|
1.0
பாட முன்னுரை
கானப்
பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்
நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் - பாரதியார்
|
மகாகவிசுப்பிரமணிய பாரதியார் இயற்கை அனைத்தும் முழங்கும்
இன்னிசையைக் கேட்டு இன்புறுகிறார். காட்டில் வாழும் பறவைகளின் கலகலென இசைக்கும்
ஓசையிலும், மரங்களிடையே செல்லும் காற்றால் ஏற்படும் ஓசையிலும், ஆற்று நீரோசையிலும்,
அருவியின் ஒலியினிலும், கடலலையின் ஓசையிலும் எழும் இசை நுட்பங்களை நுகர்ந்தார்,
நாட்டினிலும், காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப்
பறிகொடுத்தார். தான் கேட்டு அனுபவித்த இசைகளை யெல்லாம் அனுபவிக்க நம்மையும்
அழைக்கிறார். இயற்கைத் தாய் தரும்இனிய இசையை அனுபவிக்க அனைவரையும் அழைக்கிறார்.
இசைமக்கள்
உள்ளத்தை இசைவிக்கும் ஒரு கருவியாகும்.
இறைவழிபாட்டிற்கு உகந்த நெறியாகும். மனித மனத்தைப்
பண்படுத்தும் பண்பாட்டுச் சாலையாகும். இது மிடற்றிசையாகவும்
(குரலிசை) கருவியிசையாகவும் அமையும்.
|