தமிழ்நாட்டில் ஆகமங்களும் சிற்பசாத்திரங்களும் வாஸ்து
நூல்களும் கட்டடக் கலையமைப்பில் செல்வாக்கைப் பெற்ற
நிலையில், கட்டடக் கலைத் தொடர்பான தமிழ்ச் சொற்கள்
வழக்கற்றுப்போக, அவற்றுக்கு இணையான வடமொழிச்
சொற்கள் வழக்கிற்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டது.
பழந்தமிழ் இலக்கியங்களில் கோயிலைக் குறிக்கக் கோட்டம்,
நகர் ஆகிய சொற்களே கையாளப்பட்டன; கோயில் என்று
சொன்னாலே பலருக்கும் புரியும்படியான நிலை சிறிது சிறிதாக
மாறி, ஆலயத்தைக் குறிக்கத் தேவகிருகம், தேவாகாரம்,
தேவாலயதனம், தேவாலயம், தேவகுலம், மந்திரம், பவனம்,
பிராசாதம், ஸ்தானம் முதலிய சொற்கள் சிற்ப நூல்களில் இடம்
பெற்றன.
கோயில் வகைகள் பலவாக அமைந்தால் தான் மக்கள்
மனத்தைக் கவரமுடியும் என்ற எண்ணம் தோற்றுவிக்கப்பட்டது.
தேவார காலத்தில் பலவகைக் கோயில்களைத் திருநாவுக்கரசர்
தமது பாடலில் குறித்துள்ளார். (திருமுறை, 6 அடைவுத்
திருத்தாண்டகம்)
பெருங்கோயில் என்பது மாடக்கோயில் என்பதும்,
செய்குன்றின்மேல் எடுக்கப் பெறுவதால் இதனை
மலைக்கோயில் எனக் கொள்ளலாம் என்பதும் கல்வெட்டறிஞர்
தி.வை.சதாசிவ பண்டாரத்தார் கருத்தாகும். இக்கருத்தின் படி
நன்னிலத்துப் பெருங்கோயில், குடவாயில் பெருங்கோயில்,
வைகல் மாடக்கோயில், தண்டலைச்சேரி மாடக்கோயில்
முதலியன உள்ளன. “மாடக்கோயில் என்பது யானை ஏறாத
வண்ணம் பூமி மட்டத்துக்கு மேல் மிகவும் உயரமாகப்
படிக்கட்டுகள் அமைத்துக் கட்டப் பெற்றதாகும். இத்தகையவை
கோச்செங்கணான் எடுப்பித்தவையாகும். இம்மாடக் கோயிலின்
விமானம் யானை தூங்கும் நிலையில் கட்டப்
பெற்றிருக்குமாயின் அதனைத் ‘தூங்கானை மாடக் கோயில்’
என்பர். உதாரணமாகப் பெண்ணாகடம் திருக்கோயில்,
திருப்பனந்தாள் சடையப்பர், திருத்தணி இன்னம்பர்
கோயில்களையும் காண்க” என்று ஜே.எம்.சோமசுந்தரம்
பிள்ளை தம் சோழர் கோயிற் பணிகள் எனும் நூலில்
(பக். 5) குறிப்பிட்டுள்ளார்.
1.6.1 கோயில்களும் கலை
நுட்பங்களும்
தமிழ்ப் பொழில் என்னும் திங்களிதழில் (XVI,
பக்.223)
கல்வெட்டறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் எழுதியுள்ள
கோயில் விளக்கக் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு
மேலும் சில கலை நுட்பங்களைக் காணலாம்.
•
கரக்கோயில்
கரக்கோயில் என்பது தேர் போன்ற அமைப்பில்
சக்கரங்களுடன் அமைக்கப் பெற்ற ஒருவகைக் கோயிலாகும்.
இக்கோயிலின் கருவறை தேர் போன்று காட்சியளிக்கும்.
திருநாவுக்கரசு சுவாமிகள், மேலைக் கடம்பூர்க் கோயிலைப்
பற்றிப் பாடுகையில்,
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் |
(திருமுறை, 5. திருக்குறுந்தொகை
(திருக்கடம்பூர்), 9)
|
எனக் குறித்திடுதல் கொண்டு தெளிவு கொள்ளலாம்.
இக்கோயிலைப் போலச் சில கரக்கோயில்கள் கேரள நாட்டில்
இருப்பதாகக் கூறுவர். மேலைக் கடம்பூர்க் கோயில் மூன்று
சுவர்களிலும் இரண்டு வரிசைகளாக நாயன்மார் அறுபத்து
மூவரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் சிற்பங்களாக
அமைத்திருப்பது இக்கோயிலின் பெருமையை மிகுவிக்கும்.
•
ஞாழற்கோயில்
ஞாழல் என்னும் மரத்தினடியில் எழுந்தருளப்பெற்ற இறைவன்
தொடர்பாக எடுக்கப்பட்ட கோயில் என்பர். பாதிரிப் புலியூர்த்
திருக்கடை ஞாழற் பெருமா னடிகளுக்கு என வரும்
கல்வெட்டின் (3.1.1. VII. 744) துணை கொண்டு, திருப்பாதிரிப்
புலியூரிலுள்ள கோயில் முற்காலத்தில் ஞாழற்கோயில் என்று
வழங்கப் பெற்றிருத்தல் கூடும் (சோழர் கோயிற் பணிகள்)
என வருஞ்செய்தி சிந்திக்கத்தக்கது.
மரங்களின் நிழலில் அமைக்கப்படும் மேடைக் கோயில்; இது
பெரும்பாலும் வேலி சூழ்ந்த காவணத்தில் அமைக்கப்படும்.
இக்கோயிலே பிற்காலத்தில் நூற்றுக்கால் மண்டபம்,
ஆயிரங்கால் மண்டபங்களுக்கு அடிப்படை என்றும் கூறுவர்.
•
கொகுடிக்கோயில்
கொகுடிக் கோயில் என்பதை, ஒருவகை முல்லைக்கொடி
மிகுதியாக உள்ள இடத்தில் அமைந்த பெருங்கோயிலாகக்
கொள்ளலாம். தலைஞாயிறு என வழங்கும் திருக்கருப்பறியலூரில்
அமைந்துள்ள கோயில் கொகுடிக் கோயில் என்பதைத்
தேவாரம் வாயிலாக அறியலாம்.
•
இளங்கோயில்
பொதுவாகப் பழைய கோயிலைப் புதுப்பிக்குங்கால் அதற்கருகில்
சுவாமியை எழுந்தருளுவித்து வழிபாடு புரிவதற்கேற்ப அமைந்த
கோயிலாகும் இது. இக்காலத்திலும் நடைமுறையிலே பாலாலயம்
(இளங்கோயில்) செய்தல் என்பது கோயிற் சமய மரபை
ஒட்டியதே. எனினும், சிறப்பாக இளங்கோயில் என்றே
பேரளத்திற்கு அருகே திருமீயச்சூரிலும், கீழைக்கடம் பூரிலும்
உள்ளதைக் காணலாம். பூதத்தாழ்வார் வெள்ளத்
திளங்கோயில் கைவிடே லென்று (இயற்பா, இரண்டாம்
திருவந்தாதி, 54) எனப் பாடிக் குறிப்பிடுவதும் ஆராய்தற்கு
உரியது.
•
மணிக்கோயில்
ஆழ்வார்களின் திருவாக்கால், திருநறையூர் மணிமாடம்
சேர்மின்களே என்று வருதல் கொண்டு, மணிக்கோயில் எனும்
ஆலயக்கட்டட வகை அக்காலத்தில் இருந்துள்ளமை தெரிய
வரும். நம்பியாண்டார் நம்பிகள் தம் திருப்பண்ணியர்
விருத்தத்தில்(67), தில்லை தன்னுள் செற்றரு மாமணிக்
கோயில் என வருந்தொடர் கொண்டும் மணிக்கோயில்
இன்னதென்று கண்டு கொள்ள வாய்ப்பு உள்ளது.
•
ஆலக்கோயில்
ஆனைக்கோயில் என்பதன் மரூஉச் சொல் ஆலக்கோயில்
என்பர் சிலர். ஆலமர் செல்வனாக - தட்சணா மூர்த்தியாகச்
சிவபெருமான் எழுந்தருளியது கல்லால மரம் ஆகும். எனவே,
ஆலக்கோயில், ஆலங்குடித் திருத்தலம் ஆகிய
சொற்களமைப்பைக் கொண்டு, ஆலமரச் சிறப்பைக்
கொண்டமைந்த ஒருவகை ஆலய அமைப்பு இஃது எனக்
கொள்ளலாம். இது சிங்கப் பெருமாள் கோயிலுக்கு அருகில்
உள்ள திருக்கச்சூர் என்னும் திருத்தலத்தைக் குறிக்கும் என்பர்
அறிஞர் பண்டாரத்தார்.
ஆனால், இது நாற்புறமும் நீர் சூழ்ந்த இடத்தில் அமையும்
கோயில், தஞ்சை வலிவலம், திருப்புகலூர் முதலிய தலங்களின்
கோயில்களை இங்கு நினைவு கூரலாம். ஆலம் என்னும்
சொல்லுக்கு நீர் சூழ்ந்த இடம் எனவும் பொருள் உண்டு
என்பர். ஒரு சிலர் ஆலமரத்தைச் சார்ந்து அமைந்த கோயில்
என்பதும் உண்டு. கச்சூர் ஆலக்கோயில் என்பது தேவாரம்.
1.6.2 பெருங்கோயிலும் பிறவும்
கோயில் வகைகளுள் பெருங்கோயில் என்பது மாடக்
கோயிலைக் குறிக்குமாயினும், அதனிலும் வகைகள் உண்டு.
தூங்கானை மாடக் கோயில் என்பது தூங்கும் யானையின்
பின்புறம் போலத் தோற்றமளிக்கும் அமைப்பில் கட்டப்படும்
கோயிலாகும். இதனைக் கஜப்பிருஷ்டம் என்பர்.
திருப்பெண்ணாகடம் கோயில் இவ்வகையைச் சார்ந்தது.
இவையேயல்லாமல் சமய மரபுப்படி திருவாரூர்க் கோயிலைப்
பூங்கோயில் என்பர்; திருவாரூர்க் குளத்தையும் இதே
பொருளில் கமலாலயம் என்பர்.
திருவீழிமிழலைச் சிவன் கோயிலை விண்ணிழிகோயில்,
விண்ணிழி விமானக் கோயில் என்றெல்லாம் அழைப்பதும்
சமய மரபினைச் சார்ந்ததே.
இங்குள்ள விண்ணிழி விமானம் 16 சிங்கங்கள் தாங்குவது
போல அமைந்துள்ளது. இவ்விமானம் திருமாலால்
விண்ணுலகத்தினின்று கொண்டு வரப்பெற்றது எனத்
தலபுராணம் கூறும்.