2.3 கோபுரம்

திருவருட் சக்தி நிரம்பிய மூலவர் கருவறையில் நிறுவப்பட்ட நிலையில், அதன் மீது எழுப்பப்பட்ட கூம்பு வடிவக் கட்டட அமைப்பினையே விமானம் என்பர். சுவாமி சன்னிதி விமானம் இவ்வாறிருக்க, ஆலய வாயிலில் விமானம் போன்று கட்டப்படுவதே கோபுரம் ஆகும்.

தெய்வ நல ஆற்றலை ஈர்த்துப் பரப்புவதற்கு உதவியாகக் கோபுரம் அமைக்கப்பட்டது ; எனினும் கலைக் கண் நோக்கில், கம்பீரத் தோற்றத்திற்காகக் கோபுரத்தில் ஒன்றோ பலவோ அடுக்குகள் அல்லது நிலைகள் அமைக்கப்படுகின்றன. ஆசியாவிலேயே தமிழகத்தில் உள்ள திருவரங்கத் தெற்குக் கோபுரம் 13 அடுக்குகள் கொண்டு மிக உயராமாக அமைந்து ஈடு இணையற்று விளங்குகிறது.

அறிவியல் அணுகுமுறைப்படி, ஆலயக் கட்டடப் பொறியியல் அடிப்படையில் நிலமட்டத்தினின்று நன்குயர்ந்த மதில்களுக்கு இடையே துவாரம் (காலியிடம்) என்ற பெயர் கொண்டது வாயில். அந்த வாயிலின் மீது கனசதுர அமைப்பில் செங்குத்தாகக் கோபுரத்தை உயர்த்திக் கட்ட முடியாது ; அப்படிக் கட்டினால் அஸ்திவாரத்துக்குத் தீங்கு ஏற்படும். எனவே, கோபுரம் கட்டுகையில் கோபுர வாயில் வரையில் செங்குத்தாக அமைத்துக் கொண்டு, அதன் மேல் அமைத்திடும் கட்டடம் மேல் நோக்கிக் கூம்பிச் செல்வதாக (Tapering) அமைப்பதே நல்ல ஏற்பாடாகும்.

2.3.1 சிற்பநூல் முறைப்படி கோபுரங்கள

பொதுவாகக் கோபுரம் கீழ்ப்பகுதியென்றும், மேற்பகுதியென்றும் இருபகுதிகளாகக் கொள்வர். கீழ்ப்பகுதி உபபீடம், அதிட்டானம், சுவர் (பித்தி), கூரைக்கான தொடக்கம் என்ற அங்கங்களையும், மேற்பகுதி கர்ணகூடு, கூரை, கண்டம், சிகரம், கலசம் ஆகிய பகுதிகளையும் கொண்டு விளங்கும். பெரும்பாலும் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், மேற்பகுதி செங்கல்லும் சுதையும் கொண்டும் கட்டப்படும். சில இடங்கள் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளன.

கோபுரத்தின் மேற்பகுதி ஒவ்வொரு அடுக்கு நிலையிலும் கோடியில் இடம்பெறும் சதுர அமைப்புடைய அங்கமும், மையப்பகுதியில் செவ்வகமாக வண்டிக் கூண்டைப் போல் ஓர் அங்கமும் இடம்பெறும். கோடியில் இடம்பெறும் அமைப்பினைக் கர்ணக் கூடு என்பர்; மையப்பகுதியில் இடம்பெறும் அமைப்பினை முக சாலை என்றும் கூறுவர். இவ்விரண்டிற்கும் இடையிலே பஞ்சரம், கூடு போன்ற அலங்கார அணிகளை முன்பின் அமைத்துக் கோபுரத் தோற்றத்திற்கு எழில் கூட்டுவர். இதே போன்ற அலங்காரத்தை எல்லா அடுக்கு நிலைகளிலும் இடம் பெறச் செய்து பூமாலை போன்று சுற்றிச் சுற்றி அமைப்பர். கோபுரச் சிறப்பிற்காக, அந்த அந்தத் திசைக்குரிய தெய்வ வடிவங்களையும் கோபுரம் தாங்கிகளையும், தேவர்களையும் புராணத் தொடர்புடன் சுதையினால் வடிவமைத்துக் கட்டுவர்.

2.3.2 கோபுரம் அமைப்பதன் நோக்கம்

சைவ சித்தாந்த அணுகுமுறைப்படி, கோயிலில் அமைக்கப்படும் விமானமும் கோபுரமும் தூலலிங்கம் எனும் நோக்கில் வழிபடப்பெறும் சிறப்பினையுடையவை.

கோயிலுக்குள் சென்று முறைப்படி வழிபட இயலாதவர்களும் கூடக் கோயிற் கோபுரத்தைக் காண்கையில், தம்மை அறியாமலேயே கைகூப்பித் தொழும் வழக்கம் பலரிடம் உண்டு. இதன் நோக்கம் தத்துவச் சிறப்புடையது.

கோயிற் கருவறையில் சுவாமியை வழிபடுங்காலத்தில் இறைவனது பெருமையையும், மனிதன் தன் சிறுமையையும் உணர்ந்து அடக்கவுணர்வை வளர்த்துக் கொள்ள வாய்ப்பேற்படும்.

கோயிற் கோபுர வாயில் உயர்ந்தும் அகன்றும் காணப்படும். கருவறையை நோக்கிச் செல்லுங்கால், இடைப்பட்ட எந்தக் கட்டட அமைப்பும், கோபுர வாயிலைவிடக் குறுகலாகவே அமைந்திருக்கும்; கருவறை ஏனையவற்றைவிடக் குறுகலாக அமைந்திருப்பது ஆலய மரபு. இதனால், குவிதல் என்பது மறைமுகமாக ஆலயம் உணர்த்தும் பாடமாக அமைகிறது. தாயுமானவர் வாக்கில் கூற வேண்டுமெனில், மனம் குவிய ஒரு தந்திரம் ஆலயத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினையாகிறது.

உயர்ந்த கோபுர வாயிலில் உள்ளே நிறுத்தப்பட்ட பக்கக் கால்களில் நடனச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதைச் சில தளங்களில் காணலாம். எடுத்துக்காட்டாகச் சிதம்பரம் கோயிற்கோபுர வாயிலில் நடனச் சிற்பங்களைக் காணலாம்.

இராச     கோபுரங்கள் தொடர்பான கட்டடக் கலை நுண்குறிப்புகளை ஆராய்ச்சி நோக்கிலும் ஆகம நோக்கிலும் சிந்திப்போம்.

கோபுர வாயிலைப் பொறுத்தவரையில், ஆலய மூலவர் எந்தத் திசையை நோக்கி அமைந்திருக்கிறாரோ அந்தத் திசையில் கோபுரம் கட்டப்பட வேண்டுவது ஆகம மரபாகும்.

பொதுவாக வீட்டிற்குள் நுழைய எப்படி வாசற்படி நேரே உதவியாக     இருக்கிறதோ அப்படியே ஆலயத்திற்கும் ராசகோபுரம் வாசல் போன்று உதவியாக இருப்பதே முறை. கோபுரத்திற்குச் சிறப்பளிக்க வேண்டுமென்பதற்காகவே, ஆலய விமானத்திற்குக் குடமுழுக்கின்போது ஆராதனை புரியும்போது கோபுரத்துக்கும் ஆராதனை புரிவதாகும்.

முதலாம் இராசராச சோழன் காலத்திலிருந்து ஆலயக் கட்டடக் கலை புதிய உத்திகளுடன் புத்துயிர் பெற்றுச் சிறந்த வளர்ச்சிப் பெற்று வந்துள்ளது.

கோபுரத்தையும் ஆலய மதிலையும் இணைத்துக் காண்பதால் ஆலயப் பெருமை தெரியும். எடுத்துக்காட்டாகத் திருவாரூர்த் தியாகராசப் பெருமான் கோயிலில் முதன்மையான நுழைவாயில் கீழைத் திருக்கோபுரமாகும்; இதுவே பெரிய திருக்கோபுரமும் ஆகும். 110 x 60 அடி அடித்தளமும், 120 அடி உயரமும் கொண்ட நெடிதுயர்ந்த கோபுரச்     சிறப்பே மதிலால் அமைகின்றது. தெற்கு வடக்கில் 666 அடி, கிழக்கு மேற்கில் 846 அடி, உயரம் 30 அடி கொண்ட திருமதிலைப் பெற்றுப் பரந்த நிலப்பரப்பிற்குப் பாதுகாவலாக உள்ளது. கோபுரமும் மதிலும் இரட்டைப்     பாதுகாப்பினை இந்தத் திருக்கோயிலுக்கு வழங்குகின்றன.

2.3.3 கோபுரம் - வாயில்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
(திருமந்திரம், 1792)

எனும் திருமூலர் வாக்கிற்கிணங்க வாய் எனும் சத்தியமே கோயிலின் திருவாயிலாக அமையவேண்டுமென்பது கருத்து. எனினும், கோபுரமே இல்லாத கோயிலில் மதிலையொட்டிப் பெரிய வாயில் அமைந்திருக்கும்; அதனை மொட்டைக்கோபுரம் என்பர்.

பொதுவாகக் கோயிலுக்குத் தெய்வநலக் காவல் பொறுப்பில் பைரவர் போன்ற தெய்வங்கள் இருக்கும் என்பது சமய நம்பிக்கை. கோபுரக் கதவுகளேயன்றி, உட்புறக் கோயிற் கதவுகளிலே ஒலிக்கும் மணிகள் பொருத்தப்பட்டிருக்கும். அத்தகைய கதவுகளைத் திறக்கும் வேளையில் மணியோசை கேட்கும். அந்நிலையில் கோயிலுக்கென அமைந்த பாதுகாப்புத் தேவதைகள் தம் கடமைகளில் ஈடுபடும் என்ற சமய நம்பிக்கை உள்ளது. எனினும், கோபுர வாயிற் கதவையோ கோயிலின் உட்கதவையோ கோட்டைவாசற் கதவைப் போன்று வலிமை மிக்கதாக அமைத்து வருகின்றனர்.