4.3 இடைக்காலத்தில் உடம்படுமெய் ஒலிகள்

    இடைக்காலத்தில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலில் உடம்படுமெய் ஒலிகளின் வருகை முறை (Distribution of semi-vowels) திட்ட வட்டமாக முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. வருமொழியின்     முதலில் உயிர் ஒலிகள் வரும்போது, நிலைமொழியின் இறுதியில் இ, ஈ, ஐ என்னும் உயிர் ஒலிகள் இருக்குமானால் யகரமும், ஏ என்னும் உயிர் ஒலி இருக்குமானால் யகர வகரங்கள் இரண்டும், ஏனை உயிர் ஒலிகள் இருக்குமானால் வகரமும் உடம்படுமெய் ஒலியாக வரும் என்று நன்னூல் கூறுகிறது.

    இஈ ஐவழி யவ்வும்; ஏனை
    உயிர்வழி வவ்வும்; ஏமுன் இவ்விருமையும்;
     உயிர்வரின் உடம்படு மெய்என்று ஆகும்
                 (நன்னூல், 162)

    இதற்கான சான்றுகளை இப்பாடத்தில் ‘உடம்படுமெய் ஒலிகள் வரும் சூழல்’ என்ற தலைப்பில் ஏற்கனவே பார்த்தோம். அவற்றை ஈண்டு நினைவு கூரவும்.

    இடைக்காலத்தில் உடம்படுமெய் ஒலிகளின் வருகையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. சங்க காலத்தில் ஓகார உயிர் ஈற்றுச் சொல்லாகிய ‘கோ’ என்பதன் முன்னர் ‘இல்’ என்ற சொல் புணரும்போது, இடையில் யகர உடம்படுமெய் ஒலி பெற்றுக் ‘கோயில்’ என வழங்கியதை ஏற்கனவே பார்த்தோம். அது நன்னூலார் காலத்தின் விதிப்படி வகர உடம்படுமெய் ஒலி பெற்றுக் ‘கோவில்’ எனவும் வழங்கியது. ‘கோவில்’ என்ற சொல் வழக்கு இடைக்கால இலக்கியங்களிலும் உள்ளது. இவ்வாறு நன்னூலார் வாழ்ந்த இடைக்காலத்தில் கோவில், கோயில் என்னும் இருசொற்கள் வழங்கவே, அவற்றுள் ஒன்றை அறிஞர்கள் போலி என்று கொண்டனர். பொருள் மாற்றம் எதுவும் இல்லாமல், இப்படிப்பட்ட ஒலிமாற்றம் (ய்>வ்) இருந்தால், அப்படி மாற்றம் பெற்று வருகின்ற சொற்களில், ஒன்றை அடிப்படைச் சொல்லாகவும், மற்றொன்றைப் போலியாகவும் கொள்வது மரபு. சான்றாகப் பந்தல், பந்தர் ஆகிய சொற்களில் பந்தல் என்பதை அடிப்படைச் சொல்லாகவும், பந்தர் என்பதைப் போலியாகவும் கொண்டனர். அது போலக் கோவில், கோயில் என்னும் சொற்களில் விதிப்படி அமைந்த ‘கோவில்’ என்பதை அடிப்படைச் சொல்லாகவும், ‘கோயில்’ என்தைப் போலியாகவும் கூறினர். நன்னூல் உரையாசிரியர்கள், கோவில் என்பதைக் கோயில் என்று கூறுவது இலக்கணப்போலி என்கின்றனர் (நன்னூல், 267.உரை).