2.5 மங்கல இசை மன்னர்கள்

    புகழ்பெற்ற மங்கல இசை மன்னர்கள் பலர் இசைக்கலை உலகிற்குக் அளப்பரிய சேவைகள் செய்துள்ளனர். இந்தியக் கண்டமெங்கும், உலகெங்கும் சென்று நமது இசை மரபைப் பரப்பி வெற்றி பெற்றவராக வந்துள்ளனர். புரவலர் பெருமக்களால் இசைகள் கௌரவிக்கப்பட்டு வருகின்றன. உலகின் ஒருங்கிணைப்பு நிலையமான ஐ.நா. சபையில் இவ்விசை முழங்கியது. இந்தியத் திருநாட்டின் சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்ட பொழுது, நாகசுர மேதை திருவாடு துறை டி.என். இராசரத்தினம் மங்கல இசையோடு சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்டது. இவ்வகையில் தலை சிறந்த நாகசுரக் கலைஞர்கள் தவிற் கலைஞர்களாகிய மங்கல இசை மன்னர்களின் கலைச் சேவை பற்றி இப்பகுதியில் காண்போம்.

2.5.1 புகழ்பெற்ற நாகசுரக் கலைஞர்கள்

    நாகசுரக் கலைக்குச் சமுதாயத்தில் மிக உயரிய இடத்தைத் தந்தவராக திருவாடுதுறை இராசரத்தினம் (1848-47) விளங்கினார். தோடி என்ற இராகம் இசைப்பதில் வல்லவர். ஆதலால் தோடி     இராசரத்தினம் என்று போற்றப்பட்டார். இவரது மங்கல இசை முழக்கத்தோடு இந்தியச்     சுதந்திர பிரகடனம் 15.8.1947 அன்று ஒலிபரப்பப்பட்டது.

    சாவேரி கீழ்வேளூர் கந்தசாமி பிள்ளை (1826-1894) சாவேரி இராகம் இசைப்பதில் வல்லவர். கீழ்வேளூர் கேடிலியப்பர் ஆலய இசைக் கலைஞராக விளங்கினார்.

    கோட்டை சுப்பராயப் பிள்ளை (1843-1919) காம்போதி, தோடி இராகங்கள் இசைப்பதில் வல்லவர். இவர் சுமார் 300 வர்ண இசை உருப்படிகளை இசைப்பதில் கைதேர்ந்தவர் என்று போற்றப்பட்டார்.

    ஆடற்கலை ஆசானாகக் கலை உலகில்அறிமுகமாகி நாகசுரக் கலைஞராகத் திகழ்ந்தவர் கூறைநாடு நடேசபிள்ளை (1830-1905) ஆவார். கோட்டை சுப்பராயப் பிள்ளையிடம் நாகசுரப் பயிற்சிப் பெற்றார். இராக ஆலாபனை, கீர்த்தனை இசைப்பதில் வல்லவர். இவரின் ஆடற்கலை நாகசுரக் கலை மேம்பாட்டிற்குப் புதுப் பொலிவினைத் தந்தது. தான வர்ணங்கள் அமைப்பதிலும், இசைப்பதிலும் வல்லவர். தில்லை கோவிந்தராசர் ஆலயக் கோயில் மாலை எனும் நூலை உருவாக்கினார்.

    நாகசுர உலகில் சின்ன பக்கிரி என்று அழைக்கப் பட்டவர் மன்னார்குடி சின்னபக்கிரி ஆவார். நாகசுரச் சக்கரவர்த்தி இராசரத்தினம் பிள்ளைக்கு முன்னோடியாக விளங்கினார். இவர் கீர்த்தனை, இராக ஆலாபனை, பல்லவி போன்ற அனைத்து நிலைகளிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

    யானைத்தந்தத்தில் அமைந்த நாகசுரம் இசைக்கும் பரம்பரைக் காரராக, திருவாரூர் சாமிநாதப் பிள்ளை திகழ்ந்தார். இவர்களை நயினார்க் கடியார் பரம்பரையினர் என்று அழைப்பர்.

     திருவையாறு தியாகராசர் ஆராதனை விழாவினைச் சிறப்போடு நடத்திய திருவீழிமிழலை சுப்ரமணிய பிள்ளை, நடராச சுந்தரம்பிள்ளை ஆகியவர்கள் தியாகராசர் கீர்த்தனைகளையும் பிற கீர்த்தனைகளையும் இசைப்பதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர்.

    திருப்பாம்புரம் சிவசுப்ரமணியபிள்ளை, நடராச சுந்தரம் பிள்ளைச் சகோதரர்கள் இரண்டு பேர் நாகசுரம் சேர்ந்து இசைக்கும்     மரபினைத்     தோற்றுவித்தவர்களாக விளங்குகின்றனர்.

    ஆண்டிக் கோயில் கருப்பையா, வேதாரண்யம் வேத மூர்த்தி, குழித்தலை பிச்சப்பா பிள்ளை, நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன் போன்ற தலை சிறந்த மேதைகள் பலர் இக்கலையை வளர்த்த பெரியவர்களாகத் திகழ்கின்றனர்.

    தற்போது வளர்ந்து வரும் கலைஞர்கள் பலர் கலைச் சேவை பலவற்றைச் செய்து வருகின்றனர். ஆண்டார்கோயில் செல்வரத்தினம்     பிள்ளை,     மாநகர்     சகோதரர்கள், திருப்புறம்பயம் சகோதரர்கள், மதுரை பொன்னுசாமி சகோதரர்கள் போன்றோரின் பணி பாராட்டுதலுக்குரியதாகும்.

2.5.2 புகழ்சால் தவிற் கலைஞர்கள்

    தவிலிசைக்குப் பெருமை கூட்டிய கலைஞர்கள் பலர் உள்ளனர். தவிலிசையால் அவர்களும், அவர்களால் தவிலிசையும் மேன்மை பெற்றதை அறிவோம். தவில் உலகில் தனிப்பெரும் இடத்தைப் பெற்றவராக அம்மாப்பேட்டை பக்கிரிப்பிள்ளை விளங்கினார். நாகசுர உலகில் “தவிலிசைக்கு ஒரு பக்கிரி” என்று சொல்லும் வகையில் வாழ்ந்தார். புகழ்பெற்ற நாகசுரக் கலைஞர்களோடு இவர் வாசித்துள்ளார்.

    தவிலிசை உலகில் முக்கிய இடம் பெற்றவர்களுள் அம்மா சத்திரம் கண்ணுசாமி பிள்ளை குறிப்பிடத் தக்கவர் ஆவார். 14 வயதிலேயே மிகச் சிறப்பாக விளங்கினார். தவிலை மிருதங்கம் போல் இசைப்பதிலும் இவர் வல்லவர்.

    நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தவில் உலகில் (1894-1949) தனக்கு மிக்காரும் ஒப்பாரும் இல்லை என்ற நிலையில் வாழ்ந்தவர். ஒரு காலக்கட்டத்தில் தவில்காரர் என்ற சொல் இவரையே குறித்தது. தனித்தவில் வாசிக்கும் முறையை இவரே அறிமுகப்படுத்தினார்.

    திருக்கடையூர் சின்னையா பிள்ளை (1900-1976) தாளக் கணக்கில் வல்லவர். இலயச் சிம்மம் என்று போற்றப்பட்ட சிதம்பரம் வைத்திய நாகசுரக்காரர் குழுவில் இருந்தவர் இவர். 1927-ல் தருமபுர ஆதீன கர்த்தரால் சிங்கமுகத் தவிற் சிலையும், இராமநாதபுர அரசரால் தங்கப் பதக்கமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

    தவில் கலைஞரான மலைக்கோட்டை பஞ்சாமிப்பிள்ளை (1905-1935) தவிற்கலையில் வல்லவராகத் திகழ்ந்ததோடு இசைக் கீர்த்தனைகள் இயற்றுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

    யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி (1933-1975) தவில் வானின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தார். இலயக் கணக்கிலே வேகமும் கொண்டவர். சங்கீர்ணம் என்ற தாள சாதியை மகேந்திர பல்லவன் கண்டு பிடித்தது போல, 11 அட்சரமுடைய மற்றொரு முறையை இவர் உருவாக்கினார்.

    சிறப்பாகத் தவில் வாசித்தலில் புகழ் பெற்றவர் பலர். ஆசிரியராக இருந்து     பலருக்கு     வாழ்வளித்தவராக திருவாழபுத்தூர் பசுபதிப் பிள்ளை (1879-1958) விளங்கினார். தஞ்சை மாவட்டத்தில் சிறப்புடன் விளங்கிய பலருக்கு இவரே குரு ஆவார்.

    வாழ்ந்து வரும் தவிற் கலைஞர் பலர் மிக உன்னதச் சிறப்புடன் இக்கலை மேம்பாட்டிற்காக உழைத்து வருகின்றனர். நாகசுரத்திற்குப் பக்க வாத்தியமாக விளங்கிய தவிற்கலையை முதன்மைக்     கலையாக்கிய பெருமைக்குரியவர்களாக அரித்துவார மங்கலம் பழனிவேலு, திருவாழபுத்தூர் கலியமூர்த்தி, தஞ்சை கோவிந்தராசன், வேதாரண்யம் பாலு, வலையப்பட்டி சுப்பிரமணியன் போன்றோர் விளங்குகின்றனர். பல்வேறு இசைக் கருவிகளை இசைப்பதோடு ஆடற்கலை வளர்ப்பதிலும் பலர் வெற்றி கண்டு வருகின்றனர்.