1.2 கட்டடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் கற்கள்

பண்டைக் காலத்தில் கோயில்களும் அரண்மனைகளும் பல்வகைக்     கட்டடங்களும்     கட்டப்பட்டன     என்பது இலக்கியங்களால் அறியப்படுகின்றது; எனினும், அவை செங்கல்லாலும் மரத்தாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்டு இருந்தமையால் அழிந்து போய்விட்டன. இந்நிலை மாறுவதற்குக் கருங்கற் பாறையைக் குடைந்தும், கருங்கற்களை அடுக்கியும் கோயில் கட்டிய பெருமை பல்லவ மன்னர்களைச் சாரும். ஒற்றைக் கற்கோயில்களும் குடைவரைக் கோயில்களும் கடும் வெயிலையும் மழையையும் தாங்கிக்கொண்டு மிகச் சிறிதளவே பாதிக்கப்பட்டு நிலைத்து நிற்கின்றன.

மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயிலும் ஓரளவே தேய்மானம் கொண்டு நிலைத்து நிற்கிறது ; ஆனால், காஞ்சியில் கட்டப் பெற்ற கயிலாசநாதர் கோயில் தரமான கற்களால் கட்டடப் பெறாத காரணத்தால் தேய்மானம் மிகுதியாகிக் கற்களும் பொரிந்து காணப்படுகின்றன. காரணம், தட்பவெப்பத்தினை எதிர்த்து     நிற்கக் கூடிய உயர்தரமான கற்களைப் பயன்படுத்தாமையே எனக் கட்டடக் கலை வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, நெடிது நிற்கக் கூடிய தரமான கற்களைத் தேர்ந்தெடுத்தல் நல்லது.

1.2.1 தரமான கற்கள்

கட்டங்களுக்குத் தேவையான தரமுள்ள மூலப்பொருள்களைத் தேர்ந்தெடுப்பது குறித்துச் சிறிது காண்போம்.

பழங்காலத்திலிருந்து கற்களை இணைக்கச் சுண்ணாம்பு பெரிதும் பயன்பட்டுள்ளது. தமிழகத்தைப்     பொறுத்த வரையில் சுண்ணாம்புக்கும் சிமெண்டுக்கும் தேவையான அளவிற்குச் சுண்ணாம்புக் கற்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன.

பொதுவாகக் கடலில் கிடைக்கும் கிளிஞ்சல் சுண்ணாம்பினை அண்மைக் காலம் வரையில், ஆற்று மணலுடன் கலந்து பயன்படுத்தி வந்தனர். இக்காலத்தில் பெரும்பாலும் சிமெண்ட் கலவையே கட்டட வேலைக்குப் பயன்படுகிறது.

• சுண்ணாம்புக் கற்கள்

கனிமவள நோக்கில் ஐந்துவகைச் சுண்ணாம்புக் கற்கள் தமிழ் நாட்டில் கிடைக்கின்றன. அவை, 1. படிகவயச் சுண்ணாம்புக் கல், 2. கடல் வண்டலில் தோன்றிய சுண்ணாம்புக் கல், 3. பவளச் சுண்ணாம்புக் கல், 4. சுக்கான் பாறை, 5. கிளிஞ்சல் சுண்ணாம்புக் கல்.

“சேலம் திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் படிகவயச் சுண்ணாம்புக் கல் அதிகம் கிடைக்கிறது. சுமார் 350 மிலியன் டன்கள் இருப்பாக உள்ளதெனக் கணக்கிடப்பட்டுள்ளது. (1981ஆம் ஆண்டு நிலவரப்படி) கடல் வண்டல் சுண்ணாம்புக் கற்கள் திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் 25 மில்லியன் டன் வரை உள்ளது.

தூத்துக்குடி இராமேசுவரம் தீவுகளுக்கு இடையேயுள்ள மன்னார் வளைகுடாவில் காணப்படும் தீவுகளில் பவளக் கொடிகளில் சுண்ணாம்புக் கற்கள் கிடைக்கின்றன. சென்னை நகரையடுத்த புளிக்காடு     ஏரியிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கிளிஞ்சல்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இவற்றைச் சேகரித்துச் சுட்டுச் சுண்ணாம்பு தயாரிக்கின்றனர்.” என்று டாக்டர் ச. சரவணன் கூறுகிறார்.

• வச்சிரக்காரையை அமைத்தல்

முற்காலத்தில் ஆலயக் கட்டுமானங்களுக்கும், இடிபாடுகளை நீக்கிப் புதுப்பிக்கவும் வச்சிரக்காரையைச் சுத்தப்படுத்திப் பயன்படுத்தியுள்ளனர். திருமலை நாயக்கர் கட்டுவித்த கோயிற் பணிகளுக்கு வச்சிரக்காரையினை எப்படித் தயார் பண்ணினர் என்பதைத் திருப்பணி மாலையால் தெரிந்து கொள்ளலாம்.

• செய்முறை

அரைத்த சுண்ணாம்பை வெல்லச்சாறு விட்டு நன்றாய்க் குழைத்துச் செங்கற்களை அடுக்காகப் பரப்பி, கடுக்காயுடன் ஆமலகம் (நெல்லிக்காய்), தான்றிக்காய், உழுந்து ஆகியவற்றை ஒருமுறைக்கு இருமுறை நன்றாக இடித்து, நல்ல நீரில் ஊறிய கடுஞ்சாறு விட்டு ஊழிக் காலங்களிலும் அசையாத வச்சிரக்காரை இட்டு மீனாட்சியம்மன் கோயிலைத் திருமலை நாயக்கர் செப்பனிட்டார் என்பது தெரிய வருகின்றது. இத்தகைய வச்சிரக்காரைக் கலவை முறையைச் சிற்பியர், சோழர் - பாண்டியர் காலச் சிற்பியர்களிடமிருந்து வழி வழியே கற்றுப் பயன் கொண்டனர் என்பது அறியலாகும் செய்தி.

1.2.2 கற்களைத் தேர்ந்தெடுத்தல்

இயற்கையின் படைப்பில், கற்கள் பல வகைகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. கட்டடம் கட்டத் திட்டமிட்டதும் எந்தக் கற்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைக் கட்டடக் கலை வல்லுநர்கள் தேர்வு செய்வர்.

• தேர்ந்தெடுத்தலின் அடிப்படை

கற்கள், நீடித்திருக்கக் கூடிய தன்மை, வலிமை, உளியால் செதுக்குதற்கேற்ற நயமுடைமை, புரையுடைமை (Porosity), தட்பவெப்ப மாறுதல்களால் மாறுதல் கொள்ளாமை, கட்டட நலனுக்குக் கேடு உண்டாக்கும் தாதுப்பொருளின்மை, திட்டத்திற்கேற்பக்     கட்டுபிடியாகக்     கூடிய விலை முதலியவற்றை எல்லாம் மனத்துட்கொண்டு, கற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் ; மேலும், கட்டடத்திற்கு வேண்டிய அளவு கற்கள் கிடைக்குமா என்றும் சிந்திக்க வேண்டும்.

சுண்ணாம்புக் கல், மணல், நுண்துளைகளுடைய கல் ஆகியவை சிறந்த வேலைப்பாட்டுக்கோ நீடித்திருக்கவோ பயன்படாது. கற்கள் உடைந்துவிடாமல் தாங்கக் கூடிய திறனைக் கல்லின் எடை (கனம் - weight) கொண்டு சிற்பியர் கண்டுபிடித்துவிடுவர்.

• கற்களின் வகைகள்

கட்டடக் கற்களை அக்கினிப்பாறை (Igneous rock), உருமாறும் பாறை (metamorphic rock), படிவுப்பாறை (Sedimentary rock) என மூவகைப்படுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக இந்தியாவில், சிறப்பாகத் தென்னாட்டில், பயன்படும் கட்டடக் கற்களுள், 1, கருங்கல் (Granite), 2. நீலக்கருங்கல் (charnocnite), 3. கந்தகப் பாறை (Basalt), 4. பாளக்கருங்கல் (Trap) என்பவை அக்னிப் பாறையைச் சார்ந்தவை ; அவை நீடித்திருக்கக் கூடியவை ; மிகுந்த வலிமையுடையவை.

சலவைக்கல், நைசுப் பாறை, கற்பலகைக்கல் முதலியவை உருமாறும் வகையைச் சார்ந்தவை. சலவைக் கல்லை இக்காலத்தில் மிகவும் பயன்படுத்தி வருகின்றனர். எளிதில் உடைத்து வேண்டிய வடிவத்தில் கட்டட உறுப்புகளைச் செய்யப் படிவுப்பாறைகள் பயன்படும்.

• கருங்கற்கள்

கோயில்களைப் பொறுத்த வரையில் கருங்கற்கள் (Granite) பயன்படுத்துவது மிகுதி.

திருச்சி, கோயமுத்தூர், திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கருங்கல்லும் நைசுப் பாறையும் கிடைக்கின்றன. கட்டட வேலைக்கு அதிகம் பயன்படுகின்றன. இவை ஒருபுறமிருக்கச் சரளைக் கல்லின் (Laterite) பயன்பாட்டினையும் நினைவிற் கொள்ள வேண்டும்.

• சரளைக் கற்கள்

கந்தகப் பாறைகளை மூடிக் கொண்டிருக்கும் சரளைக் கல்லும், கருங்கல், நைசுப் பாறை முதலியவற்றின் மீதும் மூடிக் கொண்டிருக்கும் சரளைக் கல்லும் கேரளக் கடற்கரையில் மிகுதியாக உள்ளன. இவை நுண்தொளை மிகுதியாகக் கொண்டிருக்கும். உடைத்தெடுத்தவுடன் வேண்டிய திட்டத்தில் எளிதாக ஒழுங்குபடுத்தலாம்; காற்று வீசியதும் கெட்டியாகி விடும் இயல்புடைய இந்தக் கற்களை வீடு, பாலம், மதகு முதலியவற்றைக் கட்டப் பயன்படுத்திவருகின்றனர்.