|
2.4 ஆலய
வழிபாட்டும் தவிலும்
ஆலயம் சார்ந்த அருங்கலையாக நாகசுரம்
தவிற்
கலையாகிய மேளம் திகழ்கிறது. ஆலயங்களில் அன்றாட
வழிபாட்டிற்குரிய கலையாகவும், விழாக்காலங்களில்
முக்கியமானதோர் இடத்தை வகிக்கும் நிலையிலும் உள்ளது.
சிவாலயமாக இருந்தாலும் வைணவ ஆலயமாக இருந்தாலும்
கோவில் அர்ச்சகர், மேளக்காரர் குடும்பம் தவறாமல்
இடம்பெறும். இவர்களின் வாழ்க்கை ஆலய வழிபாடு, பணி
போன்றவற்றை மையமாகக் கொண்டே அமையும். அதனால்
இக்குடும்பத்தார் ஓர் ஊரில் பல குடும்பங்கள்
சேர்ந்து
தங்குவதற்கு வழியில்லை, ஆலயங்களை
மையமாகக்
கொண்டே இவர்களின் குடியேற்றம் அமைந்திருக்கும்.
ஆலயத்தையும் ஆலயத்தைச் சுற்றியுள்ள கிராமங்களையும்
மையமிட்டே இவர்களின் பொருளாதார நிலையும் வாழ்வியல்
நிலையும் அமையும். இவர்களில் மிகச்சிறந்த மேதைகளாக
விளங்குபவர் வெளியில் சென்று கச்சேரி செய்து பொருள்
ஈட்டுவர்.
ஆலயங்களில்
பெரும்பாலும், நாள்தோறும் ஐந்து கால
வழிபாடுகள் நடைபெறும். காலைச்சந்தி, உச்சிக்காலம்,
சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்த சாமம் என்று ஐந்து
கால வழிபாடுகள் நடைபெறும். இவ்வைந்து
கால
வழிபாடுகளின் பொழுதும், மேளக் குழுவினர் இசைப்பர்.
காலையில் திருப்பள்ளி எழுச்சி முதல் இரவில் பள்ளிக்கு
இறைவனை எழுந்தருள வைத்தல் வரை இவர்களின் பணி இருக்கும்.
இறைவன் பள்ளியிலிருந்து எழுந்தருளும் போது
பூபாள இராகம் அல்லது பௌளி இராகம்
இசைத்து
அதற்குரிய இசைகளை இசைப்பர்.
தேவாரப் பாடலில் திருஞான
சம்பந்தர் பாடிய
‘மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை’ என்ற பாடல் பூபாள
இராகத்தில் அமைந்த பாடலாகும்.
2.4.1 மல்லாரி
மங்கல இசைக் குழுவிற்காக உரிய இசை உருப்படியாக
மல்லாரி அமைந்துள்ளது.
இசைப் பரிமாணத்திற்குரிய
உருப்படியாக இது அமையும். இதனால் இலயக் கருவியான
தவிலின் பங்கு இதில் மிகுதி. இறைவன் வீதி
உலா
எழுந்தருளும் பொழுது கம்பீரநாட்டை இராகத்தில்
வீரச்
சுவை நிரம்பிய இசை உருப்படியான மல்லாரியை இசைப்பர்.
இது போல ஆலயச் செயற்பாட்டின் ஒவ்வொரு நிலையிலும்
அச்செயலுக்கேற்ற மல்லாரி இசைக்கப்படுவதுண்டு.
இறைவனின் நீராடலுக்கு நீர் கொண்டு
வருவதனைத் திருமஞ்சனம் என்பர். திருமஞ்சன நீர் கொண்டு
வரும்
பொழுது திருமஞ்சன மல்லாரி இசைக்கப்படும்.
இறைவனின் தளிகை உணவு தயாரிக்கும்
இடமான மடைப்பள்ளியிலிருந்து தளிகை கொண்டு
வரப்படும்.
அப்பொழுது தளிகை மல்லாரி இசைக்கப்படும்.
ஆலயத் திருவிழாக் காலங்களில் இறைவனைத்
தேரில்
எழுந்தருளச் செய்தல் உண்டு. இது பெரும்பாலும் ஆலயப்
பெருந்திருவிழாவான ஒன்பதாம் நாள் நடைபெறும்.
தொண்டர்கள் தேரின் வடம் பிடித்துத் தேரை இழுப்பர்.
இவர்களை உற்சாகப்படுத்தும் நிலையில் தேர் மல்லாரி இடம்
பெறும்.
ஆலயங்களில் இறைவன் வீதியுலா எழுந்தருளும் போது
சின்ன மல்லாரி இசைக்கப்படும். சிவாலயங்களில் இறைவன்
காளை (இடப) வாகனத்தில் - பஞ்ச மூர்த்திகளும்
-
எழுந்தருளும் பொழுது பெரிய மல்லாரி இசைக்கப்படும்.
இவ்விசை அமைதிகளைக் கொண்டு ஆலயத்தில் இன்ன
செயற்பாடு நடைபெறுகிறது என்பதனை உணர்த்தும்
அடையாள இசையாக மல்லாரி விளங்குகிறது. ஆலயப்
பெருந்திருவிழாவின் இறுதி நாளன்று பெரும்பாலும் மல்லாரி இசைப்பதில்லை.
மற்ற நாட்களில் இறைவன் வீதியுலா
முடிந்ததும் அலங்காரம் களைந்து பள்ளியறைக்குச்
செல்லும்பொழுது ஊஞ்சல் பாட்டு இசைப்பர்.இது முடிந்ததும்
கதவு தாளிடுவர். தாளிட்டதும் மல்லாரியைக் கொஞ்ச நேரம் இசைக்க வேண்டும்.
இம்மரபு முறைகள் குருகுலக் கல்வியின் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியரால்
அளிக்கப்படும்.
2.4.2 கோயில் மேளம், ஏற்பாடு மேளம்
ஒவ்வொரு ஆலயத்திலும் அந்த ஆலயத்திற்கென்று
நிர்ணயம் செய்யப்பட்ட மேளக் குழுவைக் கோயில் மேளம்
என்றும், உள்ளூர் மேளம் என்றும் கூறுவர். இவருக்குத்தான்
இக்கோயிலின் மரபுகள் அனைத்தும் தெரியும். நாள்வழிபாடு,
விழாக்காலங்களில் இவர்கள் இசை வழிபாடு செய்வர்.
இவர்களுக்கு மாத ஊதியமும் நாள்தோறும் தளிகை உணவும்
இசை நிகழ்ச்சியும், ஆலயங்களில் வாத்திய மண்டபமும்
என்றும் உண்டு. இம்மண்டபத்தில் அமர்ந்து இவர்கள் இசை நிகழ்ச்சிகளை
நடத்துவர். இவர்களின் இசைக்கருவிகளை வைப்பதற்கு
இடமும் மரப்பெட்டியும் இருக்கும்.
இப்பெட்டிக்குச் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்யப்படும்.
திருவிழாக் காலங்களில் வெளி
ஊரிலிருந்து மேளக்
குழுவை வரவழைத்துச் சிறப்பு இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு
செய்வர். இதனை வெளியூர் மேளம் அல்லது ஒற்றை மேளம்
என்பர். இவர்கள் உள்ளூரின் மேளக்காரரை சார்ந்தே
இருப்பர். ஆலயங்களில் கோபுர வாசல் வரை உள்ளூர்
மேளக்காரரே இசைப்பார்.
இவர் என்ன வகையான இராகம்
தாளங்களில் வாசித்து முடித்தாரோ அதற்கு ஏற்றபடி வெளியூர்
மேளக்காரர் தொடர்ந்து இசைக்க வேண்டும்.
நாகசுர
இசையில் சிவதத்துவம் ஓசையிலும்
சக்திதத்துவம் தாளத்திலும் அடங்கியுள்ளதாகக் கருதுவர்.
வாசி என்ற சொல்லின் எழுத்தை மாற்றி எழுதினால் சிவா
என்று வந்துவிடும். நாகசுரம் தாளம் ஆலய வழிபாட்டின்
கருவி்கள்
என்பதனை
நினைவுபடுத்தும் நிலையில்
இக்கருவிகளுக் குரிய துணி உறைகள், பட்டைகள் வரை
காவி நிறத்தில் தைக்கப்படும்.காலப் போக்கில் இவையும் மாறி வந்துள்ளன.
இறைவன் வீதி உலா முடிந்து கோயிலுக்குள்
வந்ததும் இறைவனை நிறுத்தி மேளக் குழுவினரும்
பண்ணிசைக் குழுவினரும் முறை சுற்றி வருவர். இதனைத்
தட்டிச் சுற்று என்பர். இது நடைபெறும் மண்டபத்திற்குத்
தட்டிச் சுற்று மண்டபம் என்பர்.
திருவீழிமிழலை,
திருவிடைமருதூர், திருவாவடுதுறையில் உள்ள ஆலயங்களில்
இதனைக் காணலாம்.
|