|
1.4 இசைக்
கருவிகள்
இசை மிடற்றிசை, கருவியிசை
என இருவகைப்படும்.
குரலால் பாடப்படுவது மிடற்றிசையாகும்.
கருவிகளால்
இசைக்கப்படுவது கருவி
இசையாகும். இசையை
இசைப்பதற்கும், இசைக்கு மேலும் செறிவூட்டவும்
இக்
கருவிகள் பயன்படுகின்றன. இசைக்கு
மேலும்
செறிவூட்டும் வகையில் அமையும் பொழுது
இவற்றைத்
துணைக்கருவிகள் என்பர். இசையில் பல புதிய பாணிகள்
தோன்றுவதற்கு இசைக் கருவிகளே துணை புரிந்துள்ளன.
ஐந்நூற்றிற்கும் மலோக இசைக் கருவிகள் இந்தியாவில் உள்ளன.
இவற்றில் சுமார் இரு நூற்றைம்பது இசைக்
கருவிகள்
தமிழகத்தில் உள்ளன. இத்தகைய இசைக்கருவிகளை இசைக்கும்,
தரத்திற்கும் ஏற்ப வகைப்படுதியுள்ளனர்.இவற்றைத் தோற்கருவி,
துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி
என்று
வகைப்படுத்துவர்.
1.4.1 தோற்கருவி
இசையின் உயிராகத் தோற்கருவிகள்
விளங்குகின்றன.
தோலால் போர்த்தப்பட்ட கருவிகள் தோற்கருவிகள் என்று
அழைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் செய்தி அறிவிக்கத்
தோற்கருவிகளே பயன்படுத்தப்பட்டன. போர்ப்பறைகளாகவும்,
இறைவழி பாட்டுக்கருவியாகவும், அரசாணைகளைத்
தெரிவிக்கவும், இசை நிகழ்ச்சிகளுக்கும்
இக்கருவிகள்
பயன்படுத்தப் பட்டுள்ளன.
உடுக்கை, உறுமி, கஞ்சிரா,
கடம், கிணை, தண்ணுமை,
தவில், பம்பை, பறை, மிருதங்கம்,
முரசு போன்ற
தோற்கருவிகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.
இவை
கருங்காலி, செங்காலி, வேம்பு, பலா, உலோகம்,
மண்
போன்றவற்றால் செய்யப் படுகின்றன. ஆவின்
தோல்,
ஆட்டுத்தோல், காளையின் தோல்
போன்றவற்றால்
போர்த்தப்படுகின்றன. தோல்களை இறுக வளைத்துக்கட்ட
தோல் வார்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
பறை
மிகத் தொன்மையான தோற்கருவியாகும்.
தொல்காப்பியர் குறிப்பிடும் திணைக்குரிய கருப்பொருள்களில்
பறையும் ஒன்றாகும். இப்பறை ஏனைய தோற்கருவிகளைப்
போல் தோலால் போர்த்தப்பட்ட
கருவியாகும்.வாரால் விசித்து
இறுகக்கட்டப்பட்டதாகும் .இது ஒரு முக முடையது. இரட்டை முகங்களுடனும்
இருந்துள்ளது. குறுந்தடி கொண்டு பறையடித்து
ஒலி எழுப்புவர். பறை போர்ப்பறை,
வெருப்பறை,
வெறியாட்டுப்பறை, பேரோசைப் பறை, தட்டைப்பறை
என்று வழங்குவர். தொல்காப்பியர் திணை அடிப்படையில்
குறிஞ்சிப் பறை, முல்லைப் பறை, மருதப்
பறை, நெய்தற்
பறை, பாலைப் பறை என்று நிலத்தின் அடிப்படையில்
அழைக்கிறார்.
பகைவர் நாட்டைக் கைக் கொண்டபின் பறையறைந்து
செய்தி அறிவித்தலும்,வெற்றி பெற்ற பின் வெற்றிப்பறையிடுதலும்,
தோல்வியைப் பறையறைந்து தெரிவித்தலும் பண்டைய மரபாகும்.
வயலில் வேலை செய்யும்
உழவர்கள் ஊக்கம் பெற
மருதப்பறை ஒலிப்பர். நெல்லறுக்கும் பொழுது அரிப்பறை
முழங்குவர். ஆறலைக் கள்வர் வழிப்பறி செய்யும் பொழுது
பறை கொட்டுவர். மதம் பிடித்த யானையின்
வருகையை
அறிவிக்கப் பறை ஒலிப்பர்.
கழைக் கூத்தாடுபவர்
களத்தின் கண் பறை முழங்குவர். செய்தி அறிவிக்கப்
பறை
முழங்குவர்.
இவ்வாறு தொன்மை மிகு தோற்கருவியான
பறை இன்றும்
வழக்கில் உள்ளது. நாட்டுப்புற மக்களால்
போற்றப்பட்டு
வருகிறது .
1.4.2 துளைக் கருவி
துளைக் கருவிகள் தொன்மையான இசைக் கருவிகளாகும்.
இதனை இயற்கை தந்த இணையற்ற கருவி என்பர். வண்டு
துளைத்த மூங்கில் மரத்தின் வழியாகக் காற்றுச் செல்கையில்
எழுந்த இனிய ஓசையைக் கேட்டு, இதன் அடிப்படையில்
இவ்விசைக் கருவிகளை உருவாக்கினர். முல்லை நிலத்து
மக்கள் கண்ட கருவியாகக் குழல் உள்ளது.
குழல் கருவிகளாக நாதசுரம், புல்லாங்குழல்,கிளாரினெட்,
ஒத்து, ஆர்மோனியம், கொம்பு, முகவீணை போன்ற கருவிகள் உள்ளன.
குழலினிது
என்று திருக்குறள்
குறிப்பிடுகின்றது. மிகவும்
இனிமையான கருவி. இதில் ஒன்பது துளைகள் உள்ளன.
எல்லாத் துளைகளையும் திறந்தும் பிறகு ஒவ்வொன்றாக
முறையே விரல்களினால் மூடியும் வாசித்து வரும் பொழுது
ஏழு சுரங்களும் பிறக்கும். உருண்டை வடிவமான குழலின்
மேல் துளையிடுவர். குழலை வங்கியம் என்றும் அழைப்பர்.
குழல் கருவி மூங்கில், சந்தனம், வெண்கலம்,
செங்காலி, கருங்காலி ஆகியவற்றால் செய்யப்படுகிறது.மூங்கில் மரத்தால்
செய்யப்பட்ட குழலே அனைத்திலும் சிறந்த ஒன்றாகும்.
இளமையும் மூப்பும் இல்லாமல் நடுவயதில் வளர்ந்துள்ள
மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஓராண்டு வைத்த பிறகு
குழல் செய்வர்.
1.4.3 நரம்புக் கருவி
நரம்புக் கருவியைத் தந்தி வாத்தியம்
என்பர். யாழ்,
வீணை, தம்புரா, பிடில் போன்ற கருவிகள்
நரம்புக்
கருவிகளாகும். துளைக்கருவி ஆயர்குல மக்கள் தந்தது
போல் நரம்புக் கருவிகளை வேடுவர்கள் வழங்கினர்.
பி. சைதன்ய தேவா தாம் எழுதிய இசைக்
கருவிகள் என் ற நூலில் நரம்புக்
கருவிகளை மூன்று வகையாகக்
குறிப்பிடுகின்றார்.
1) சுருதி அல்லது தாள உபகரணமாகப் பயன்படுபவை.
- தம்புரா
2) ஒரு தந்தி ஒரு சுரம் மட்டும் இசைக்கப் பயன்படுபவை.
- யாழ்
3) ஒரே தந்தியில் பல சுரங்கள்
இசைக்கப்படுபவை
-
வீணை
பண்டைய காலத்தில் யாழ் என்ற இசைக்கருவி
மிகச்
சிறப்புடன் விளங்கியது. சங்க இலக்கியம்
இக் கருவி
பற்றியும், இக்கருவியிலிருந்து எழும் இசையினிமை பற்றியும்,
இக் கருவி இசைக்கும் இசைக் கலைஞர்கள் பற்றியும் நன்கு
எடுத்தியம்புகிறது. 21 நரம்புகளைக் கொண்ட பேரியாழ்,
17
நரம்புகளை உடைய மகரயாழ், 16 நரம்புகளை உடைய
சகோடயாழ், 7 நரம்புகளைக் கொண்ட செங்கோட்டு யாழ்
பற்றிய இலக்கியச் செய்திகளை அறியலாம்.இசை இலக்கணத்தை
நரம்பின் மறை என்று தொல்காப்பியமும்
குறிப்பிடுகின்றது.
இசைக்
கருவிகளின் அரசி என்று போற்றப்படும் வீணை
மிகச்சிறந்த நரம்புக் கருவியாகும். இன்றும் வழக்கில் உள்ளது.
தற்போது வழக்கத்தில் உள்ள வீணயைத் தஞ்சையை ஆண்ட
நாயக்க மன்னர் இரகுநாதநாயக்கர் (கி.பி.
17-ஆம் நூற்) உருவாக்கியது என்பர். இதனால் இரகுநாத வீணை என்றும்,
தஞ்சை வீணை என்றும் அழைக்கப்படுகிறது.
குடம், மேற்பலகை, தண்டு, சுரைக்காய்,பிரடைகள்,யாளி
முகம், மேளச் சட்டம், மெழுகுச் சட்டம், 24 மெட்டுக்கள்
போன்ற பாகங்களைக் கொண்டு விளங்கும். பலாமரத்தால்
செய்யப்படும்.
வலது கையின் ஆள் காட்டி
விரலும், நடுவிரலும்
கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின்
ஆள் காட்டி
விரலும் நடுவிரலும் இசைப்பதற்கும் பயன்படுத்தப்படும்.
தாள, சுருதித் தந்திகள் வலது கை
சுண்டு விரலால்
மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்காகச் சிலர் விரல்களில்
நெளி எனப்படும் சுற்றுக் கம்பிகளையும் இட்டுக் கொள்வர்.
இன்னிசை
வீணையர் யாழினர் ஒருபால்
(திருவாசகம், திருப்பள்ளி 4 : 1) என்ற
தொடரால்
வீணையும் யாழும் மாணிக்கவாசகர் காலத்தில் வழக்கில்
இருந்துள்ளதனை அறிய முடிகின்றது. காலப்போக்கில்
யாழை விட வீணை அதிகம் வரவேற்புப் பெற்ற கருவியாக
விளங்கியுள்ளது.
வீணை
தனம்மாள், வீணை காயத்திரி, வீணை
எசு.பாலசந்தர்,
வீணை சிட்டிபாபு போன்றோர் இத்துறை
மேம்பாட்டிற்காக உழைத்துள்ளனர்.
1.4.4 கஞ்சக்கருவி
உலோகத்தால் செய்யப்பட்ட கருவிகளைக்
கஞ்சக் கருவி
என்பர். கைத்தாளம், பிரும்மதாளம், எலத்தாளம், குழித்தாளம்,
சல்லரி போன்ற கருவிகளைக் கஞ்சக்கருவி என்பர்.
இவை வெண்கலம் என்னும் உலோகத்தால் செய்யப்படுகின்றன.மங்கல
இசைக்குழு, தேவார இசைக்குழு, ஆடலிசைக் குழுவில்
இன்றும் இவற்றைப் பார்க்கலாம். அரிகதை
செய்வோர்,
பசனைக்குழு போன்றோரிடமும் இத்தகு கருவிகளைக் காணலாம்.
ஓசை யமைதிக்கேற்பச் சிறிய, பெரிய, அகலமுள்ள தாளங்கள்
அமையும். இரு கைகளிலும் ஏந்தித் தட்டும் பொழுது ஓசை
அதிர்வு தடைபடாத வகையிலும் கையில் பிடித்துக் கொள்ளும்
வகையிலும் கயிறு கட்டப்பட்டு இருக்கும்.
மணிகளையும் தாளமாகக் கருதும்
நிலை உள்ளது.
கையினால் மணியை ஆட்டியும், குச்சியினால்
அடித்து
ஒலி எழுப்பும் நிலையிலும், கிராமப்புற மக்கள்
காய்ந்த
விதைகளை யுடைய காய்கள் மூலமும் தாள ஓசையை எழுப்புவர்.
ஆடலரங்கில் மலர் மொட்டுக்களைப் போன்றுசலங்கைகளைத் தொடுத்து
தோல்வாரில் அமைத்து ஆடலில் பயன்படுத்துவர்.
இதனை வட இந்தியாவில் குங்க்ரு என்றும் தென்னகத்தில்
கெச்சைஎன்றும் அழைப்பர். ஆலயங்களில், நாட்டுப்புற
நடனங்களில் இச்சலங்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. சலங்கை
என்றாலே நாட்டியத் தொழிலைக் குறிக்கும் அளவிற்கு முக்கிய
நிலை பெற்றுள்ளது.நாட்டிய அரங்கேற்றம் செய்யும் பொழுது
சலங்கை வழிபாடு செய்யும் மரபுள்ளது.
பீங்கான் கிண்ணங்களில் நீரை
நிரப்பி வெவ்வேறு
சுரஒலிகளை ஒலிக்கச் செய்து இசை
நிகழ்ச்சியைத்
தருகின்றனர். இதனை லதரங்கம் என்பர்.நீரின்
அலைகள்
என்ற பொருளில் சலதரங்கம் என்ற தொடர் பயன்
படுத்தப்படுகிறது. கிண்ணங்களை அரை
வட்டத்தில்
வரிசையாக வைத்து, இசைப்பவர் நடுவில் அமர்ந்து கொண்டு
ஒரு மூங்கில் குச்சியால் கிண்ணங்களின்
ஓரங்களைத் தட்டி ஓசை எழுப்பி இசை நிகழ்ச்சியை நிகழ்த்தி வருகின்றனர்.
|