6.2 தீர்த்தங்களும், கட்டடக் கலை நுட்பமும்

உலக நாகரிகம் ஆற்றங்கரையைச் சார்ந்தே பெயரிடப்பட்டதை வரலாறு கூறும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் காவிரி ஆற்றங்கரையினை ஒட்டியே     பல     திருத்தலங்கள் அமைந்துள்ளன; அடுத்து வையை, பெண்ணை, தாமிரபரணி முதலிய ஆறுகளின் மருங்கே திருத்தலங்கள் பெரும்பாலும் அமைந்துள்ளன. மேலும் திருக்குளம் அல்லது கிணறு அமைத்துத் தீர்த்தம் எனப் போற்றி நிற்பது ஆலய மரபாக உள்ளது. கடல் அருகே உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்குக் கடலே தீர்த்தமாக அமைந்துள்ளது. ஆனால், ஆறு,      குளம்     ஆகியவற்றுக்குத் துறையமைப்பதும் படிக்கட்டுகள் அமைப்பதும் கட்டடக்கலைச் சார்புடையது.

பொதுவாகத் திருக்குளங்கள் சதுரமாகவும் நீண்ட சதுரமாகவும் படியமைப்புகளுடன் கட்டப்பட்டிருப்பதே பெரும்பான்மை. ஆனால், சுவஸ்திக் வடிவமைப்புடன் கூடிய தீர்த்தக் குளமும் தமிழகத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து உறையூர் வழியே செல்லுகையில் 21 கி.மீ. தொலைவிலுள்ள திருவெள்ளறை எனும் திருத்தலத்தில் சுவஸ்திக் குளம் உள்ளது. சுவஸ்திக் வடிவமைப்பில் இந்தத் தீர்த்தக் குளம் அமைந்திருப்பதால், இக்குளத்து ஒரு துறையிலே நீராடுபவர்களை இன்னொரு துறையிலிருப்பவர்கள் காணமுடியாது.

6.2.1 திருவானைக்கா

 பஞ்சபூதத் தலங்களுள் நீர்த்தலமாகிய திருவானைக்கா, கட்டடக் கலை நோக்கில் பல சிறப்புகளைக் கொண்டது.

திருவானைக்கா ஆலயங் கட்டிய காலத்திலிருந்து, அருள்மிகு கா அண்ணலாகிய மூலவர் சிவலிங்கம் பிரதிட்டை பண்ணிய இடத்தில் நீர் ஊறிக் கொண்டே இருப்பதைக் கண்டு வியப்புறலாம். காவிரி நீரே ஒருவகையில் சிவலிங்கத்துக்குப் பாதபூசை செய்வதே போல உள்ளது. இத்தகைய கட்டடக் கலைப் பொறியியல் நுட்பத்துடன் மிக நேர்த்தியாகக் கருவறையும் அமைத்திருப்பது பழங்காலத் தொழில் நுட்பத்தைப் புலப்படுத்துகிறது.