இசைத்தமிழ்
இலக்கணநூற்கள் காலந்தோறும் தோன்றி வந்துள்ளன. தொல்காப்பியர்
இசையொடு சிவணிய நரம்பின்
மறை என்று இசை இலக்கண நூலைக்
குறிப்பிடுகிறார்.
சிலப்பதிகார உரையாசிரியருள் ஒருவராகிய அடியார்க்கு நல்லார்
சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசையமைதிகளுக்கு விளக்கம்
தருகையில் இசை இலக்கண நூற்கள் பற்றியும், நூற்பகுதிகள்
பற்றியும் கூறியுள்ளார். அடியார்க்கு நல்லார் ஐந்து இசை
இலக்கண நூற்களை மேற்கோளாகத் தந்துள்ளார். அவை
(1) சிகண்டி முனிவர் இயற்றிய இசை நுணுக்கம்
(2) யாமளேந்திரர் இயற்றிய இந்திர
காளியம்
(3) அறிவனார் இயற்றிய பஞ்சமரபு
(4) ஆதிவாயிலார் இயற்றிய பரத சேனாபதியம்.
(5) மதிவாணர் என்னும் பாண்டியன் இயற்றிய
மதிவாணர் நாடகத் தமிழ் நூல்.
இவற்றுள் பஞ்சமரபும், பரதசேனாபதியமும்,
கூத்தநூலின்
ஒரு பகுதியும் கிடைத்துள்ளன.
அடியார்க்கு நல்லார் தன்
காலத்திற்கு முன்னரே
இறந்துபட்ட நூற்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தேவ இருடி
நாரதன் செய்த பஞ்ச பாரதீயம்,
தாளவகை யோத்து,
கடைச்சங்கப் புலவர்கள் இயற்றிய பெருங்குருகு, பெருநாரை
போன்றவை இறந்து பட்ட நூற்களாகும்.
இலக்கியங்கள் வாயிலாகவும்,
உரைவாயிலாகவும் இசை நூற்கள் பற்றிய குறிப்புகள் பெறப்படுகின்றன.
இவ்வகையில்
அகத்தியம், கூத்தநூல், தண்டுவம், பண்ணிசை, செயிற்றியம்,
சயந்தம், குணநூல் போன்றன பற்றியும் அறிய முடிகின்றன.
இப்பாடத்தில் இசை
இலக்கண நூற்கள் பற்றியும்,
சிறப்பாகப் பஞ்ச மரபு கூறும் இசை இலக்கணப் பகுதிகளையும், இசை இலக்கணம்
பற்றி உரைக்கும் இலக்கிய நூல்
பகுதிகளையும், குறிப்பாகச் சிலப்பதிகாரம்
தரும் இசை
இலக்கணப் பகுதிகளையும் காண்போம்.