிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலும், சங்க இலக்கியங்களும் தெளிவாக அறிவிக்கின்றன.

 • தொல்காப்பியத்தில் உடம்படுமெய் ஒலிகள்
 •     தொல்காப்பியர்     உடம்படுமெய்     ஒலிகள் பற்றி, எழுத்ததிகாரத்தில் உள்ள புணரியலில் ஒரு நூற்பாவில் கூறுகிறார். அந்நூற்பா வருமாறு:

      எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
      உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்
               (தொல். எழுத்து, 140)

      (மொழி - சொல்; உருவு - வடிவு; கொளல் - சேர்த்துக் கொள்ளுதல்; வரையார் - நீக்கார்.)

      “எல்லா உயிர் ஈற்றுச் சொற்களுக்கும் முன்னர், உயிரை முதலாகக் கொண்ட சொற்கள் வரும்பொழுது, அவ்விரு சொற்களுக்கும் இடையே உடம்படுமெய்யினது வடிவைச் சேர்த்துக் கொள்ளுதலை நீக்கார்” என்பது இந்நூற்பாவின் பொருள்.

      இந்நூற்பாவில் தொல்காப்பியர், நிலைமொழியின் இறுதி உயிர்க்கும் வருமொழியின் முதல் உயிர்க்கும் இடையே உடம்படுமெய் வரும் என்று பொதுப்படக் கூறியுள்ளாரே தவிர, எந்தெந்த மெய்கள் உடம்படுமெய்யாக வரும் என்று கூறவில்லை. இருப்பினும் இந்நூற்பாவிற்கு உரை வரைந்த இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தொல்காப்பியர் உடம்படுமெய் என்று குறிப்பிடுவது யகரமும், வகரமும் ஆகும் எனக் கொள்கின்றனர்.

      மேலும் அவ்வுரையாசிரியர்கள் இருவரும், இந்நூற்பாவில் தொல்காப்பியர் வரையார் (நீக்கார்) என்று கூறியிருப்பது கொண்டு, உடம்படுமெய் இரண்டு உயிர்களுக்கு இடையே கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்பதில்லை எனவும், கிளி அரிது, மூங்கா இல்லை (மூங்கா- கீரி) என்றாற் போல அமைந்து வரும் சொற்றொடர்களில் இரண்டு உயிர்களுக்கு இடையில் உடம்படுமெய் இல்லாமலும் வரலாம் எனவும் கருத்துத் தெரிவிக்கின்றனர். உரையாசிரியர்களின் இக்கருத்தை இக்கால மொழியியலாரும் உடன்படுகின்றனர்.

      இவ்வாறு தொல்காப்பியரது நூற்பாவிற்கு விளக்கம் காண வாய்ப்பிருந்தாலும் கூட, ஒருமொழிச் சந்தியில் உடம்படுமெய் இல்லாமல் சொற்கள் வருவது தமிழ்மொழியில் இல்லை.

       சான்று:

      கிளி + ஆ = கிளியா

      கிளி, ஆ என்னும் இருசொற்கள் கிளியா என ஒரு சொல்லாகப்     புணர்ச்சியில் இணைந்துவிடுவதால் இதனை ஒருமொழிச் சந்தி என்பர் (மொழி - சொல்; சந்தி - புணர்ச்சி). ஒருமொழிச் சந்தியில் இவ்வாறு உடம்படுமெய்யுடன் வருவதே நல்ல மொழிநடையாகக் கருதப்படுகிறது. இதை விடுத்து,

      கிளி + ஆ = கிளிஆ

  என்று     உடம்படுமெய் இல்லாமல் சொல் அமைவது வழக்கல்ல.

      அதே நேரத்தில் கிளி + அன்று என்பது, கிளியன்று என உடம்படுமெய் பெற்றோ, கிளிஅன்று என உடம்படுமெய் பெறாமலோ அமையலாம். கிளி + அன்று = கிளியன்று எனவும், கிளி அன்று எனவும் இருசொல்லாகவே இணைந்து வருவதால் இவை இரண்டும் இருமொழிச் சந்தி எனப்படும். இவ்வாறு கட்டாயம் வரவேண்டிய இடத்தில் உடம்படுமெய் பெற்றும், கட்டாயம் இல்லாத இடத்தில் உடம்படுமெய் பெற்றும் பெறாமலும் வரலாம் என்ற விளக்கத்தைக் கூறுவதற்கு ஏற்ற வகையில் தொல்காப்பியரின் இந்நூற்பா இடம் தருகிறது.

      தொல்காப்பியர் காலத்தில் இரண்டு உயிர்கள் ஒன்று சேர்ந்து, உடம்படுமெய் எதுவும் பெறாமல் வழங்கியதற்கு அவரது நூலிலேயே சில சான்றுகள் காணப்படுகின்றன.

      தற்காலத்தில் நாய் என்று நாம் குறிப்பிடும் சொல், தொல்காப்பியர் காலத்தில் நாய் எனவும், நாஇ எனவும் இருவேறு வடிவில் வழங்கியது. இதனை,

      இகர யகரம் இறுதி விரவும்
           (தொல்.எழுத்து, 58)

  என்ற தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பாவால் அறியலாம். நாஇ என்ற சொல் உடம்படுமெய் பெற்ற வருவதாக இருந்தால், நாயி (நா+ய்+இ) என யகர உடம்படுமெய் பெற்றே வரவேண்டும். ஆனால் உடம்படுமெய் பெறாமல் ‘நாஇ’ என்று வழங்கியுள்ளது. ‘நாஇ’ என்ற சொல்லில் உடம்படுமெய் இல்லாமலேயே ஆ, இ என்னும் இரண்டு உயிர்கள் இணைந்து நிற்பதைக் காணலாம்.

      அதேபோலத் தொல்காப்பியர் காலத்தில் தேஎமஎன்ற சொல்லிலும், கோஒன் என்ற சொல்லிலும் உடம்படுமெய் இல்லாமலேயே இரண்டு உயிர்கள் சேர்ந்து வருவதைக் காண்கிறோம். (தேஎம்- தேயம், நாடு, இடம்; கோஒன் - அரசன் அல்லது தலைவன்). இவ்விரு சொற்களையும் சிலர் அளபெடைச் சொற்கள் என்று கூறுவர். அது பொருந்தாது. ஏனெனில் இவ்விரு சொற்களில், ‘கோஒன்’ என்ற சொல்லில் உள்ள ‘ஒன்’ என்பதைச் சாரியை     என்று     தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் (தொல்.எழுத்து,294).

      சான்று:

      கோ + கை = கோஒன்கை (அரசனது கை)

      மேலே கூறியவற்றால் தொல்காப்பியம் தோன்றிய காலத்தில் உடம்படுமெய் ஒலிகளின் வருகை என்பது விருப்பநிலையிலே இருந்தது எனலாம்.

 • சங்க இலக்கியங்களில் உடம்படுமெய் ஒலிகள்
 •     சங்க இலக்கியங்களில் யகரமும், வகரமும் உடம்படுமெய் ஒலிகளாக வழங்குகின்றன. உடம்படுமெய் ஒலிகள் இல்லாமல் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியனவாக மேலே குறிப்பிட்ட இரு சொற்களில் தேஎம் என்பது மட்டும் அதே வடிவில் அல்லது ஒலியமைப்பில் வழங்குகிறது.

      சான்று:

      மாயோள் இருந்த தேஎம் நோக்கி
               (நற்றிணை, 371:3)

      (தலைவி இருந்த இடத்தை நோக்கி. மாயோள் - கரிய நிறத்தை உடையவள்; தலைவி.)

      மற்றொரு சொல்லாகிய கோஒன் என்பது சங்க இலக்கியத்தில் கோன் என வழங்குகிறது.

      கொற்றவர்தம் கோன் ஆகுவை
               (மதுரைக்காஞ்சி:74)

      (வெற்றி உடையவர் தம்முடைய தலைவன் ஆகுவாய்)

      இங்குத் தொல்காப்பியர் காலத்தில் கோ என்பதோடு சேர்ந்து வந்த ஒன் சாரியையில்னகரம் மட்டும் வழங்குகிறது. ஒகரம் நிலைபெறாமல் நீங்குகிறது. இதற்குக் காரணம் யாது? ‘கோஒன்’ என்ற சொல்லில் உள்ள இரண்டு உயிர்களை (ஓஒ) அடுத்தடுத்து ஒலிப்பதில் விட்டிசைக்கும் அருமை உணரப்பட்டு, எளிமையாக ஒலித்தற் பொருட்டு ‘ஒ’ என்னும் உயிர் ஒலிக்காமல் விடப்பட்டது எனலாம்.

      சங்க இலக்கியங்களில் யகரமும் வகரமும் உடம்படுமெய் ஒலிகளாக வழங்கினாலும், அவை இரண்டும் இன்னின்ன சூழலில்தான் வரும் என்று இடைக்காலத்தில் தோன்றிய நன்னூலில் கூறப்பட்ட விதிக்கு மாறுபட்டும் வந்துள்ளன. இதனைச் சில சான்றுகள் கொண்டு காண்போம்.

      1. நிலைமொழியின் இறுதியில் ஆகாரம் வரும்போது, வகரம் மட்டுமே உடம்படுமெய் ஒலியாக வரவேண்டும். ஆனால் சங்க இலக்கியங்களில் வகரத்தோடு யகரமும் உடம்படுமெய் ஒலியாக வருகிறது.

      மாயோள், மாயோன் ஆகிய சொற்களில் மா என்னும் நிலைமொழியின் இறுதியில் உள்ள ஆகார ஒலியை அடுத்து யகரம் உடம்படுமெய் ஒலியாக வரக் காணலாம்.

      சான்று:

       மாயோள் இருந்த தேஎம் நோக்கி
               (நற்றிணை, 371:3)

      மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
               (நற்றிணை, 32:1)

      (திருமாலைப் போன்ற கரிய மலைப்பக்கத்தே. மாயோன்- கரிய நிறத்தை உடைய திருமால்.)

      மா + ஓள் = மாயோள் ( மா+ய்+ஓள்)

      மா + ஓன் = மாயோன் (மா+ய்+ஓன்)

      ‘ஓள்’, ‘ஓன்’ என்பன முறையே சங்க காலத்தில் வழங்கிய பெண்பால், ஆண்பால் விகுதிகள் ஆகும்.

      மேலும் ஆயிடை, மாயிரு போன்ற சொற்களிலும் ஆகார உயிர் முன் யகரமே உடம்படுமெய் ஒலியாக வருகிறது.

       சான்று:

      ஆயிடைக் கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி
               (அகநானூறு, 69:16-17)

      (அவ்விடத்தே அணைத்தலை விடாத தலைவன் கைகள் நெகிழ்ந்தமை கண்டு. ஆயிடை - அவ்விடத்தே)

      மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந்து
               (நற்றிணை 291:7)

      (மிகப்பெரிய முள்ளூர்க்கு மன்னவனாகிய மலையமான் திருமுடிக்காரி என்பவன் குதிரை ஏறிச் சென்று. மாயிரு- மிகப்பெரிய)

      ஆகார உயிர் ஒலி முன்னர் விதிப்படி வகர உடம்படுமெய் ஒலியும் வருவது காணப்படுகிறது.

       சான்று:

      மாவென மதித்து மடல் ஊர்ந்து
               (நற்றிணை, 342:1)

      (குதிரை எனக் கருதிப் பனைமடல் ஏறி வந்ததும். மா- குதிரை.)

       மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந்து
               (நற்றிணை 291:7)

      மா + என = மாவென (மா+வ்+என)

      மா + ஊர்ந்து = மாவூர்ந்து (மா+வ்+ஊர்ந்து)

      2. ஐகாரத்தை அடுத்து யகரமே உடம்படுமெய் ஒலியாக வரவேண்டும் எனப்படுகிறது. ஆனால் சங்க இலக்கியங்களில் யகரத்தோடு வகரமும் வருகிறது. ஐயள் என்ற சொல்லில் யகரமும், ஐவர் என்ற சொல்லில் வகரமும் வருகின்றன.

       சான்று:

      வைஎயிற்று ஐயள் மடந்தை முன்னுற்று
               (நற்றிணை, 2:7)

      (கூரிய பற்களை உடைய மெல்லியளாகிய மடந்தையை முன்னே செல்லவிட்டு. வை - கூர்மை; எயிறு - பல்; ஐயள்- மெல்லியள்; ஐ- மென்மை.)

      ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள்
               (கலித்தொகை, 25:3)

      (பாண்டவர் ஐவர் இவர்கள்தாம் என்று உலகம் புகழும் தருமர் முதலியோர்.)

      இச்சான்றுகளில்,     ஐ + அள் = ஐயள் (ஐ+ய்+அள்)     என்பது யகர உடம்படுமெய் பெற்றும்,

      ஐ + அர் = ஐவர் (ஐ+வ்+அர்)     என்பது வகர உடம்படுமெய் பெற்றும் வருகின்றன.

      3. ஓகாரத்தை அடுத்து வகரமே வரவேண்டும் எனக் கூறப்படுகிறது. ஆனால் கோ+இல் என்பது கோவில் என்று வகர உடம்படுமெய் பெறாமல், யகர உடம்படுமெய் பெற்றுக் கோயில் என வழங்குகிறது.

      சான்று:

      நளிமலைச் சிலம்பின் சிலம்பும் கோயில்
               (நெடுநல்வாடை:100)

      (மலையின் ஆரவாரம் போல ஆரவாரிக்கும் கோயில். கோயில்- அரசனது அரண்மனை.)

      கோ + இல் = கோயில் (கோ+ய்+இல்)

      4. ஏகாரத்தை அடுத்து யகர, வகரங்கள் இரண்டுமே வரலாம் என்பது விதி. சங்க இலக்கியங்களில் ஏகாரத்தை அடுத்து இவ்விரண்டும் வருகின்றன.

       சான்று:

      பகழி அன்ன சேயரி மழைக்கண்
               (நற்றிணை, 13:4)

      (இரத்தம் தோய்ந்த அம்பு போன்ற சிவந்த வரி படர்ந்த கண்கள். சேயரி- சிவந்த வரி.)

       தாமரை புரையும் காமர் சேவடி
           (குறுந்தொகை, கடவுள் வாழ்த்து:1)

      (செந்தாமரை மலரைப் போன்ற அழகிய சிவந்த திருவடி. சேவடி- சிவந்த அடி.)

      இச்சான்றுகளில் இடம்பெறும் சேயரி என்பது யகர உடம்படுமெய் பெற்றும், சேவடி என்பது வகர உடம்படுமெய் பெற்றும் வந்துள்ளன.

      சே + அரி = சேயரி (சே+ய்+அரி)

      சே + அடி = சேவடி (சே+வ்+அடி)

      மேலே கூறியவற்றை ஒருசேர நோக்கினால், யகரமும் வகரமும் இன்னின்ன சூழலின்தான் வரும் என்று வரையறுத்துக் கூற இயலாத அளவுக்கு, அவற்றின் வருகை சங்க காலத்தில் ஊசலாட்ட நிலையில் அமைந்துள்ளது புலனாகின்றது.

       தன் மதிப்பீடு : வினாக்கள் - I
  1.
    உடம்படுமெய் ஒலி என்றால் என்ன?
  2.
    தமிழில் உள்ள உடம்படுமெய் ஒலிகள் யாவை?
  3.
  தமிழில்     உள்ள உடம்படுமெய் ஒலிகளை மொழியியலார் எவ்வாறு குறிப்பிடுகின்றனர்?
  4.
  உடம்படுமெய் ஒலிகள் வருவதற்கு இரு சான்றுகள் தருக.
  5.
    தொல்காப்பியர் உடம்படுமெய்யாக எந்தெந்த மெய்கள் வரும் என்று கூறுகிறாரா?
  6.
    இரண்டு உயிர்களுக்கு இடையில் உடம்படுமெய் இல்லாமலும் வரலாம் என்பதற்கு உரையாசிரியர்கள் காட்டும் இருதொடர்களைக் குறிப்பிடுக.
  7.
  தொல்காப்பியர் காலத்தில் உடம்படுமெய் ஒலிகள் இல்லாமல் வழங்கிய சொற்கள் யாவை?
  8.
  கோஒன் என்ற சொல் சங்க காலத்தில் எவ்வாறு வழங்குகிறது?
  9.
  ஆயிடை, மாயிரு, மாவூர்ந்து, சேயரி, சேவடி, கோயில்- இச்சொற்களில் வரும் உடம்படுமெய் ஒலிகளைக் குறிப்பிட்டுக் காட்டுக.