3.4 சிலப்பதிகாரம்

    இலக்கியங்கள் வாயிலாக இசை இலக்கணச் செய்திகள் பல கிடைத்தன. முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம், பிற காப்பியங்கள், கல்லாடம் போன்ற நூல்கள் வாயிலாகச் செய்திகள் பலவற்றை அறியமுடிகின்றது.

    இசைத்தமிழ்க்     களஞ்சியமாகச்     சிலப்பதிகாரம் விளங்குகின்றது. இசை இலக்கணம் பற்றிய அரிய செய்திகள், இசைக்கருவிகள், பண்கள், இசைப்பாடல்கள் முதலியவற்றை விளக்கும் நூலாகத் திகழ்கிறது. இந்நூலுக்கு எழுந்த அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும் மேலும் பல தகவல்களைத் தருகின்றன.

  • இசைக் கலைஞர்களின் தகைமைகள் (தகுதிகள்)

    சிலப்பதிகார அரங்கேற்று காதை , இசை இலக்கணம் கூறும் பகுதியாக அமைந்துள்ளது. இதில் இசைக்கலைஞர்களின் தகைமைகள் கூறப்பட்டுள்ளன. இசைக் கலைஞர்களாகிய இசையாசிரியன், தண்ணுமை ஆசிரியன், குழலாசிரியன். யாழாசிரியன் ஆகியோரின் தகைமைகள் கூறப்பட்டுள்ளன.

3.4.1 இசையாசிரியன் தகைமை

    இசையாசிரியன் தகைமையைக் குறித்துக் கூறுகிறார் நூலாசிரியர்.

1) யாழிசை, குழலிசைக்குரிய தாளக்     கூறுபாடுகளை அறிந்திருக்க வேண்டும்.

2) மிடற்றுப் பாடலும், அதனுடன் தண்ணுமை அமைதி பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

3) கூத்து நிலைகளை அறிந்தவராகவும், உருக்களுக்கு (பாடல்களுக்கு) இசையமைக்கும் திறனுடையவராகவும் இருத்தல் வேண்டும்.

4) இரதம் (ரசம்) பொருந்தும்படி பாடல்களுக்கு இசைபுணர்க்க வல்லவனாய்த் திகழ்தல் வேண்டும்.

5) முதல் நடை, வாரம், கூடை, திரள் என்ற நான்கு வகை இசை இயக்கங்களையும், வட்டார மொழி வழக்காறுகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.

6) இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் அறிவும் பெற்றிருத்தல் வேண்டும். இவ்வாறு சிலம்பு இசையாசிரியனின் தகைமைகளைக் குறிப்பிடுகின்றது.
 

3.4.2 தண்ணுமை ஆசிரியன் தகைமை

    தண்ணுமை ஆசிரியன் தகைமைகளை இளங்கோ கூறியுள்ளார். தண்ணுமை என்பதனை முழவு என்றும் மத்தளம் என்றும் கூறுவர்.

1) தண்ணுமை ஆசிரியன் அனைத்துக் கூத்துக்கள், பாடல்கள், இசைகள் ஆகியவற்றின் கூறுபாடுகளையும் ஓசை நயத்தையும் அறிந்திருத்தல் வேண்டும்.

2) தாள அறிவும் தூக்குப் பற்றிய ஞானமும் பெற்றிருத்தல் வேண்டும்.

3) பாடல்களுக்கு ஏற்றவாறு வாசிக்க வேண்டும்.

4) யாழ், குழல், கண்டப்பாடல்களுடன் இணைந்து இசைக்க வேண்டும் .

5) குறியறிந்து கேட்போரின் செவிகளைக் கவர்தல் வேண்டும்.

6) கையின் தொழிலைக் கவின்பெறக் காட்டி, தண்ணுமையை இயக்குதல் வேண்டும்.

    தண்ணுமையை எந்தெந்த நிலையில், எந்த அளவில் இயக்க வேண்டும் என்பதனைத் தண்ணுமை ஆசிரியன் தகைமை மூலம் ஆசிரியர் கூறியுள்ளார்.

3.4.3 குழலோன் அமைதி

1) குரல்-இளி (ச-ப) என்னும் இரு நரம்புகளும் ஒரே தன்மையில் ஒலிக்கும் நுட்ப அறிவினை,     குழலோன் பெற்றிருத்தல் வேண்டும்.

2) இசைக்கும் பண்களின் சுரங்களில் குறைவு ஏற்படாமலும், அந்நிய சுரங்கள் வாராமலும் இசைக்கும் ஆற்றலைப் பெற்றிருத்தல் வேண்டும்.

3) பாடலின் ஓசைநிலை, பொருள் நிலை முதலிய அமைதிகளை நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.

4) பண்களின் இலக்கணம்,     தாள அமைதிகளையும் மத்தளவியல் நுட்பங்களையும் நன்கறிந்திருத்தல் வேண்டும்.

5) பாடலாசிரியனைப் போல் பாடல் அறிவு, சொல்லமைதி, எழுத்தோசைகள் ஆகியவற்றைத் தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும்.

6) இசைக்கலை நுட்பங்கள் அனைத்தும் அறிந்தவராக விளங்க வேண்டும்.

    இவ்வாறு குழலோன் தகைமைகள் அமைய வேண்டும் என்று சிலப்பதிகார அரங்கேற்று காதை குறிப்பிடுகின்றது.
 

3.4.4 யாழாசிரியன் அமைதி

1) யாழாசிரியன் பாலைத் திரிபு முறைகளைக் கற்றுத் தேர்ந்தவனாக இருத்தல் வேண்டும்.

2) ஏழிசைகளையும், பண்களையும், பண்நுட்பங்களையும் நன்கு யாழில் மீட்டிசைக்கும் திறம் பெற்றிருத்தல் வேண்டும்.

3) பண்ணோடு தாள     நுட்பம், இசை நுட்பங்கள் அறிந்திருத்தல் வேண்டும்.

4) நரம்புகளின் சுருதி மாறாமல் இயக்க     வேண்டும்.

5) பண்களின் இலக்கணம் தவறாமல் இசைக்க வேண்டும்.

6) பாடலின் பொருள், சொல், எழுத்தொலிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

    இவ்வாறு யாழாசிரியன் அமைதி பற்றிச் சிலம்பு கூறுகிறது.

    இசைப்பாடல்களின் இலக்கணம், இசை கூட்டும் முறை, இசைக்கருவிகள், ஆளத்தி வகைகள், தாளஇலக்கணப் பகுதிகள், யாழ் வகைகள், யாழ் உறுப்புகள் போன்ற இலக்கண அமைதிகள் சிலம்பில் இடம் பெற்றுள்ளன.
 

3.4.5 அடியார்க்கு நல்லார் உரை

    சிலப்பதிகார    உரையாசிரியர்களில்     அடியார்க்கு நல்லாரும் ஒருவராவார். இவர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டினர் ஆவார். இவருக்கு முன் எழுந்த அரும்பத உரையாசிரியரைத் தழுவி உரை கண்டுள்ளார். இவரது உரை மூலம் இசை,நாடக இலக்கண நூற்கள் பற்றியும், இசை நுட்பங்களையும் அறிந்துணர     முடிந்துள்ளது. இவர்     உரை மூலம் கண்டுணரப்பட்ட அரிய செய்திகள் பல. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

1) மிடற்றிசையைச் சாரீர வீணை என்று குறிப்பிட்டுள்ளார்.

2) இசைப்பாடல்களில் தேவபாணி பற்றிக் கூறியுள்ளார். இது முத்தமிழுக்கும் பொது. இயற்றமிழில் கொச்சக ஒரு போகாய் வரும். இது பெருந்தேவபாணி, சிறுதேவபாணியாகப் பிரியும் என்றார். இது இறைவனைப் புகழும் இசைப்பாடலாகும்.

3) யாழ், குழல் கருவிகளின் சிறப்பு, வகை, இசைக்கும் முறை பற்றிய கருத்துகள் நிரம்ப உள.

4) அக்காலத்தில் நிலவிய தோற்கருவிகளை அடுக்கிக் கூறியுள்ளார்.

5) பண்டைத் தமிழர்கள் பண்கள் அமைத்தலிலும் பாடுவதிலும் நுட்பமும் திறமும் உடையவர்கள் என்பதனை விளக்கியுள்ளார்.

6) வட்டபாலையையும் சோதிடத்தில்     காணப்படும் இராசிவட்டத்தையும் இணைத்து இசை நுட்ப விளக்கம் தந்துள்ளார்.