5.1 ஆலய மண்டபங்கள்

கோயிலில் காணப்படும் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், நீராட்டு மண்டபம், அலங்கார மண்டபம், சபா மண்டபம்     ஆகிய ஆறு மண்டபங்களே ஆதார மண்டபங்களாகக் கொள்ளப்பட்டன. பிறகு, பக்தர்களின் ஆர்வ அடிப்படையிலும் வசதி நோக்கிலும் மண்டபங்கள் பலவாகக் கட்டப்பட்டன. இவற்றில் கட்டடக் கலை நோக்கில் சிற்சில நுட்பங்களும் வேறுபாடுகளும் ஏற்பட்டன.

வரலாற்று நோக்கில் ஆலய மண்டபங்களைப் பற்றி எழுதும் குடவாயில் பாலசுப்பிரமணியன், “விசயநகர - நாயக்கர்களின் கட்டடக் கலையின் சிறப்பித்துக் கூறும் கலைக் கொடையாகத் தமிழகத்திற்குக்     கிடைத்தவை     கோபுரங்களும் திருமண்டபங்களுமே ஆகும். கிருஷ்ணதேவராயர், அச்சுதராயர் மற்றும் தமிழகத்து நாயக்க மன்னர்களின் கொடையாகக் கிடைத்த மண்டபங்களில் உள்ள தூண்கள் அந்தந்தப் பகுதிகளுக்குரிய கலை மரபுகளோடு இணைந்து புதிய பாணிகளை உருவாக்கியுள்ளன. பழைய மரபோடு போசளர் கலைப்பாணிகளும் காகதீயர் கலைப்பாணிகளும், மற்றும் சேரநாட்டுக் கலைப்பாணிகளும் இங்குச் சங்கமித்துள்ளன.

பலவகை மண்டபங்கள்

பலவகை மண்டபங்களுள் நடன மண்டபம், நாடக மண்டபம், புராண மண்டபம், தருக்க மண்டபம், ஊஞ்சல் மண்டபம், முத்தி மண்டபம், நித்த மண்டபம், வசந்த மண்டபம், நவராத்திரி மண்டபம், கொடிக்கம்ப மண்டபம், நீராழி மண்டபம், தூண்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒற்றைக் கால் மண்டபம், பதினாறு கால் மண்டபம், இருபத்துநாலு கால் மண்டபம்,     ஆயிரக்கால்     மண்டபம்     முதலியவை குறிப்பிடத்தக்கவை.     இவை     ஒரு     புறமிருக்கப் பெருங்கோயில்களில் தேர்த்திருவிழாவுக்கு வசதியான தேரேற்று மண்டபம் ஆலயத்தின் புறத்தே அமைந்து அதுவும் கட்டடக் கலை நோக்கில் சிந்திக்கத்தக்கது.

மக்களின் நாட்டத்தை ஆலயத்தின் பால் திருப்பும் வகையில் புராணச் சொற்பொழிவுகள் நிகழ்த்த வசதியாகப் புராண மண்டபமும், புராண நோக்கில் நடன நிகழ்ச்சிகள் நடத்த நடன மண்டபமும், நாடகம் நடத்துதற்கேற்ப நாடக மண்டபமும் பயன்பட்டுள்ளன.

திருவிழா மக்களை ஈர்க்கும் ஒருவகைச் சக்தியாகப் பல்லாண்டுகளாக இருந்து வருகிறது.

வாகனத்திற்கான மண்டபம்

திருவிழா எனின் ஒரு மண்டபத்தை வாகனத்துக்காகவே ஒதுக்குவது உண்டு. ஆனால், சில ஆலயங்களில் பல மண்டபங்களை வாகனங்களுக்காக ஒதுக்குவதும் உண்டென்பது தெரிய வருகிறது. எடுத்துக்காட்டாக, ஏழு மண்டபங்களுள் மன்னார்குடி இராசகோபாலசாமி கோயிலில், கருட வாகன மண்டபம், யானை வாகன மண்டபம், வெண்ணெய்த்தாழி மண்டபம், புன்னைவாகன மண்டபம் என நான்கு மண்டபங்கள் உள்ளன.

5.1.1 மகா மண்டபம்

மகா மண்டபம், கருவறையையும் அர்த்த மண்டபத்தையும் அடுத்து, இறைத் திருமேனிக்கு முன்பாகப் பலரும் கூடும் வகையில் அமைக்கப்படும் பெரிய மண்டபம். ஆலயத்தின் எடுப்பான தோற்றத்திற்கு மகா மண்டபம் எனும் வேத மண்டபம் பெருமளவு துணை நிற்கும். ஆலயம் கட்டுபவருடைய பொருளாதார நிலைக்கேற்ப 4, 2 தம்பங்களுடன் கூடியதாகவும் மகா மண்டபம் அமையும்.

5.1.2 எண்ணிக்கை அடிப்படையில் மண்டபங்கள்

 எண்ணிக்கை அடிப்படையிலும் மண்டபங்கள் கட்டப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் தனிச் சிறப்புகளுடன் திகழ்கின்றன.

ஆயிரக்கால் மண்டபம்

ஆயிரக்கால் மண்டபம் கட்டடக் கலை நோக்கிலும் விழாக்காலங்களில் தெய்வங்களுக்கு அபிடேகம், அலங்காரம், படையல்,    வழிபாடு     நடைபெறுவதைப் பல்லோரும் கண்டுகளிக்கும் நோக்கிலும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் திருநெல்வேலி, மதுரை, திருவாரூர், மன்னார்குடி, திருவரங்கம், திருவானைக்கா, சிதம்பரம், திருவண்ணாமலை முதலிய திருத்தலங்களில் ஆயிரக்கால் மண்டபங்கள் அமைந்துள்ளன. சற்றேறக்குறைய ஆயிரம் தூண்கள் கொண்டதாக ஆயிரக்கால் மண்டபம் என்ற பெயரில் அமைந்திருப்பதே உண்மை. ஆனால், ஆயிரக்கால் மண்டபத்தை ஆகம அடிப்படையில் அமைத்தனர்.

பெருமளவு எண்ணிக்கையுள்ள ஆயிரக்கால் மண்டபத்திலும் சிற்பியர் தம் திறமையைத் தக்கவண்ணம் காட்டியுள்ளனர்.

நூற்றுக்கால் மண்டபம்

ஆயிரக்கால் மண்டபம் போலவே நூற்றுக்கால் மண்டபங்களும் பல திருத்தலங்களில் காணப்படுகின்றன. சிலவற்றுக்கு வரலாற்றுச் சிறப்பும் உண்டு.

சிதம்பரத்தில் சிவகாமியம்மன் கோயிலுக்குத் தென்புறமாக நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. சோழன் விக்கிரமன் காலத்தில் காலிங்கராயனால் கட்டப்பட்ட இம்மண்டபத்தை விக்கிரசோழ மண்டபம் என்று வழங்குவர். இந்த இடத்தில் சோழ மன்னர்க்கு முடிசூட்டு விழா நடந்துள்ளது என்று வரலாறு கூறும்.

பதினாறு, பன்னிரண்டு கால் மண்டபங்கள்

திருவண்ணாமலை, சிதம்பரம் முதலிய பல திருத்தலங்களில் பதினாறுகால்     மண்டபங்களைக்     காணலாம். பதினாறு கலைகளுடன் கூடிய சந்திரனை நினைவிற் கொள்ளும் வகையில் பதினாறுகால் மண்டபம் கட்டப்படுகின்றது என ஆன்றோர் கூறுவர். பன்னிரண்டு கால் மண்டபங்கள் சில திருத்தலங்களில் காணலாம்; அவற்றைத் தத்துவ நோக்கில் ஆதித்தர்களின் (சூரியர்களின்) சின்னங்களாகப் போற்றிக் கூறுவர்.

நாலுகால் மண்டபம்

பொதுவாக நாலுகால் மண்டபங்கள் பல ஆலயங்களில் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், வைணவ நோக்கில் திருக்கண்ண மங்கையில் நாலுகால் மண்டபத்திற்கெனத் தனிச் சிறப்பு உண்டு.

அசுரர்களிடமிருந்து பிரம்மனிடம் வேதங்களை மீட்டுத் தந்த இறைவனைத்     திருக்கண்ணமங்கையிலே     எப்பொழுதும் அருளும்படி வேண்டி, நான்கு வேதங்களை நான்கு தூண்களாகவும் கொண்ட மண்டபத்தை அமைத்தருளினான். அந்த மண்டபமே ஸ்ரீவிமானம் என்று கூறப்படுகிறது; இது வைணவ மரபாகும்.

ஒற்றைக்கால் மண்டபம்

ஒற்றைக் காலில் மண்டபம் அமைப்பது எப்படி என்று யாரும் வினவலாம். கருவறையையொட்டி முன்னதாகச் சுவரும் தளமும் எழுப்பி, ஒற்றைத் தூணை ஒரு கோடியில் நிறுவி அமைப்பர்.

எடுத்துக்காட்டாகச் சிதம்பரம் சிவகங்கைக் குளத்திற்கு மேலே (தென் மேற்குப் படித்துறைக்கு மேற்பகுதியிலே) இருபத்திநான்கு கால் மண்டபம் உள்ளது; அதன் மேற்புறத்தே விநாயகரை ஒற்றைக்கால் மண்டபத்தில் பிரதிட்டை செய்துள்ளதைக் கூறலாம்.