4.1 தஞ்சை மு.ஆபிரகாம் பண்டிதர்

     உ.வே.சாமிநாதையர் சிலப்பதிகாரத்தை    1892-யில் வெளியிட்டார். இந்நூல் வாயிலாகவும் இந்நூலுக்கு எழுந்த உரைகள் வாயிலாகவும் அருந்தமிழ்க் கலைச் செல்வங்கள் பற்றி ஆராய முற்பட்டனர் பலர். இவ்வகையில் இசைத்தமிழ் ஆய்வினைத் தொடங்கி வைத்த தலைமகனாக, தஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதர் விளங்கினார். இவர் எழுதி வெளியிட்ட கருணாமிர்த சாகரம் என்ற நூல் முன்னோடி நூலாக விளங்குகிறது.     இசைத்தமிழ்     ஆய்வினைத்    தொடங்கி வைத்ததோடு தமிழில் இசைப் பயிற்சி நூல்கள் இல்லை என்ற குறையை நீக்கும் பொருட்டு, தமிழில் பயிற்சிப் பாடல்கள் அடங்கிய கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற நூலையும் வெளியிட்டார். தஞ்சையில் இசைத்தமிழ் ஆய்வு மாநாடுகளை நடத்தி, இசைத்தமிழ் வளங்களையெல்லாம் உலகறியச் செய்தார்.

4.1.1 வாழ்வியல்

    திருநெல்வேலி சாம்பவார் வடகரையில் 2.8.1859 அன்று முத்துச்சாமி , அன்னம்மாளின் மகனாக     ஆபிரகாம் பிறந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுரண்டை என்ற ஊரில் உள்ள பள்ளியில் பயின்றார். பின்னர், திண்டுக்கல் நிர்மல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். அதே பள்ளியில் 1876-யில் ஆசிரியர் ஆனார். 1882 ஆம் ஆண்டு நஞ்சாங் குளத்தைச் சார்ந்தஞானவடிவு என்பாரைத் திருமணம் செய்து கொண்டார். 1883-ஆம் ஆண்டு தஞ்சைக்கு வந்தார். தஞ்சை நேப்பியர் மகளிர் பள்ளியில் ஆபிரகாமும், அவரது    மனைவியாரும் ஆசிரியராகப் பணியாற்றினர்.

    மருத்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், சுருளிமலை கருணானந்தர் என்ற சித்தர் மூலம் கொடிய பிணிகளை நீக்க வல்ல மருந்துகளைப் பற்றி அறிந்து அவற்றைத் தயாரித்தார். இதனால் ஆசிரியப் பணியை விட்டு விட்டு    மருத்துவராகச் செயல்பட்டார். சோதிடக்கலை வல்லுநராகவும், தலை சிறந்த விவசாயியாகவும், புகைப்பட நிபுணராகவும், இறையன்பராகவும், அச்சுக்கலை வளர்த்த வித்தகராகவும், இசைத் தமிழ் ஆய்வினைத் தொடங்கி வைத்தவராகவும், இயலிசைப் புலவராகவும் விளங்கினார். தஞ்சையில் சோதிட விமர்சின சபை, லாலி அச்சகம், கருணானந்தர் சஞ்சீவி மருந்து நிலையம்,கருணானந்த புரம் என்ற பண்டிதர் தோட்டம், சங்கீத வித்தியா மகாஜன சங்கம் என்ற அமைப்புகளை ஏற்படுத்திச் செயல்படுத்தினார்.அறுபது ஆண்டுக் காலம் வாழ்ந்து சாதனைகளைச் செய்த ஆபிரகாம் 31.8.1919-இல் இறைவனடி சேர்ந்தார். இவர் ஆற்றிய இசைத் தமிழ்ப் பணிகள் சிலவற்றைக் காண்போம்.

  • இசை மாநாடுகள்

    தஞ்சை மாநகரில் தனது சொந்தப் பொருட் செலவில் ஏழு இசை மாநாடுகளை ஆபிரகாம் நடத்தினார். சங்கீத வித்தியாலயாமகான சங்கம் என்ற அமைப்பினை ஏற்படுத்தி, 1912- ஆம் ஆண்டு முதல் 1916-ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுக் காலத்தில் ஏழு இசை மாநாடுகளை நடத்தினார். மருத்துவப் பணியின் மூலம் ஈட்டிய பொருளை இசைத் தமிழ் ஆய்விற்காகச் செலவழித்தார். இசைப் பேரறிஞர்கள், இசை ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் போன்ற பலர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாடுகள் மூலம் கண்டுணர்ந்த செய்திகளையெல்லாம் திரட்டி    ஆய்வு மேற்கொண்டு 1917-இல் 1346 பக்கங்கள் கொண்ட கருணாமிர்த சாகரம என்ற இசைத் தமிழ் ஆய்வு நூலைத் தந்தார்.

4.1.2 கருணாமிர்த சாகரம்

    “பொன்போற் சிறந்த சங்கீத சாஸ்திரத்தின் அடிப்படையில் வழங்கும் சுருதிகளைப் பற்றிய பல சந்தேகங்களை நீக்கித் தமிழ் மக்கள் வழங்கி வந்த இசைத்தமிழின் பல மேற்கோள்களையும், தற்காலத்தில் வழங்கி வரும் அனுபோகங்களையும், திட்டமான அளவையும் விளக்கிக் காட்டி இந்த நூலை எழுதி முடித்தற்கு வேண்டும் எல்லா நன்மைகளையும் செய்து உதவிய கருணானந்த முனிவர்க்கு இந்நூல் உரிமையாக்கப் பெற்றது” என்ற நிலையோடு இந்நூலை மு.ஆபிரகாம் எழுதி வெளியிட்டார். இந்நூலில் இசையியல் பற்றிய பல்வேறு செய்திகள் கூறப்பட்டுள்ளன.

அவை,

(1) சுரவியல் அல்லது நரம்பியல் (2) பண்ணியல் (இராகவியல்) (3) ஆளத்தியல் (ஆலாபனைக்குரிய நெறிமுறைகள்) (4) நான்கு நிலத்திற்குரிய நாற்பெரும் யாழ்கள் (பெரும் பண்கள்) (5) ஏழ் பெரும் பாலைகள் (6) பண்ணமைக்கும் முறை (7) இணை, கிளை, நட்பு, பகை நரம்புகள் பற்றியன. (8) இசைக் கருவியல் (9) இசைப் பாட்டியல் (10) செம்பாலை என்பது சங்கராபரணமே என்ற விளக்கம்

என்பன.

    சுருதி கணக்கியல் என்ற நூல் சுமார் 750 பக்கங்கள் கொண்டது. இந்நூல் நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது.

முதல் பாகம்     -
இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்
இரண்டாம் பாகம் -
22 சுருதிகள் பற்றியது
மூன்றாம் பாகம் -    
தென்னிந்தியாவில் வழங்கி வரும் இசைத் தமிழ்ச் சுருதிகள்
நான்காம் பாகம் -
கர்நாடக சங்கீதம் என்றழைக்கப்படும் இசைத் தமிழில் வழங்கி வரும் சுருதிகளின்கணக்கு.

4.1.3 இசைத் தமிழ்க் கல்வியாளர்

    இசை கற்கத்தொடங்கும் மாணவர்கள் பயிற்சிப் பாடங்கள் தமிழில் இல்லாத நிலையில் தெலுங்கு, கன்னடம்,வடமொழியில் உள்ள பயிற்சிப் பாடல்களையே பயின்றனர். இக்குறையைப் போக்க ஆபிரகாம் பண்டிதர் தமிழ் வழிப் பயிற்சி பெறும் பொருட்டு 96 தமிழ்ப் பாடல்களைக் கொண்ட கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற நூலை 1907-இல் வெளியிட்டார். கீதம், சுரதி, ஜதிசுவரம், வர்ணப் பாடல்களையெல்லாம் இயற்றினார். இசை விற்பன்னர்களின் வாய்ப்பாட்டு மூலமும், வீணை     என்ற இசைக்கருவியின்     மூலமும் இவை சரிபார்க்கப்பட்டன. இவ்வகையில் திருமணச் சடங்குகள் போன்ற விழாக்களில் பாடுவதற்குரிய ஊஞ்சல் பாட்டு, திருமணப் பாடல்களையும் படைத்தார். இன்னும் இப்பாடல்கள் திருமண விழாக்களின்போது பாடப்பட்டுவருகின்றன.

    இவர் படைத்த பிலரி இராக சுரஜதி,“வாரும் தேவ தேவா இங்கு வாரும் உமதடிமை மனமகிழ” என்பதாகும். இப்பாடலை    இவர    குடும்பத்தார்கள் இன்னும் பாடி வருகின்றனர். இவ்வகையில் சிறந்த இயலிசைப் புலவராகவும்,. இசைத் தமிழ்க் கல்வியாளராகவும் ஆபிரகாம் பண்டிதர் விளங்கினார்.

  • சுருதி ஆய்வு

கருணானந்த முனிவர் மூலம் சித்த மருத்துவத்தையும், இசை நுட்பங்களையும் அறிந்த ஆபிரகாம் மருத்துவ உலகில் தலை சிறந்துவிளங்கியது போல் இசை உலகிலும் தலை சிறந்து விளங்கினார். இவரின் சுருதிக் கோட்பாடு ஒப்பற்ற ஆய்வாகும். ஓர் இயக்கில் விளங்கும் சுர அலகுகள் 22 என்று பலர் கூறினர். இச்சுர முறைகளில் ஒழுங்குமுறை காணப்படவில்லை என்று நினைத்து, அதனை ஒழுங்குபடுத்தும் நிலையில் அலகுகள் 24 என்று கூறினார். இதனை அகில இந்திய அளவில் 20.3.1916 இல் கூடிய இசை ஆய்வு மாநாட்டில் தனது மகள்களான திருமதி. மரகதவல்லி துரைபாண்டியன், திருமதி கனகவல்லி துரைபாண்டியன் மூலம் பாடியும் வீணை மூலம் இசைத்தும் காண்பித்தார்.

4.1.4 மொழிபெயர்ப்பாளர்

    ஆபிரகாம் பண்டிதர் மேலை நாட்டு நூல்களில் காணப்படும் செய்திகள் பலவற்றைத் தமிழர் அறிந்துணரும் பொருட்டு மொழிபெயர்த்தும் தந்துள்ளார். இவையல்லாமல் தெலுங்கு மொழியில் உள்ள    தியாகராசருடைய கீர்த்தனைகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

தியாகராசர் கீர்த்தனை இராகம் பண்டிதர் மொழி பெயர்ப்பு
எந்தவேடுகோ சரஸ்வதி மனோகர சிந்தை தேர நீ
நன்னு கன்னுதல்லி சிந்து கன்னடா மண்ணுலக மீதில்
மருகேலரா ஜெயந்த ஸ்ரீ வரந்தரவே வா தேவா
நின்னு வினா நவரச கனடா என்றும் உனை நான் மறவேன்

4.1.5 கலைக் களஞ்சியத் தொகுப்பாளர்

     கருணாமிர்த சாகரம் என்ற நூலில் இசை விற்பன்னர்கள், இயலிசைப் புலவர்கள் வரலாறு பற்றிய செய்திகள் அறுபது பக்கங்களில் தந்துள்ளார்.அகர வரிசைப்படுத்தி உரைத்துள்ளார். இத்தகு அறிஞர் பெருமக்களைப் பற்றி ஒரு சேரத் தொகுத்துத் தந்த நூலாக இந்நூல் அமைந்துள்ளது.

    ஒரு பல்கலைக் கழகம் ஆற்ற வேண்டிய பணியை ஆபிரகாம் தனிமனிதனாக நின்று மேற்கொண்டார். இசைத் தமிழ் இயக்க ஆய்வின் தலைமகனாவும், இசைக் களஞ்சிய முன்னோடியாகவும், இயலிசைப் புலவராகவும்,    இசை மாநாடுகளைக் கூட்டிய தலைமகனாகவும், தமிழ் மூலம் இசைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாழ்ந்த தமிழன்பராகவும் விளங்கினார். இவரைத் தொடர்ந்து இவர் குடும்பத்தார் இசைத் தமிழ்ப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.     ஆபிரகாம்     பண்டிதரின்    மகன் டாக்டர்.ஆ.வரகுணபாண்டியன் பாணர்கைவழி யாழஎன்ற சிறந்த ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். இவரது பேரன் பேராசிரியர் தனபாண்டியன் இசைத் தமிழ் வரலாற்றுத் தொகுதிகளையும்,    புதிய இராகங்கள், இராகங்களின் நுண்ணலகுகள் போன்ற நூல்களைப் படைத்ததோடு சிறந்த இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.