1.3
தாளஅமைதி
தாளம் என்பது இசைப்பாட்டின் நடையை நிலை நிறுத்தும்
அமைதியாகும். பாவோடு இசைதல் இசை என்று கூறுவது போல் பாட்டின் நடையை வரையறுப்பதனைத்
தாளம் என்பர்.இசையின்
தாய் தந்தையாகப் பண்ணும் தாளமும் அமைகின்றன.
உடலில் காணப்படும் எலும்புச் சட்டகம் போல்
இசையில்
தாளம் அமையும்.
தாள் + அம் = தாளம். தாளாகிய
பாதத்தை அம்மி
(தட்டி)ப் போடப்படுவதால் தாளம் என்ற பெயரினைப் பெற்றது.
இது பாட்டின் நடை அமைதியாகும். இதனைப்
பாணி
என்றும் அழைப்பர். கையில் கொட்டி இடும் பொழுது பாணி
என்ற பெயரினைப் பெற்றது. பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள்
சப்பாணிப் பருவம் என்ற ஒன்றுளது. இது கைகளைக்
கொட்டுவதால் வந்த பெயராகும். இதனைத் தூக்கு என்றும்
அழைப்பர். பாட்டின் நடையை அளந்தறியும் செய்கையானதால்
இதனைத் தூக்கு என்றும் அழைப்பர். இதனைச் சீர் என்றும்
அழைப்பர். பாவின் நடையைச் சீர்மைப் (ஒழுங்கு) படுத்தலால்
இது சீர் என்று அழைக்கப்படுகிறது.இதனைக் கட்டளை என்றும்
அழைப்பர். கட்டளை என்பது எழுத்தெண்ணி நடை அமைத்து,
வரையறுக்கும் ஒருவகை இசை யமைதியாகும். தேவாரப்
பாடல்கள் இவ்வகைக் கட்டளை அமைதிகளோடு
விளங்குகின்றன. எழுத்தெண்ணிப் பாடப்படும் ஒருவகைப்
பாவினைத்தைக் கட்டளைக் கலித்துறை என்பர்.
எனவே பாவின் நடையோட்டத்தை
வரையறுக்கும்
இசையமைதியைத் தாளம், பாணி, தூக்கு, சீர், கட்டளை என்று
அழைப்பர். இருப்பினும் தாளம் என்ற சொல் வழக்காறே
பெருவாரியாக வழங்கப் படுகிறது
.
1.3.1 தூக்கு
சங்க இலக்கியங்களுள் ஒன்றான பதிற்றுப்பத்தில் தூக்குப்
பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
இரண்டாம் பத்தில்
உள்ள பத்துப்பாடல்களில்
செந்தூக்கும். வஞ்சித்தூக்கும் இடம் பெற்றுள்ளன. ஏனைய
பத்துக்களிலும் இத்தூக்குகள் இடம் பெற்றுள்ளன.
தூக்கு ஏழுவகைப்படும்.
1) செந்தூக்கு
2) மதலைத் தூக்கு
3) துணிபுத் தூக்கு
4) கோயில் தூக்கு
5) நிவப்புத் தூக்கு
6) கழால் தூக்கு
7) நெடுந்தூக்கு
1.3.2 தாள உறுப்புகள்
தாளத்தின் உறுப்புகள் மூன்று
1) அனுதிருதம் - இதனைத் தட்டுதல் என்பர்.இதன் அடையாளம்
பிறை
2) திருதம் - இதில் ஒரு தட்டும் அதனைத் தொடர்ந்து வீசுதலும் இடம்
பெறும். இதன் அடையாளம் சுழி
3) லகு - இதில் ஒரு தட்டும் அதனைத் தொடர்ந்து விரலால்
எண்ணுதலும் அடங்கும்
என்பர். இதன்
அடையாளம் கணை
இவ்வகையில் ஒரு தட்டும் இரண்டு விரல் எண்ணிக்கையும்
கொண்டதனை மூன்றெண் (திஸ்ரம்) என்பர்.
ஒரு தட்டும் மூன்று விரல் எண்ணிக்கையும் கொண்டதனை
நான்கெண் (சதுஸ்ரம்) என்பர்.
ஒரு தட்டும் நான்கு விரல் எண்ணிக்கையும் கொண்டதனை
ஐந்தெண் (கண்டம்) என்பர்.
ஒரு தட்டும் ஆறு விரல் எண்ணிக்கையும் கொண்டதனை
ஏழெண் (மிஸ்ரம்) என்பர்.
ஒரு தட்டும் எட்டு விரண் எண்ணிக்கையும் கொண்டதனை
ஒன்பதெண் (சங்கீரணம்) என்பர்.
இந்த ஐந்தின் அடிப்படையில் ஏழுவகைத் தாளங்களோடு
இயைய, தாளங்கள் 35 என்பர்.
தாளம்
பத்து உயிர் நிலைகளைக் கொண்டு விளங்கும்.
வி.வி. நரசிம்மமாச்சாருலுகாரு என்பவர் தாள லட்சணம் என்ற
நூலில் இதனை விளக்கியுள்ளார்.
1) காலம்,
2) வழி,
3) செய்கை,
4) உறுப்பு
5) இடம்,
6) இனம்,
7) மாத்திரை,
8) இடைவெளி,
9) அமைப்பு,
10) விரிவு
என இப்பத்து உயிர் நிலைகள் பற்றி
இசை இலக்கண நூற்கள் குறிப்பிடுகின்றன.இவைகளை வடநூலார்
தாள தசப் பிராணன் என்பர்.
1.3.3 தாளவேந்தரும் தாளச் செல்வரும்
தேவார முதலிகளுள் ஒருவரான திருஞானசம்பந்தர்
சீர்காழியில் தோடுடைய செவியன் என்று தொடரும் பதிகம்
பாடினார். தன் தந்தையாரின் தோளில் அமர்ந்த நிலையில்
திருத்தல யாத்திரை மேற்கொண்டார். முதலில் தன் தாய் பிறந்த
ஊரான திருநனி பள்ளிக்குச் சென்று இறைவனைப் பாடினார்.
பிறகு திருக்கோலக்கா சென்றார். அங்குள்ள இறைவனை
மடையில்
வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையும் சாம்பற் பூச்சும்கீள்
உடையும் கொண்ட உருவம் என்கொலோ.
|
என்ற பண்ணமைந்த பாடலைப் பாடினார்.இப்பதிகத்தைப்
பாடும் பொழுது தன் கைகளால் தாள மிட்டுக்
கொண்டு
பாடினார்.ஒரு கையோடு ஒரு கையை ஒத்தித் தாளம் போட்டுப்
பாடினார்.பிஞ்சுக் கைகள் நோவதனைக் கண்ட கோலக்கா
இறைவன் பொன்னாலாகிய தாளம் வழங்கினார். இதனால்
இவ்விறைவன் திருத்தாளமுடையார் என்று அழைக்கப்படுகிறார்.
இத்தாளத்திற்கு இனிமையான ஓசையை இறைவி கொடுத்தார்.
இதனால் இவர் ஓசை கொடுத்த
நாயகி என்று
அழைக்கப்படுகிறார். இதனைச் சுந்தரர்
நாளும்
இன்னிசையால் தமிழ் பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன்
தாளம் ஈந்து அவன் பாடலுக் கிரங்கும்
தன்மை யாளன்
|
என்கிறார்.
தாளச் செல்வராக அருணகிரியார் விளங்குகிறார்.
இவர்
படைத்த திருப்புகழ்ப் பாடல்கள் தாள இலக்கியமாகவே
திகழ்கின்றன. திருஞானசம்பந்தரைப் போல் தாமும் பாட
வேண்டும் என அருணகிரியார் குறிப்பிடுகிறார்.
புகலியில்
வித்தகர் போல் அமிர்தக் கவித்தொடைபாட
அடிமை தனக்கருள் வாயே
|
என்று
இறைவனிடம் வேண்டுகிறார். அருணகிரியாரும்
ஞானசம்பந்தரைப் போல் தலயாத்திரை மேற்கொண்டார்.
முருகன் உறையும் தலங்கள் தோறும் சென்று
பாடினார்.
இப்பாடல்கள் அனைத்தும் வண்ணப் பாக்களாக
அமைந்துள்ளன.
திருஞான சம்பந்தர் பொற்றாளத்தைக் கையில்
ஏந்திப்
பாடியமைபோல் அருணகிரிநாதர் கிண்கிணி என்ற தாளத்தைக்
கையில் ஏந்திப் பாடியிருக்கலாம் என்று எண்ண இடமுளது.
இது ஆடற்கலையில் நட்டுவனார் ‘ஜதி’ அமைக்கப் பயன்படும்
தாளமாக அமையும். அருணகிரிநாதர் இத்தாள ஒலியைப் பல
இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
திந்திதிமி
தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடு - நடமாடும்
- (முந்துதமிழ் மாலை என்று தொடங்கும் பாடல்)
|
திருஞானசம்பந்தர்
வியாழக் குறிஞ்சிப் பண்ணில் பாடிய
திருப்பிரமபுரம் பதிகம் ஒன்று திருத்தாளச் சதி என்று பெயர்
பெற்றுள்ளது.
சதி (ஜதி)என்பது ஆடலுக்குரிய சொற்கட்டைக் குறிக்கும்.
ஆடலுக்குரிய தாள அமைதியுடன் பாடப்பட்ட பாடலாதலால்
இது திருத்தாளச் சதி என்று பெயர் பெற்றுள்ளது.
பந்தத்தால்
வந்தெப்பால் பயின்றுநின்ற வும்பரப்
பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களும்
|
என்று தொடரும் இத்திருத்
தாளச் சதிப் பாடலில்
1 2
3
தந்தத்தா தந்தத்தா தனந்தனந்த தந்ததை
தானா தானா தானானா தனதன தனனா தனா
4 5
6 7 |
பாடலில்
ஒரு வரி மட்டுமே ஈண்டு விளக்கப்படுகிறது.
முதல்வரி எந்த அமைப்பில் உள்ளதோ அதே அமைப்பு
ஏனைய மூன்று வரிகளிலும் வரும். இதே அமைப்பு அந்தப்
பதிகத்தின் ஏனைய பாடல்களிலும் அமையும். இத்தொடரில்
ஏழுவகையான தாளச் சொற் கட்டுகள் அமைந்துள்ளன.
1) தந்தத்தா
2) தனந்தனந்த
3) தந்தனத்
4) தானா
5) தானானா
6) தனதன
7) தனனாதனா
இவை ஏழும் வேறுபட்ட கால அளவுடைய சொற்களாகும்.
இதனைச் சீர்த்தாளவகை என்பர்.
திருப்புகழ் பாடல்கள் மூன்று
கண்டிகைகளாகப்
பெரும்பாலும் அமையும். முதலில் அமைத்துக் கொண்ட சந்த
அமைப்பே மூன்று முறை மடக்கி வந்து, பின்னர் தொங்கலோடு
முடியும்.
கைத்தல
நிறைகனி
அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் - அடிபேணி
|
என்று தொடங்கும் திருப்புகழ்ப் பாடலில் கண்டி,
சந்தம்,
தாளஅமைதியைப் பின்கண்டவாறு காணலாம்.
கண்டிகை |
- |
கைத்தல நிறைகனி |
சந்தம் |
- |
தத்தன தனதன |
தானம் |
- |
தக்கிட தகதிமி |
இது போல ஏனைய இரு கண்டிகைகளும்
அமைய,
தொங்கல் பின்வருமாறு அமையும்.
தொங்கல் |
- |
அடிபேணி |
சந்தம் |
- |
தனதானா |
தானம் |
- |
தக ; தாத்தோம் |
எனவே மூன்று கண்டிகைகள் ஒரு நிலையிலும் தொங்கல்
வேறு ஒரு நிலையிலும் அமையும்.
திருப்புகழ்ப் பாடல்களில் தாளக்கணக்கீட்டை
மும்மை,
நான்மை, ஐம்மை, ஏழுமை,ஒன்பதின்மை என்ற தாள வகையிலும்,
சீர்கள் அமைந்துள்ள நிலையில் சீர் வகைத் தாளங்களாகவும்
கணக்கிடுவர்.
|