1.2 இலக்கியங்களில் செப்புத் திருமேனிகள்

 

இந்தியாவின் தொன்மையான இலக்கியங்களில் செப்புப் படிமங்கள் பற்றிக் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. ரிக் வேதம், யஜூர் வேதம், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலும்,     அக்னி புராணத்திலும், மத்சய புராணத்திலும் உலோகப் படிமங்கள்     குறிப்பிடப் பட்டிருக்கின்றன. மத்சய புராணத்தில்     இப்படிமங்கள் வடிக்கப்படும் முறை விளக்கப் பட்டுள்ளது. சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் இக்கலை     பற்றிய செய்தி களைக் காணலாம். சேரலாதன் என்னும் சேர மன்னன் முசிறியை வென்று அங்கிருந்த பொன்செய் பாவையை வைரத்தோடு கவர்ந்தான் என்று அகநானூறு (127) கூறுகிறது. நன்னன் என்பான் தன் காவல் மரத்தில் இருந்த மாங்கனி ஒன்று ஆற்றில் விழுந்து மிதந்து செல்ல, அதனை ஒரு பெண் எடுத்து உண்ண அவளுக்குக் கொலைத் தண்டனை விதித்தான். அப்பெண்ணின் தந்தை தனது     மகளது எடைக்குச் சமமான எடை கொண்ட பொன் செய் பாவையைக் கொடுக்கிறேன் என்றான். நன்னன் அதைக் களோது     அப்பெண்ணைக்     கொலை     புரிந்ததைக் குறுந்தொகைப் பாடல் ஒன்று(292) குறிப்பிடுகிறது.