2.1 ஆலயங்களின் கட்டடக் கலை நுட்பங்கள்

ஆலயம் என்பது மக்களின் நலத்துக்கான அறிவியல் சார்ந்த தெய்வ நலச் சின்னம். தாம் இன்புறுவதுபோல உலகமும் இன்புறவேண்டுமென்ற நோக்கில் நம் முன்னோர்கள், இயற்கைச் சூழலுடன் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பலவகையான ஆலயங்களைக் கட்டினர். பல்லவர்கள் காலத்திலிருந்து கற்கோயில்கள், சிறப்பாகக் கட்டுமானக் கோயில்கள் வளர்ச்சி பெற்று வந்துள்ள சிறப்பினை வரலாறு கூறும். எனவே, கோயில் கட்டும் இலக்கணம் பற்றி ஓரளவு தெரிந்து கொள்வோம்

2.1.1 நிலம் தேர்ந்தெடுத்தல்

கோயில் கட்டுவதற்கு முன், உரிய நிலத்தைத் தேர்ந்தெடுத்துச் சமப்படுத்துதல் வேண்டும். அமைக்க விருக்கும் கோயிலின் அளவையொட்டி நிலத்தில் ஒரு சதுரம் வரைவர். அதனைப் பக்கத்திற்கு எட்டாக 64 சதுரங்களாகவோ, பக்கத்திற்கு ஒன்பதாக 81 சதுரங்களாகவோ அமைப்பர். இவற்றில் நடுவிலுள்ள சதுரங்களில் கருவறை விமானத்தையும், ஒரங்களிலுள்ள சதுரங்களில் பிராகாரம், பரிவாரக் கோயில்கள் முதலியவற்றை அமைத்திடுவர். இடைப்பட்ட சதுரங்களை மர்மத் தானங்கள் எனக் கொண்டு வெளியாக விட்டுவிடுவர்.

2.1.2 ஆலயத்தின் ஆதார அங்கங்கள்

ஆலயம் எழுப்புகையில், 1. அதிட்டானம் (அடிநிலை), 2. சுவர் (கால்), 3. பிரஸ்தரம் (கூரை), 4. கழுத்து (கிரீவம்), 5. சிகரம் (தலை), 6. குடம் (ஸ்தூபி), என ஆறு பகுதிகளாகக் கொண்டு, ஒவ்வொன்றிலும் சிற்பிகள் தம்     திறமையை நுண்கலைக் கூறுகள் வாயிலாக வெளிப்படுத்துவர்.

அதிட்டானம், ஆலயத்தைப் பொறுத்தும் ஆலயங்கட்டும் பொருள் திட்டத்தைப் பொறுத்தும், அதிட்டான உறுப்புகளாக, உபானம், ஜகதி, குமுதம், பத்மம், அந்தரி, வாஜனம், பட்டிகை முதலிய பல பகுதிகளை அமைப்பர்.

அதிட்டானத்தில் பலவகைகள் உண்டு. 1. பாதபந்த அதிட்டானம், 2. கபோதபந்த அதிட்டானம், 3. பாதபந்த கபோத பந்த அதிட்டானம் (அல்லது) வர்க்க பேத அதிட்டானம், 4. பிரதி பந்த அதிட்டானம்

முதலியவற்றை அமைப்பர். எனினும் சிறப்பாகப் பாதபந்த அதிட்டானம் (பாதக்கட்டு) என்றும், பத்மபந்த அதிட்டானம் (தாமரைக்கட்டு) என்றும் அமைந்திடும் இருவகைகளே சிறப்பாகக் கொள்வர்.

அதிட்டானத்தின் கீழே, சில கோயில்களில் உபபீடம் எனும் பகுதியையும் அமைப்பது உண்டு. தஞ்சைப் பெரிய கோயில், கங்கை, கொண்ட சோழீச்சரம் ஆகிய கோயில்களில் இவ்வமைப்பைக் காணலாம். அதிட்டானமே தன் மேலுள்ள கட்டடம் முழுவதையும் தாங்கி நிற்பதால் அதற்கெனத் தனிச் சிறப்பு உண்டு ; அதனைத் தாங்குதளம் எனலாம்.

சுவர் (கால்)

அதிட்டானத்தின் மேலுள்ள கட்டடப் பகுதியைச் சுவர் அல்லது கால் என்பர். அந்தச் சுவருக்கு அழகு சேர்க்க ஆங்காங்கே அத் தூண்களும், கோட்டங்களும், மகரதோரணங்கள் முதலியவையும் அமைக்கப்படும். சிறப்புக் குறிப்பாக மயிலை சீனி, வேங்கடசாமி எழுதுகையில், “கருவறைச் சுவரின் வெளிப்புறத்திலும்,     அர்த்த     மண்டபச்     சுவரின் (இடைநாழிகையின்) வெளிப்புறத்திலும் கோஷ்டபஞ்சரம், கும்பபஞ்சரம் என்னும் உறுப்புகள் அமைக்கப்படுவது வழக்கம். கருவறையின் வெளிப்புறச் சுவர்களில், பின்புறச் சுவரில் ஒன்றும் வலப்புற இடப்புறச் சுவர்களில் ஒவ்வொன்றும் ஆக மூன்று கோஷ்ட பஞ்சரங்களும், கருவறையைச் சேர்ந்துள்ள அர்த்தமண்டபத்தின் வலப்புற இடப்புறச் சுவர்களின் வெளிப்புறத்தில் ஒவ்வொன்றாக இரண்டு கோஷ்ட பஞ்சரங்களும் ஆக     ஐந்து கோஷ்ட பஞ்சரங்கள் அமைக்கப்படும்” (தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், பக்.39) எனக் கூறியுள்ளார்.

பிரஸ்தரம் (கூரை)

கருவறை போன்ற இடங்களில் சுவரின் மேல் அமைக்கும் கூரையினைப் பிரஸ்தரம் என்பர். இதனில் பூதவரி, கொடுங்கை, யாளிவரி என மூன்று பகுதிகள் உண்டு. இதன் மேல் ஒன்று, இரண்டு, அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் அமைப்பது உண்டு.

கிரீவம் (கழுத்து)

கருவறை மேலே அமைக்கப்படும் தலையின் அமைப்பை ஒட்டிக் கழுத்து சதுரமாகவோ, எண்பட்டையாகவோ, வட்டமாகவோ அல்லது தூங்கானை வடிவிலோ காணப்படும் உறுப்பு.

குடம் (கலசம் - ஸ்தூபி)

சிகரத்தின் மேல் குவிந்த தாமரை போல் உள்ள பகுதியைக் கலசம் அல்லது ஸ்தூபி என்பர். இந்தக் கலசம் சுதையாலோ கருங்கல்லாலோ செம்பினாலோ பொன்னாலோ பொன்முலாம் பூசப்பட்ட செம்பாலோ செய்யப்பட்டிருக்கும்.