4.6 ஓவியத் தொழில் நுட்பம்
 

பண்டைய ஓவியங்களை, அவற்றை வரைவதற்குப் பின்பற்றப் படும் தொழில் நுட்பம் கருதி மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்.
 

(1). சுவரோவியம் - அடித்தளம் ஈரமாக இருக்கும் போது வரைவது
 

(2). சுவரோவியம் - அடித்தளம் உலர்ந்தபின் வரைவது
 

(3). பற்றோவியம்
 

பாறைகளில் அமைந்த சுவர்களின் மீதும், செங்கல்லால் கட்டப் பட்ட சுவர்களின் மீதும், களிமண், சுண்ணாம்புக் கலவையால் அடித்தளத்தை ஏற்படுத்தி அவ்வடித்தளம் ஈரமாக இருக்கும் போதே அவற்றின் மீது வரையப் படும் ஓவியத் தொழில் நுட்பத்தினை ஈரப்பத அடித்தளமுள்ள சுவரோவிய முறை என்று அழைக்கின்றனர். அடித்தளம் உலர்ந்தபின் வரையப்படும் ஓவியத்திற்கு ஈரப்பதமற்ற அடித்தளம் கொண்ட சுவரோவியம் என்று பெயர்.
 

உலர்ந்த அடித்தளத்தின் மீது பசை கலந்த வண்ணக் கலவை கொண்டு ஓவியம் தீட்டும் தொழில் நுட்பத்தினைப் பற்றோவிய முறை அல்லது கெட்டிச்சாய வண்ண ஓவிய முறை என்று அழைக்கின்றனர்.
 

4.6.1 பழங்காலத் தொழில் நுட்பங்கள்
 

அஜந்தா, பாக் போன்ற இடங்களில் காணும் ஓவியங்களையும் காஞ்சிபுரம், சித்தன்ன வாசல், தஞ்சாவூர் போன்ற இடங்களில் காணும் தமிழ் நாட்டு ஓவியங்களையும் ஆய்வு செய்த தொல்லியல் வேதியலறிஞர் எஸ்.பரமசிவன் என்பவர், இவற்றில் முன்னதை முதலாம் வகைத் தொழில் நுட்ப ஓவியம் என்றும், பின்னதை இரண்டாம் வகைத் தொழில் நுட்ப ஓவியம் என்றும் பெயரிட்டு, அவற்றின் தொழில் நுட்பங்களைப் பின்வருமாறு விரித்துக் கூறுகின்றார்:
 

அஜந்தா
 

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
 

இவ்விரண்டு ஓவியங்களிலும் வேறுபட்ட நுட்பங்கள் பின்பற்றப் பட்டு ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. அஜந்தா, எல்லோரா, பாக் போன்ற இடங்களில் உள்ள ஓவியங்கள் `டெம்பரா' என்றழைக்கப் படும் பற்றோவிய முறையினைப் பின்பற்றி வரையப் பட்டவை. மாட்டுச் சாணம், உமி, தாவர நார் ஆகியவை பற்றுப் பொருளாகக் கலந்த களி மண்ணைப் பாறைச் சுவர் மீது பூசி அதன் மீது மெல்லிய சுண்ணாம்புப் பூச்சினை அடித்து முதல் வகை ஓவியங்களின் அடித்தளம் உருவாக்கப் பட்டிருக்கிறது. தாதுப் பொருட்களால் தயாரிக்கப் பட்ட வண்ணத்தைக் கொண்டு இவற்றில் ஓவியம் தீட்டியுள்ளனர்.
 

4.6.2 தமிழ்நாட்டுத் தொழில் நுட்பங்கள்
 

இரண்டாம் வகையான தமிழ்நாட்டுச் சித்தன்ன வாசல், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ஓவியங்கள் அடித்தளம் நன்கு உலர்ந்த பின் வரையப் பட்ட சுவரோவிய முறையைப் பின்பற்றி வரையப் பட்டவை ஆகும். இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகச் சித்தன்ன வாசல் குடை வரைக் கோயில் சமண ஓவியங்கள் திகழ்கின்றன. அஜந்தாவில் காணப்படும் வலிவும் ஒட்டுத் தன்மையும் குறைந்த அடித்தளத்திற்கு. மாறாக, வலிவும் ஒட்டுத் தன்மையும் மிக்க அடித்தளத்தினைச் சித்தன்ன வாசல் ஓவியம் கொண்டிருக்கிறது. சித்தன்ன வாசல் ஓவியங்களின் அடித்தளம் அஜந்தாவிலுள்ள களிமண், சுண்ணாம்புப் பூச்சுக்கொண்ட அடித்தளத்திற்கு மாறாக நன்கு தயாரிக்கப் பட்ட முழுவதும் சுண்ணாம்பால்     ஆன     உறுதியான அடித்தளமாக விளங்குகிறது. சித்தன்ன வாசலில் சுண்ணாம்பு நீரையே மீண்டும் அடித்தளத்தின் மீது பூசி அதனை உறுதியாக்கியுள்ளனர்.     
 

தஞ்சாவூர் ஓவியங்கள்

 

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
 

சித்தன்ன வாசல் ஓவியங்கள்
 

சித்தன்ன வாசல் ஓவியங்கள் மூன்று அடுக்குகளைக் கொண்டவையாகத் திகழ்கின்றன. இவற்றில் கீழே உள்ள அடுக்கு சொரசொரப்பான சுண்ணாம்புக் கலவைப் பூச்சாலானது. அதன் மீதுள்ள இரண்டாவது அடுக்கு. நன்கு அரைத்து உருவாக்கப் பட்ட மென்மையான சுண்ணாம்புக் கலவைப் பூச்சாலானது. அதன் மீது மூன்றாவது அடுக்காக வண்ண ஓவியங்கள் உள்ளன. இவ்வடுக்குகள் முறையே 2.5 மி.மீ. / 0.5 மி.மீ / 0.4 மி.மீ கனம் உள்ளவையாகக்     காணப்படுகின்றன.     இதற்கு மாறாக அஜந்தாவிலுள்ள ஓவியங்களின் அடித்தளம் 15 மி.மீ வரை கன அளவு கொண்டதாய் உள்ளது. அஜந்தாவிலுள்ள ஓவியங்கள் தலை சிறந்தவையாக விளங்கினாலும் அவற்றின் தொழில் நுட்பம் சித்தன்ன வாசல் ஓவியங்களோடு ஒப்பிடும்போது தரம் குறைந்ததாகவே உள்ளது.

சித்தன்ன வாசல் ஓவியங்களில் வெள்ளை, கறுப்பு, மஞ்சள், சிவப்பு, பச்சை முதலிய வண்ணங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவை இயற்கையில் கிடைக்கும் கனிமப் பொருட்களில் இருந்து செய்யப் பட்டவை ஆகும்.

 

சித்தன்ன வாசல் ஓவியங்கள்

 

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
 

வெண்சுதை ஓவியங்கள்
 

காஞ்சிபுரம், சித்தன்ன வாசல் ஓவியங்களைப் பின்பற்றியே தஞ்சாவூரிலுள்ள பிரகதீஸ்வரர் கோவில் சோழர் கால ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. இவை தொழில் நுட்பத்தில் தலை சிறந்தனவாக விளங்குகின்றன. வெண்சுதையில் ஓவியம் தீட்டும் முறை     மிகப்     பழங்காலத்திலிருந்தே     தமிழ்நாட்டில் இருந்துள்ளதைச் சங்க இலக்கியமும், மணிமேகலை போன்ற காவியங்களும்     உணர்த்துகின்றன.     மணிமேகலையில் வெண்சுதையில் தீட்டப்பட்ட     ஓவியங்களை     மக்கள் கண்டு களித்ததாக வருகிறது.

 

சோழர் கால ஓவியங்கள்
 

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக