4.1 ஓவியம்
 

ஓவியம் என்ற சொல்லின் பழமையான வடிவம் ஓவம் என்பதாகும். சங்க கால இலக்கியத்தில் இச்சொல்லே ஓவியத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. பின்னர், காப்பியக் காலத்தில் சித்திரம் என்ற சொல்லும் ஓவியத்திற்கு மாற்றாக இருந்துள்ளது. `ஓவம்' என்ற சொல் `ஒவ்வு' என்ற வினைச் சொல்லில் இருந்து தோன்றியதாகும். இதற்கு ஒன்றைப் பற்றியிருப்பது என்றும், ஒன்றைப் போல இருப்பது என்றும் பொருள். சித்திரம் என்ற சொல்லுக்குக் கண்ணால் கண்ட ஒன்றை விளக்குவது அல்லது சித்திரிப்பது என்று பொருளாகுமாம். படாம் என்பது திரைச் சீலையில் தனியே வரையப் பட்ட ஓவியமாகும். இதுவே படம் என்று மாறி வழங்குகிறது.
 

4.1.1 ஓவியத்தின் வகை
 

`எது ஒன்றன் மாற்றுருவாக விளங்குகின்றதோ அதுவே ஓவியமாகும்'. என்று பழங்காலத்தில் கருதினார்கள். கலைஞன் ஒருவன் தான் கண்ட ஒரு பொருளையோ அல்லது காட்சியையோ தான் கண்டவாறு அப்படியே எழுதிக்காட்டுவது காட்சி ஓவியமாகும் இதனை வடநூலார் திருஷ்டம் என்றனர். இதற்கு மாறாகத் தான் கற்பனையில் படைத்த காட்சி ஒன்றை எழுதிக் காட்டுவது கற்பனை ஓவியம் அல்லது அதிருஷ்டம் என்று கூறினர். இதனை, முறையே வியத்தம் என்றும் அவ்வியத்தம் என்றும் கூறினர்.
 

4.1.2 ஓவியத்தின் தோற்றம்
 

உலகில் கண்ணால் கண்ட ஒரு காட்சியைத் தனது மனத்தில் பதிய வைத்துக் கொண்டு அதனைப் பிறர் மனத்தில் பதியும் வகையில் எழுதிக் காட்டும் முயற்சியே ஓவியக் கலையின் தோற்றமாக அமைந்தது. இந்திய நாட்டிலுள்ள தொன்மையான பாறை ஓவியங்கள் இதனையே காட்டுகின்றன. ஓவியத்தின் தொடக்க வரலாறாக அமையும் பாறை ஓவியங்களில் மனிதனின் வேட்டைக் காட்சிகளே அதிகமாக இடம் பெற்றன. காலப் போக்கில் அவை வெறும் காட்சிகளுக்காக மட்டும் இல்லாமல் உள்நோக்கம் கருதியும் வரையப் பட்டன. வரலாற்றிற்கு முற்பட்ட காலத்துப் பாறை ஓவியங்களைத் தொடர்ந்து, வரலாற்றுக் காலத்தில் இந்திய நாட்டில் ஓவியக் கலை மிக உன்னத நிலையை அடைந்தது. வரலாற்றுக் காலத்தில் அஜந்தா, பாக், எல்லோரா, சித்தன்ன வாசல், காஞ்சிபுரம், தஞ்சை, ஆர்மாமலை போன்ற பல்வேறு இடங்களில் காணும் ஓவியங்கள் இந்தியக் கலைஞர்களின் திறமையைப் பறை சாற்றுகின்றன.