2.3
கோயில் சிற்பங்கள்
|
பல்லவ
மன்னன் முதலாம்
மகேந்திர வர்மன்
(கி.பி 590-630)
காலத்தில்
பாறைகளைக் குடைந்து
குடைவரைக் கோயில்கள்
அமைக்கப் பட்ட போதும்
அவற்றில் கற்களாலான இறையுருவங்கள் வைக்கப்
படவில்லை. அப்போது
கருங்கல் இறந்தோரோடு
தொடர்புபடுத்தப்
பட்டிருந்ததால்
இறையுருவங்கள் மரத்தாலோ
அல்லது
உலோகத்தாலோதான்
செய்விக்கப் பட்டன. அவற்றை
வைப்பதற்குக் கருவறையில் இடம் ஒதுக்கப்
பட்டிருந்தது. சில
பிற்காலத்துக் கோயில்களிலும்
மரத்தாலான சிற்பங்கள் இடம்
பெறலாயின. உதாரணமாக, உத்திரமேரூர்
சுந்தரவரதப்
பெருமாள் கோயிலிலுள்ள இறை
உருவங்கள் மரத்தினால்
செய்யப் பட்டவையாகும்.
கேரளத்துக் கோயில்களில்
பெரும்பான்மையான சிற்பங்கள்
மரத்தினால் ஆனவையாகும்.
காரணம் அங்கு கற்களை
விட அதிகமாகக் கிடைப்பது
மரமேயாகும். எனவே
கேரள எல்லையில் உள்ள
திருநெல்வேலி,
நாகர்கோயில்
ஆகியபகுதிகளில் சில
கோயில்களின்
மண்டபங்களில்
மரச் சிற்பங்களைக்
காணலாம். திருநெல்வேலி
நெல்லையப்பர் கோயில் முன்
மண்டபத்தில் கேரளத்துத்
திருவடி அரசர்களின் திருப்பணி
நடந்துள்ளது.
அதன்
விதானத்தில் ஏராளமான
மரச் சிற்பங்கள்
அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றும்
ஒன்றரை
அடி
உயரம் கொண்டவை.
இறையுருவங்களும்,
இராமாயணம், பாரதம்
கதைத்
தொடர்களும்,
நாட்டார் வழக்காற்றியல்
சிற்பங்களும்,
சில பாலியல் சிற்பங்களும்
இங்குக் காணப் படுகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோயிலின்
மேல்தட்டில்
உள்ள விதானத்தில்
அழகான மர வேலைப்பாடுகளும்,
மரச்
சிற்பங்களும்
செய்விக்கப் பட்டுள்ளன.
இவற்றில் கிருஷ்ண
லீலைகள், பாரதம்
மற்றும் பிற
வைணவத் தொடர்பான சிறுசிறு
சிற்பத் தொகுதிகளைக்
காணலாம். கிருஷ்ணாபுரம்
வெங்கடாசலபதி கோயில்
கோபுரத்தின் முதல் தட்டின்
உட்புறம் ஒரு மண்டபம்
போல் அமைந்துள்ளது. வீரன்,
நடன மாது ஆகியோரது
உருவங்கள்
மண்டபத்தைத்
தாங்கி நிற்கின்றன.
மரத்தாலான
இச்சிற்பங்கள்
மூன்றடி உயரமானவை.
மண்டபத்தின் மேலே நான்கு
பக்கங்களிலும் வரிசையாக
மரச் சிற்பங்கள்
உள்ளன. திருநெல்வேலி தாமிர
சபையில்
நேர்த்தியான மரச்
சிற்பங்கள் வைக்கப்
பட்டுள்ளன. சங்கரன்
கோயிலில் புலித்தேவர் அறையில்
மரச் சிற்பங்கள்
உள்ளன. திருக்குறுங்குடி கோயில்
கோபுரத்தில் மரச் சிற்பங்கள்
வைக்கப் பட்டுள்ளன. |
வட
இந்தியாவைப் போன்றே,
தமிழகத்திலும் பல்லவ,
பாண்டிய, சோழர்களின்
ஆட்சிக்
காலத்தில் கோயில்
வாயிலின் நிலைகளின்
மேற்பகுதியில்
சிற்பங்கள்
அமைக்கும் வழக்கம்
பின்பற்றப் பட்டது.
நிலைக்காலின்
இரண்டு
பக்கங்களிலும்
வளமையைக் காட்டும்
செடி கொடிகளின்
உருவங்கள்
செதுக்கப் பட்டன.
விசய நகர நாயக்கர்
காலத்தில் இம்மரபு
மாற்றமடைந்தது.
கோயில் வாயிற் கதவுகளில்
சிற்பங்கள் செதுக்கப் பட்டன.
இவை பொதுவாகத்
தனியாகச் செய்து கதவுகளில்
பொருத்தி வைக்கப்
பட்டுள்ளன. இவை
அனைத்தும்
மரத்திலேயே
அமைக்கப்பட்டன.
இதற்கான
கருத்துகளைப்
புராணங்களிலிருந்தும்,
இராமாயணம்,
மகாபாரதம் ஆகியவற்றிலிருந்தும்
எடுத்துக் கொண்டனர்.
இதுபோல் சிற்பங்களுடன்
அமைக்கப் பட்ட கதவுகள்
தமிழகத்தில் பல
கோயில்களில் காணப்
படுகின்றன.
அவற்றில் அழகு
மிகுந்தனவும், கருத்தமைதி உடையனவும்
சில கதவுகளேயாகும்.
இதற்கு உதாரணமாக அழகர்
கோயில், பிரம்ம தேசம், கல்லிடைக்
குறிச்சி, பாபநாசம்,
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
(ஆயிரங்கால்
மண்டபத்தில்
உள்ள
கதவு) ஆகியவற்றைக்
குறிப்பிடலாம். அழகர் கோயில்,
கல்லிடைக் குறிச்சி ஆகிய
கோயில் கதவுகளில் வைணவம்
தொடர்பான சிற்பங்களும்,
மற்றவற்றில் சைவம்
தொடர்பான சிற்பங்களும் உள்ளன.
வைணவக் கோயில் கதவுகளில் மேல்
தட்டில் விஷ்ணுவின்
அவதாரச் சிற்பங்களும், கணபதி
சிற்பமும் உள்ளன. அடுத்த
தட்டில் இராமாயணச்
சிற்பங்கள் தொடர்ச்சியுடைய கதை
நிகழ்ச்சிகளாகவோ, அல்லது குறுக்கு
வெட்டு அமைப்பிலோ
செதுக்கப் பட்டிருக்கின்றன.
இதற்குக் கீழே மகாபாரதச்
சிற்பங்கள் இதே அடிப்படையில்
அமைந்துள்ளன. அதற்கும்
கீழ்த்தட்டில்
பாலியல்
சிற்பங்களும்
இடம்
பெற்றுள்ளன. எவ்வாறு
இதிகாச, புராண மற்றும் பிற
கதைகளுக்கு
முக்கியத்துவம்
கொடுக்கப் பட்டுள்ளது
என்பதை இஃது உணர்த்துகிறது. |
அனைத்துக்
கதவுகளி்லும் கணபதி
சிற்பம் அமைக்கப்
பட்டிருப்பதற்குக் காரணம் அவர் கதவுகளின்
காவலன் என்னும்
கருத்து மேலோங்கி இருப்பதே ஆகும்.
கதவுகளில் விஷ்ணு
அனந்தசாயியாக (அரவத்தின் மீது துயில்
கொள்வது) உள்ள
சிற்பம் அமைக்கப்படும்
வழக்கம்
உள்ளது. இது
வைகுண்டத்தை
அடைவதற்காகத் திறக்கப்படும்
கதவின்
குறியீடாக உள்ளது. |
தமிழகத்துக்
கோயில் கதவுகளில்
உள்ள இதிகாசச்
சிற்பங்களில் கதைத்
தொடர்ச்சியைக் காணமுடிகிறது. இது
விசயநகர - நாயக்கர்
காலத்தில் பிரபலமாக வழக்கிலிருந்த
பகல்வேசம் (பகட்டிவேசம்) என்னும்
கிராமியக் கலையை
நினைவூட்டுகிறது. பகட்டி
அல்லது பகல்வேசம் என்பது
விசயநகர் பகுதியிலிருந்து கிராமியக்
கலைஞர்கள் தமிழகத்திற்கு
வந்து பகலிலேயே
ஒவ்வோர் ஊரிலும் இராமாயணம்,
மகாபாரதம் போன்ற
கதைகளை நடித்துக் காட்டுவதாகும்.
இதனை அக்கலைஞர்கள் பரம்பரைத்
தொழிலாகக் கொண்டு
அதில் வரும்
வருமானத்தில் வாழ்ந்தனர்.
இவர்களது
கலையையே இம்மரச் சிற்பங்களும்
பிரதிபலிக்கின்றன. |
மரங்களை
வைத்துத் தேர் செய்யும்
மரபு தமிழகத்தில்
பல
நூற்றாண்டுகளாக
வழக்கிலிருந்துள்ளது. மரத்
தேர்களின்
அடிப்படையில்தான் கல்தேர்கள்
என்னும்
ஒற்றைக்கல் ரதங்கள்,
பல்லவர்களால் மாமல்ல புரத்திலும்,
பாண்டியர்களால் கழுகு மலையிலும்
அமைக்கப் பட்டன.
இருப்பினும் பழங்காலத்தில்
அமைக்கப் பட்ட தேர்களைக்
காண முடியவில்லை.
இருப்பினும் சங்க இலக்கியங்களிலும்,
சிலப்பதிகாரத்திலும்,
மணிமேகலையிலும்
தேர்கள்
அக்காலத்தில்
இருந்தமைக்கான
செய்திகள் உள்ளன.
அவை நெடுந்தேர், பொற்றேர்,
கொடிஞ்சி நெடுந்தேர்,
கொடித்தேர், அணிகொள்தேர்
என்றெல்லாம் அழைக்கப்
பட்டிருக்கின்றன.
சிலப்பதிகாரம்
புத்தக் கடவுளுக்கு
என்று தேர்த்திருவிழா நடைபெற்றதைக்
குறிப்பிடுகிறது. |
|
தேர்ச் சிற்பம் |
பெரிதாய்க்
காணப் படக்காட்சியை அழுத்துக |
|
தற்போது பெரும்பான்மையான கோயில்களில் தேர்கள் உள்ளன. அவை இடைக் காலத்திலிருந்து இன்றுவரை செய்து வைக்கப் பட்டவையாகும். பல கோயில்களின் தேர்கள் விசயநகர நாயக்கர் ஆட்சிக் காலத்தில் செய்விக்கப் பட்டவை ஆகும். திருவிழாக் காலங்களில் இறையுருவங்களை வீதிகளுக்கு எடுத்துச் செல்லவே கோயில் போன்ற அமைப்புடைய இத்தேர்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. எனவே தேர், மக்களின் சமூக, பொருளாதார, சமயப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய ஒன்றாக விளங்குகின்றது. தமிழகத்தில் 866 தேர்கள் இருப்பதாக மக்கட் கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது. |
|
தேரின்
அமைப்பு |
பெரிதாய்க்
காணப் படக்காட்சியை அழுத்துக |
|
இந்த
நடமாடும் கோயில்கள் நான்கு
அல்லது அதற்கு
மேற்பட்ட கனமான
சக்கரங்களைக் கொண்டவையாகும்.
இவற்றின் மூன்று
பக்கங்களிலும் இறையுருவங்களும்,
புராணக்கதைத் தொகுதிகளைக் காட்டும்
சிற்பத் தொகுதிகளும்,
மிருகங்கள், செடி கொடிகள்
ஆகியவற்றின் உருவங்களும்,
ஆங்காங்கே பக்தர்கள்
மற்றும் கொடையாளிகளின்
உருவங்களும் செதுக்கப் பட்டிருப்பதைக்
காணலாம்.திருவிழாக்
காலங்களில்
அவற்றின் மீது
எண்ணெய் பூசுவதால்
இச்சிற்பங்கள் அழகாகக்
கற்சிற்பங்கள் போன்று கருமை
நிறத்தில் காட்சியளிக்கும்.
தேர்களில் செய்து வைக்கப்பெற
வேண்டிய சிற்பங்கள் என்னென்ன என,
சிற்ப சாத்திரங்களில்
விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
சிங்கம், யானை, முதலை,
நடனமாடும் பூத கணங்கள், யட்சர்கள், பல
தலைகளையுடைய
பாம்புகள், பிரம்மா, விஷ்ணு,
சண்முகர், சரஸ்வதி, கணபதி,
துர்க்கை, அழகிய தேவலோகப்
பெண்கள், சிறுதெய்வங்கள்,
அரசர்கள், தலைவர்கள்,
புரோகிதர்கள், பிராமணர்கள்,
பக்தர்கள், துவார பாலகர்,
கின்னரர், நாகர்கள், கருடன்
ஆகியோரின் உருவங்களைத் தேர்களில்
செதுக்கி வைக்கலாம்
என மான சாரம் கூறுகிறது. |
விஷ்வகர்ம
வாஸ்து சாத்திரத்தில் அனைத்துக்
கடவுளர்
உருவங்களும் அவரவர்
வாகனங்களில் அமர்ந்திருப்பது
போன்று அமைக்கப்பட
வேண்டும் என்றும், அனுமன்,
ஸ்ரீஇராமன், சிவ பெருமான்
ஆகியோரின் உருவங்களும்
வடிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்
பட்டிருக்கிறது. ஈஸ்வர
சுக்கிரையிலும், குமார
தந்திரத்திலும் எந்தெந்தக் கடவுளின்
உருவங்கள் தேரின்
எந்தெந்தப் பகுதியில்
வைக்கப்பட
வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. |
|
தமிழகத்துத்
தேர்களில் முக்கியத்
தட்டுகளில் (tiers)
உள்ள சிற்பங்கள் எட்டு
அங்குலம் முதல் இரண்டரை
அடி
உயரமுள்ளனவாக
அமைந்துள்ளன. சிற்றுருச்
(miniature) சிற்பங்கள்
ஆறு அங்குலம் உயரம்
உடையனவாகும். தேரின்
அச்சுப் பகுதியில்
கணபதி,
முருகன், பூத கணங்கள் ஆகியோரின்
உருவங்கள் வைக்கப்
பட்டுள்ளன. அவர்கள்
தேர்களின் பாதுகாவலர்களாகக்
கருதப் படுகின்றனர்.
தேர்களில் அதிட்டானப் பகுதிகளில்
இந்து சமயத் தொன்மக்
கதைகளும், மக்களின் அன்றாட
வாழ்க்கை
முறைகளைச்
சித்திரிக்கும் செய்திகளும்,
சிற்பங்களாக வடிக்கப்
பட்டுள்ளன. தேரின் பீடத்தில்
நாட்டியப் பெண்கள்,
இசைக் கருவிகளை மீட்டுவோர்,
ஆச்சார்ய புருஷர்கள்,
அஷ்டதிக் பாலகர்கள், கஜலட்சுமி
ஆகியோரின் உருவங்கள்
அமைக்கப் பட்டிருக்கின்றன.
இச்சிற்பங்கள் பெரும்பாலும்
கனமான பலகையில் செதுக்கப்
பட்டவையாகும். இலண்டனில்
தனியார் சேகரிப்பில் உள்ள
தமிழகத்துத் தேர் ஒன்றில்
கடவுள்கள்,ரிஷிகள் ஆகியோரின்
உருவங்கள் முப்பரிமாணத்தில்
செய்யப் பட்டிருக்கின்றன.
இவை தேரின் இரு தட்டுகளில்
அமைந்துள்ளன. இதில்
சிவபெருமான் தனது
எதிரிகளான அசுரர்களை வதம்
செய்கின்றார். சிலவற்றில்
பக்தர்களுக்கு அருள் செய்கிறார்.
மார்க்கண்டேய புராணக் கதையும் உள்ளது. |
கோயில்களில் திருவிழாக் காலங்களில் இறையுருவங்களை வீதி உலாவிற்கு எடுத்துச் செல்வதற்காக அந்தந்த இறையுருவத்திற்குத் தொடர்பான வாகனங்கள் மரத்தினால் செய்யப் பட்டன. தஞ்சாவூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் இன்றும் வாகனங்கள் செய்யும் தொழில் நடைபெற்று வருகின்றது. அங்கு அன்னம், மயில், சிங்கம், நந்தி, கருடன், யானை, காமதேனு போன்ற வாகனங்கள் செய்விக்கப் பட்டுக் கோயில்களுக்கு விற்பனை செய்யப் படுவதைக் காணலாம். இவ்வாகனங்கள் இந்து சமய மேல்தட்டுக் கருத்துகளுக்கும் நாட்டுப்புறக் கலைக்கும் பாலங்களாக அமைகின்றன. கோயில்களுக்குள் இறைவனின் கற்சிற்பங்களுடன் சேர்த்துச் செய்யப்படும் வாகனங்கள் அவ்விறைவனுக்கு நிகராகவே வணங்கப் படுகின்றன. ஆனால் மரத்தால் செய்யப்படும் வாகனங்கள் திருவிழாக் காலங்களில் இறையுருவங்களைத் தாங்கிக் கொண்டு தெருக்களில் ஊர்வலமாக வரும் போதுதான் புனிதத்துவம் பெறுகின்றன. மற்ற நாட்களில் அவை ஏதேனும் ஓர் ஒதுக்குப் புறமான இடத்தில் நிறுத்தி வைக்கப் படுகின்றன. இவை தற்காலிகமாக, முக்கியத் திருவிழாக்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியனவாகும். இவற்றில் சில, அரசரின் ஆசனங்களி்லும் இடம் பெற்றிருக்கும். உதாரணமாக, சிம்மாசனம் என்று சொல்லப்படும் ஆசனத்தின் இரு ஓரங்களிலும் யாளியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் முகம் சிம்மம் போன்றும் உடல், துதிக்கை ஆகியவை யானையைப் போன்றும் அமைந்திருக்கும். சிவபெருமானின் வாகனமான காளையின் இரண்டு பக்கங்களிலும் இறக்கை போன்று யாளியின் உருவம் அமைக்கப் படும். அசுரர்களும் வாகனமாகச் செய்யப்படுவர் என்பதற்குத் தமிழகத்தின் பல சிவன் கோயில்களில் உள்ள இராவண வாகனம் குறிப்பிடத் தகுந்ததாகும். அனைத்து வாகனங்களுமே வீதி உலாவுக்கு எடுத்துச் செல்லுவதற்கு வசதியாக மரத்தாலேயே செய்யப் படுகின்றன. இன்றும் வாகனம் செய்யும் கலை தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைமுறையில் இருந்துவருகிறது. இன்று பெரும்பான்மையான கோயில்களில் உள்ள வாகனங்கள் நானூறு ஆண்டுகளுக்கு உள்ளாகச் செய்விக்கப் பட்டவையாகும். |