4.4 தற்காலத்தில் உடம்படுமெய் ஒலிகள்

    தற்காலத் தமிழில் யகரமும் வகரமும் உடம்படுமெய் ஒலிகளாகச் சொற்களின் புணர்ச்சியில் வருகின்றன. மொழியியலார், தற்காலத் தமிழில் இரு சொற்கள் புணரும் புணர்ச்சியை அகச்சந்தி (Internal Sandhi) என்றும், புறச்சந்தி (External Sandhi) என்றும் இருவகையாகப் பிரிக்கின்றனர். அகச்சந்தி, புறச்சந்தி என்றால் என்ன என்பதைச் சற்று விளக்கமாகக் காண்போம்.

 • அகச்சந்தி
 •     ஒரு தனி உருபோடு (Free form) ஒரு கட்டுருபு (Bound form) சேர்ந்து நிற்பது அகச்சந்தி எனப்படும்.

      சான்று:

      கை + யை = கையை

      தனி உருபு என்பது தனிச்சொல் ஆகும். இது தனித்து வழங்கும்போது, எந்தப் பொருளைத் தருகிறதோ, அந்தப் பொருளிலேயே புணர்ச்சியில் சேர்ந்து வரும்போதும் தரும். கட்டுருபு என்பது தனித்து வழங்காது. அதற்குப் பொருள் உண்டு என்றாலும், தனி உருபோடு சேர்ந்து வழங்கும்போதே அப்பொருளைத் தரும். இங்கே காட்டிய சான்றில் ‘கை’ என்பது தனி உருபு ஆகும். இது தனித்து வழங்கும் போது தரும் பொருளையே, ‘ஐ’ என்ற கட்டுருபோடு சேர்ந்து வரும்போதும் தருகிறது. ‘ஐ’ என்பது கட்டுருபு ஆகும். இது இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும். இதற்குச் செயப்படுபொருள் என்பது பொருள் ஆகும். ஆனால் ‘கை’ என்ற தனிச்சொல்லோடு சேர்ந்து வரும்போதே அப்பொருளைத் தருகிறது.

 • புறச்சந்தி
 •     இரண்டு தனி உருபுகள் அல்லது தனிச்சொற்கள் சேர்ந்து வருவது புறச்சந்தி எனப்படும். தனி உருபுகள் இரண்டும் தனித்தனியே வரும்போது என்ன பொருளைத் தருகின்றனவோ, அதே பொருளையே அவை சேர்ந்து வரும்போதும் தரும்.

      சான்று:

      தமிழ் + சங்கம் = தமிழ்ச் சங்கம்     மரம் + கிளை = மரக் கிளை

 • அகச்சந்தியில் உடம்படுமெய் ஒலிகள்
 •     தற்காலத் தமிழில் அகச்சந்தியில் உயிர் ஒலியை இறுதியாகக் கொண்ட நிலைமொழியும், உயிர் ஒலியை முதலாகக் கொண்ட வருமொழியும் புணரும்போது அவற்றிற்கு இடையில் உடம்படுமெய் ஒலி கட்டாயம் வரவேண்டும்.

  சான்று:

      யானை + ஆ = யானையா (யானையா வந்தது)     யானை + ஐ = யானையை (யானையைப் பார்த்தான்)     தெரு + இல் = தெருவில் (தெருவில் வந்தான்)     ஆ + இன் = ஆவின் (ஆவின் பால்)

      இங்கே காட்டிய சான்றுகளில் யகர, வகர உடம்படுமெய் ஒலிகள் கட்டாய நிலையில் வருகின்றன. இச்சான்றுகளில் அகச்சந்தியை மட்டும் காண்கிறோம். இவற்றை ‘யானைஆ’ யானைஐ, தெருஇல், ஆஇன்’ என உடம்படுமெய் ஒலிகள் இல்லாமல் எவரும் எழுதுவது இல்லை.

 • புறச்சந்தியில் உடம்படுமெய் ஒலிகள்
 •     ஆனால் புறச்சந்தியில் யகர, வகர உடம்படுமெய் ஒலிகள் கட்டாயமாக வரவேண்டும் என்பது இல்லை.

      சான்று:

      இந்த ஆண்டு வேண்டிய அளவுக்கு மழை இல்லை.

      இந்தத் தொடரில் புறச்சந்தியை மட்டும் காண்கிறோம். ஏனெனில் உடம்படுமெய் ஒலிகள் இல்லை. உடம்படுமெய் ஒலிகள் வந்திருந்தால் இதே தொடர்,

      இந்தவாண்டு வேண்டியவளவுக்கு மழையில்லை.

      என அமையவேண்டும். ஆனால் இவ்வாறு எழுதுவது பெருவழக்கு அன்று. ‘இந்த ஆண்டு வேண்டிய அளவுக்கு மழை இல்லை’ என உடம்படுமெய் ஒலிகள் இல்லாமல் எழுதுவதே ஏற்புடையதாகவும், பெருவழக்காகவும் உள்ளது.