3.1 இசை இலக்கண நூற்கள்

    இசை இலக்கண நூற்களை ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் காணலாம். அகத்தியம், இசை நுணுக்கம், இந்திரகாளியம், கூத்தநூல், பஞ்சமரபு, பரதசாத்திரம், சங்கீதரத்னாகரம், சுரமேள கலாநிதி, சங்கீத பாரிாதம், சதுர்தண்டிப் பிரகாசிகை, மகாபரத சூடாமணி போன்ற நூற்கள் உள்ளன. இசைத் தமிழிலும் பிறமொழிகளிலும் உள்ளது.

  • அகத்தியம்

    ஆதி இலக்கண நூலாக அகத்தியம் கருதப்படுகிறது. இந்நூலை அகத்தியர் எழுதினார் என்பர். இந்நூல் தற்போது வழக்கொழிந்து விட்டது. சிலப்பதிகார உரை ‘அகத்தியம் முதலான தொன்னூல்களும் இறந்தன’ என்று குறிப்பிடுகின்றது. இந்நூல் பன்னீராயிரம் நூற்பாக்களைக் கொண்டது என்பர். எழுத்து, சொல், பொருள், யாப்பு, சந்தம், வழக்கியல் போன்ற பகுதிகளைக் கொண்டது. இந்நூலின் சில நூற்பாக்களே கிடைத்துள்ளன.

  • இசை நுணுக்கம்

    இசைநுணுக்கம் என்ற இசை இலக்கண நூலைச் சிகண்டி முனிவர் படைத்தார். இந்நூல் சாரகுமரன் என்னும் அரச குமாரன் இசையறிவதற்காக இயற்றப்பட்டதாகக் கூறுவர். இது வெண்பாவால் அமைந்துள்ளது. இந்நூல் பற்றி அடியார்க்கு நல்லார் உரை வாயிலாகவும் இறையனார் களவியலுரை வாயிலாகவும் அறிய முடிகின்றது. இந்நூல் இன்று கிடைக்கவில்லை.

  • இந்திர காளியம்

    இந்திர காளியம் என்ற இசை இலக்கண நூலை யாமளேந்திரர் என்ற அறிஞர் இயற்றினார். இந்நூல் இன்று கிடைக்கவில்லை.

  • கூத்தநூல்

    கூத்துக்கலையின் நுட்பத்தை விளக்கும் நூலாகக் கூத்தநூல் உள்ளது. கூத்தனூரைச் சார்ந்த சாத்தனார் இந்நூலை இயற்றியுள்ளார். இந்நூல் ஒன்பது பகுதிகளைக் கொண்டது. இந்நூலின் முதலிரு பகுதிகளைச் ச.து.சு. யோகியார் பதிப்பித்துள்ளார்.

  • சங்கீதரத்னாகரம்

    சங்கீதரத்னாகரம் வடமொழியில் அமைந்துள்ளது. கி.பி. 14-ஆம் நூற்றாண்டில்     காஷ்மீரில்     வாழ்ந்த சாரங்கதேவரால் இயற்றப் பெற்றது. இவரை நிச்சங்க சாரங்கதேவர் என்பர். இசையில் எவ்வித ஐயப்பாடும் இல்லாதவர் என்ற பொருளால் நிச்சங்க சாரங்கதேவர் என்றனர். நிச்சங்கர் = ஐயமற்றவர். இவர்    தமிழ்நாட்டில் வழங்கிய தேவாரப் பண்கள் பற்றிக் கூறியுள்ளார். “தேவார வர்த்தினி,    தட்சிணாத்ய    கானா, திராவிட    பாஷா, தக்ஷணகுர்ஜரி” என்று குறிப்பிடுகிறார். தேவாரவர்த்தினி டக்கனி பாஷா என்று தேவாரப் பண்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.