3.2 சுதைச் சிற்பங்கள்

சுண்ணாம்பால் உருவாக்கப்பட்ட சுதைச் சிற்பங்கள் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கிலிருந்தன.  பின்னாளில் சுண்ணாம்பிற்குப் பதிலாக சிமெண்ட் பயன்படுத்தப் பட்டது. மரக் குச்சிகளுக்குப் பதிலாக இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப் பட்டன. முற்காலச் சிற்பங்கள் இன்று காணக் கிடைக்கா விட்டாலும் இலக்கியங்களில் அவை பற்றிய செய்திகள் உள்ளன. பரிபாடலில் (10:43-48) மதுரையில் இருந்த மாடம் ஒன்றினையும் அதில் இருந்த  சிற்பங்களையும் பற்றியும் விளக்கப் பட்டுள்ளது.

அதாவது, மாட மதுரை நகரப் பெருந்தெரு ஒன்றில் சில நிலைகளையுடைய அழகிய மாடம் ஒன்று இருந்தது. அந்த மாடத்தில் பல சுதையுருவங்கள் அமைக்கப் பட்டிருந்தன. அவற்றில் வேங்கைப் புலியுருவம் மிகச் சிறந்த அழகிய சுதை வேலைப்பாட்டுடன் அமைந்திருந்தமையால் அஃது உயிருள்ள வேங்கை உருவம் போலவே பொலிவுடன் தோன்றியது. அவ்வழியே சென்ற ஒரு பெண் யானை அந்தச் சுதையுருவத்தை மெய்யான வேங்கை என்று நினைத்து அச்சமடைந்து பாகனுக்கும் அடங்காமல் அலையத் தொடங்கியதாம்.

காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்த மாளிகைகளில் சுதையினால் செய்யப்பட்ட சிற்ப உருவங்கள் அமைக்கப் பட்டிருப்பதை, இந்திர விழாவின் போது அந்நகரத்துக்கு வந்த மக்கள் கண்டு களித்தனராம். இதனை மணிமேகலை,

வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச்
சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண்கவர் ஓவியங் கண்டு நிற்குநரும்

(மலர்வனம் புக்க காதை - 126-131)

என்று கூறுகிறது.

3.2.1 கோயில் கருவறைகளில் சுதைச் சிற்பங்கள்

பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன் (கி.பி590- 630)காலத்தில் வெட்டப் பட்ட குடைவரைக் கோயில்களில் கல்லினால் இறையுருவம் செய்யப் படவில்லை. மாறாக மரத்தினாலோ அல்லது சுதையாலோதான் சிற்பங்கள் செய்து வைத்து வழிபாடு நடத்தப் பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லினால் சிலை செய்யும் மரபு வளர்ந்தது. இருப்பினும் இன்னும் சில கோயில்களில் கருவறைகளில் சுதையாலான சிற்பமே இருக்கக் காணலாம். அவற்றிற்கு இன்றும் திருமஞ்சன நீராட்டு நடைபெறுவதில்லை. எண்ணெய்க் காப்பு  (தைலக் காப்பு) மட்டுமே நடைபெறும். உற்சவருக்கு மட்டுமே திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். வைணவர்கள் கோயில் என்று சொன்னாலே திருவரங்கம்தான் நினைவில் எழும்  திருவரங்கத்தில் பச்சை மாமலை போன்றுள்ள இறைவனின் கிடந்த கோலத் திருமேனி சுதையால் ஆனதாகும். இத்திருமேனி கல்லால் வடிக்கப் பட்டு, மேற்புறம் சுதையைப் போன்று தோற்றமளிக்கும் நிலையிலே ஒரு வகைக் கலவைப் பொருளால் பூசப்பட்டது என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அதற்குச் சரியான ஆதாரம் தெரியவில்லை. அவ்விறை வனுக்குத் தைலக் காப்பே சாத்தப் படுகிறது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு அருகில் பாண்டவ தூதுப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் விசுவ ரூபக் காட்சி தரும் கிருஷ்ணராவார். இவ்வுருவம் சுதையாலானது. 26 அடி உயரமும், 14 அடி அகலமும் கொண்டது. தம்மை இகழ்ந்து அவமானப் படுத்த எண்ணிய துரியோதனனுக்கு     விசுவரூபம் எடுத்துக் காண்பித்து வல்லமையைப் புலப்படுத்திய கண்ணனது திருவுருவமே இது. அமர்ந்த நிலையில் உள்ளது. இங்கு இறைவன் உடுத்திருக்கும் பஞ்ச கச்சத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கலைத் திறமையுடன் கூடிய அணிநலம் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். கெட்டியான மூங்கில் குச்சிகளை ஒன்றோடு ஒன்று பிணைத்து, உருவத்தின் உள் கட்டமைப்பினை உருவாக்கிய பின் அரைத்த சுண்ணாம்பு விழுதைத் தேன் மற்றும் பலமூலிகைச் சாறுகளுடன் பிசைந்து, கூழாக்கி அதை மூங்கில் மீது அப்பி உடையை உருவாக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் காலத்தினைக் கணக்கிடுவது அரிதாக உள்ளது. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டிருப்பினும் அரசர்களின் ஆதரவு இருந்ததற்கான ஆதாரங்கள் குறைவே. சோழ மன்னன் முதலாம்     குலோத்துங்க சோழன் இக்கோயிலைப் புதுப்பித்ததற்கான கல்வெட்டுச் செய்தி உள்ளது. இந்தப் பெருமாளுக்கு ஒரு தடவை தைலக் காப்புச் செய்ய 20 கிலோ சாம்பிராணித் தைலம் தேவைப் படுகிறது. கோயில் நகரமாம்     காஞ்சியில் பிற கோயில்களுக்கு இருக்கிற வருமானத்தில் சிறிதும் இக்கோயிலுக்கு இல்லை.
    

அழகர் கோயில்
        

மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோயில், திருமாலிருஞ் சோலை என்று பரிபாடலிலும் சிலப்பதிகாரத்திலும் புகழப் பட்டிருக்கும் திருத்தலமாகும். இங்குள்ள மூலவர், தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கும் சுந்தர ராசப் பெருமாளாவார். கட்டுடலுடன் உயரமாகக் காண்போரைக்     கவரும் பாவனையில் உள்ள பெருமாளின் திருவுருவம் பெயருக்கேற்ற அழகுருவமாகும். இவ்வுருவம் சுதையாலானது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தைலக் காப்பு நடைபெறும். மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில் மூன்று அடுக்குகளில், கீழிருந்து மலோக முறையே அமர்ந்த, நின்ற, கிடந்த நிலையில் பெருமாள் திருவுருவங்கள்    வைக்கப் பட்டுள்ளன. இவை சுதை உருவங்களாகும். மேலிரண்டு அடுக்குகளில் உள்ள உருவங்கள் வண்ணம் தீட்டப் பட்டுள்ளன. கீழே கருவறையில் வழிபாட்டில் உள்ள உருவத்திற்கு அவ்வப்போது தைலக் காப்பு நடைபெறும்.         
 

சமயபுரம்     
 

திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. கிராம தேவதைகளில் மிகவும் குறிப்பிடத் தக்க ஒன்று மாரியம்மன் ஆகும். மாரியம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்ற ஒன்று சமயபுரம் மாரியம்மன் கோயில். இங்குள்ள அம்மன் சிற்பம் சுதையாலானதாகும். இதுபோன்று பெரும் பாலான அம்மன் கோவில்களில் மூலவர் சிற்பங்கள் சுதையாலானவை ஆகும்.         

சீர்காழி         
 

சிதம்பரத்திற்கு அருகில் உள்ள சீர்காழி சிவன் கோயிலில் இறைவனது திருக்கோலங்கள் குரு, இலிங்கம், சங்கமம் ஆகிய அடிப்படையில் அமைந்துள்ளன. இக்கோயிலில் அடித்தளத்தில் உள்ள பிரம்மபுரீசுவரர் இலிங்க அமைப்பு உடையவர், முதல் தளத்தில் உள்ள தோணியப்பர் குரு அமைப்புடையவர். இரண்டாம் தளத்தில் உள்ள சட்டையப்பர் உருவம் சங்கம அமைப்புடையது. தோணியப்பரின் உருவம் சுதையுருவமாகும். சட்டையப்பர் மூங்கில் பட்டையும் கலவையும் கூடிய வேலைப்பாடு கொண்டது. அவருக்குத் திருமஞ்சனம் கிடையாது. புனுகுச் சட்டம் சாத்துவதே மரபாக இருந்து வருகிறது.
 

3.2.2 விமானங்களில் சுதைச் சிற்பங்கள்
 

கருவறையின் அடித்தளத்திலிருந்து மேலே     உள்ள கலசம் வரையான மொத்தப் பகுதியும் விமானம் ஆகும். கருவறையின் மேற்பரப்பில் வெளிப் பக்கத்தில் சுதையாலான உருவங்கள் வைக்கப் பட்டிருக்கின்றன. தொடக்கக் காலக் கோயில்கள் முழுதும் கல்லாலானவை. பின்பு கருவறையின் பிரஸ்தரப் பகுதிவரை கல்லிலும் அதற்கு மேல் சுதையாலும் கட்டி அவற்றில் சுதைச் சிற்பங்களையும் வைத்தனர். சில இடங்களில் கல்லாலான சிற்பங்களின்    மீது சுதையும் பூசியுள்ளனர் உதாரணமாக,     இராமேசுவரம் கோயில் வளாகத்தில் உள்ள பூந்தோட்டத்திற்குள் கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சன்னதிகள் உள்ளன. அவற்றின் மேற்பரப்பில் கல் சிற்பங்களின் மீது சுதை பூசப் பட்டிருப்பதைக் காணலாம். இராமேசுவரம் இராமநாத சுவாமி விமானத்தின் மேற்பகுதியில் ஏராளமான சுதைச் சிற்பங்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிடத் தக்கவை சண்டேசானுக்கிரஹ மூர்த்தி, விஷ்ணு அனுக்கிரஹ மூர்த்தி, தட்சிணா மூர்த்தியும் அவரது சீடர்களும், உமா சகித மூர்த்தி, தேவியருடன் சுப்பிரமணியர், இலட்சுமி கணபதி, நரசிம்மர், சரப மூர்த்தி, இரண்டு தேவியருடன் அமர்ந்துள்ள யோக நரசிம்மர், திருவிளையாடற் புராணக்கதையைக் கூறும் சிவன், பார்வதி, நாரை உருவங்கள், இலட்சுமி நாராயணன் போன்றவற்றைக் காணலாம். இது போன்றே சிவன் கோயில் விமானங்கள் பலவற்றில் அதிக அளவில் சிவ லீலை தொடர்பான சிற்பங்கள் வைக்கப் பட்டிருப்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.         
 

இராமாயண - மகாபாரதச் சிற்பங்கள்
 

மதுரை கூடல் அழகர் கோயில் விமானத்தில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் தொடர்பான கதைகள் சுதைச் சிற்பங்களாகச் செய்து வைக்கப் பட்டுள்ளன. இதில் இராமர் பட்டாபிடேகம், மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டுள்ளது. இராவண வதைக் காட்சியும், கிருஷ்ணர் வஸ்த்ர அபகரண மூர்த்தியாகக் கோபியரின் ஆடைகளை மரத்தின் மீது எடுத்து வைத்திருக்கும் காட்சியும் அழகாக வண்ணம் தீட்டி வைக்கப் பட்டுள்ளன. அழகர் கோயில் சோமசந்த விமானத்தில் தல புராணச் செய்திகளும், அவதாரச் செய்திகளும் சுதை வடிவங்களாகச் செய்து வைக்கப்பட்டுள்ளன. மோகினி அவதாரக் கதை சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. இவை பிற்காலத்தில்     அமைக்கப்பட்ட     சிற்பங்கள்     ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர்     ஆண்டாள் கோயில் விமானத்தில் திருப்பாவை தொடர்பான சிற்பங்களும், விஷ்ணு அவதாரச் சிற்பங்களும் உள்ளன.     
 

3.2.3 கோபுரச் சிற்பங்கள்
 

தமிழகத்துக் கோயில் கோபுரங்கள் அனைத்திலும் உள்ள சிற்பங்கள் சுதையினால் செய்யப் பட்டவையாகும். மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில் உள்ள கோபுரத்தில் விபீடணனுக்கு இராமர் பட்டாபிடேகம் செய்யும் காட்சியும், இராமர் பட்டாபிடேகக் காட்சியும் உள்ளன. கோயிலைக் காண்போர் முதலில் நல்லதைக் காண வேண்டும் என்ற நிலையில் பட்டாபிடேகக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு தளத்தில் இராமாயணக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மற்றொரு தளத்தில் கிருஷ்ண லீலைகள் தொடர்பான சிற்பங்கள் செய்து வைக்கப் பட்டுள்ளன. அழகர் கோயிலில் வெளியில் உள்ள பதினெட்டாம் படி கருப்பசாமி கோபுரம் ஏழு அடுக்குகளைக் கொண்டது. இதில் துவார பாலகர்கள் ஒவ்வோர் அடுக்கிலும் கீழிருந்து     மலோக எட்டுக் கைகளிலிருந்து இரண்டு     கைகள் வரை கொண்ட உருவங்களாக உள்ளனர். மேலே செல்லச் செல்லச் சிறு உருவங்களாக வருவதால் கைகளின்     எண்ணிக்கையும் குறைகிறது. இதில் இராமாயணச் சிற்பங்களும், முனிவர்கள், அடியவர்கள் மற்றும் பாலியல் தொடர்பான சிற்பங்களும் உள்ளன. ஸ்ரீவைகுண்டம் விஷ்ணு கோயில் கோபுரத்தில் இராமாயணம், கிருஷ்ணாவதாரம் தொடர்பான சிற்பங்கள் உள்ளன.
 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள வெளிக் கோபுரங்களில் ஆயிரக் கணக்கான சுதை உருவங்களைக் காணலாம். இவற்றில் சிவபுராணம், திருவிளையாடற் புராணம், இலிங்க புராணம், தேவி பாகவதம், தேவி மகாத்மியம் ஆகிய கதைத் தொடர்ச்சிகளைக் காண முடிகிறது. இச்சிற்பங்களில் அசுரர்களை வதம் செய்கின்ற காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையும் காட்சி மிக நேர்த்தியாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது. நன்மையும் - தீமையும்,     பகலும் - இரவும் போல, பாற்கடலில் தோன்றிய அமிர்தமும் ஆலகால விஷமும் தவிர்க்க இயலாதவை என்ற     கோட்பாட்டை இது உணர்த்துவதாக     அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கோபுரத்தில் முருகன் வரலாறு தொடர்பான சுதைச் சிற்பங்களும், ஆறு படை வீடுகள் தொடர்பான சிற்பங்களும் உள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பர நாதர் கோயிலின் விசயநகர் காலத்துக் கோபுரம் ஏராளமான சுதைச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. சிதம்பரம் நடராசர் கோயில் கோபுரங்களில் சிவபுராணச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.     
 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சிற்பம்
 

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
 

3.2.4 கோயிலின் பிற இடங்களில் சுதைச் சிற்பங்கள்
 

தமிழ்நாட்டுச்     சிவன்     கோயில்கள் பலவற்றிலும் கருவறைக்கு முன்னால் சுதையாலான நந்திகள் வைக்கப் பட்டுள்ளன. அவற்றில் மிகப் பெரிய ஒன்று இராமேசுவரம் இராமநாத சுவாமி கோயிலில் உள்ளதாகும். ஒரு பக்கம் பார்த்தால் நந்தி போன்றும், மற்றொரு பக்கம் பார்த்தால் ஆஞ்சநேயர் போலவும் தோன்றும் இவ்வுருவம் சுதையால் செய்யப் பட்டு வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதன் நீளம் பன்னிரண்டு     அடி,     அகலம் ஒன்பதடி     ஆகும். இராமேசுவரத்தின் தல புராணக் கதை சிற்ப வடிவத்தில் தனி ஒரு சன்னதியாக அமைக்கப் பட்டுள்ளது. அது இராமலிங்கப் பிரதிட்டை சன்னதி என்று அழைக்கப் படுகிறது. அதில் உள்ள இராமர், சீதை, சிவலிங்கம், தேவர்கள் ஆகிய அனைவரது உருவங்களும்     சுதையால் செய்யப்பட்டு வண்ணம் பூசப் பட்டவையாகும். திருவிடை மருதூரில் மகாலிங்கேசுவரர்     ஆலயத்தின்    உட்புறத்தில் புராண நிகழ்ச்சிகள்     சில,     சுதைச்     சிற்ப வடிவங்களில் அமைந்துள்ளன. மதுரையில்     மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்து மண்டபங்கள் பலவற்றிலும், சிறப்பான வகையில் கலைத்திறன்     மிக்க     சுதை     வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.     இவை     நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட சிற்பங்களாகும்.